முரசொலி தலையங்கம்

““டிஸ்மிஸ் - சஸ்பெண்ட்” இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையா?” - மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!

அதானியைப் பற்றிப் பேசினால் டிஸ்மிஸ், நாடாளுமன்ற அச்சுறுத்தல் பற்றிப் பேசினால் சஸ்பெண்ட் – இவைதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையாக இருக்கிறது.

““டிஸ்மிஸ் - சஸ்பெண்ட்” இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையா?” - மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடாளுமன்றம் எதற்கு?

நாட்டைப் பற்றிப் பேசுவதற்குத்தான் ‘அனுமதிக்க மாட்டேன்’ என்கிறார்கள் என்றால், நாடாளுமன்றத்தைப் பற்றிப் பேசுவதற்கே நாடாளுமன்றத்தில் அனுமதி இல்லை. பின்னர், நாடாளுமன்றம் எதற்கு? மியூசியமா அது?

“நாடாளுமன்றத்தில் நேற்று வீசப்பட்டது விஷ வாயுவாக இருந்திருக்குமானால் பலரும் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று காங்கிரசு உறுப்பினர் அதிரஞ்சன் சவுத்திரி சொல்லி இருக்கிறார். இப்படி நடந்திருந்தால் என்ன ஆகி இருக்கும்?

கடந்த 13 ஆம் தேதியன்று நாடாளுமன்றத்துக்குள் வந்து புகைக் குண்டு வீசி இருக்கிறார்கள் இருவர். மற்ற இரண்டு பேர் நாடாளுமன்றத்துக்கு வெளியில் வீசி இருக்கிறார்கள். இப்படி வீசியவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் ஓடிப் போய் பிடித்தார்களே தவிர பாதுகாவலர்கள் அல்ல. ‘இது ஆபத்தான குண்டு அல்ல’ என்று விளக்கம் கொடுக்கிறார் சபாநாயகர் ஓம் பிர்லா. இதுதான் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்துக்கு உள்ள பாதுகாப்பு ஆகும்.

““டிஸ்மிஸ் - சஸ்பெண்ட்” இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையா?” - மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!

நாடாளுமன்றக் கட்டடத்தையே பாதுகாக்கத் தவறியவர்கள், இந்திய நாட்டை எப்படிப் பாதுகாப்பார்கள் என்ற கேள்வியால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைமையும் தலை கவிழ்ந்து கிடக்கிறார்கள். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மணி நேரத்தில், எதுவுமே நடக்காதது மாதிரி நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டும் இருந்தார்கள்.

மறுநாள் 14ஆம் தேதியாவது நாடாளுமன்றத்தில் உரிய விளக்கம் தரப்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ‘கடப்பாறையை விழுங்கிவிட்டு கசாயம் குடித்தால் போதும்’ என்பதைப் போல உட்கார்ந்து கொண்டது ஒன்றிய அரசு.

நாட்டின் நாடாளுமன்றத்தில் புகைக் குண்டு வீசப்பட்டது குறித்து நாடாளுமன்றம் விசாரிக்க வேண்டாமா? இது தொடர்பாக உறுப்பினர்கள் கேள்வி கேட்க வேண்டாமா? நேரடியாகப் பார்த்த உறுப்பினர்கள் அதனைச் சுட்டிக் காட்ட வேண்டாமா? இது தொடர்பான விசாரணைகளை உள்துறை அமைச்சர் விளக்க வேண்டாமா? - இவை எதுவுமே நடக்கவில்லை.

தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைவரும், ‘நாடாளுமன்றத்துக்குள் நடந்த புகைக்குண்டு வீச்சு சம்பந்தமாக விவாதம் நடத்த வேண்டும். இறுதியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும்’ என்று கோரிக்கை முழக்கம் எழுப்பினார்கள். 2 பேர் நோட்டீஸ் கொடுத்தால் கூட விவாதம் நடத்துவார்கள். ஆனால் 28 பேர் நோட்டீஸ் கொடுத்தும் விவாதிக்கவில்லை.

““டிஸ்மிஸ் - சஸ்பெண்ட்” இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையா?” - மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!

“உரிய விசாரணை நடத்தி வருவதால் விவாதம் தேவை இல்லை” என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி சொன்னார். என்ன விசாரணை நடைபெறுகிறது என்பதையாவது நாடாளுமன்றத்துக்குச் சொல்ல வேண்டாமா? “பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் வரை பிரச்சினை எழுப்புவோம்” என்று எதிர்க்கட்சிகள் சொன்னார்கள். அதில் உறுதியாக இருந்தார்கள். பிரதமரும், உள்துறை அமைச்சரும் அவைக்கே வரவில்லை.

நாடாளுமன்றத்துக்குள் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை முழக்கமிட்ட உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, சேலம் பார்த்திபன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், பிரதாபன், ஹபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ், வி.கே.ஸ்ரீகண்டன், பென்னி பெஹனான், முகமது ஜாவேத் ஆகியோரும், மார்க்சிஸ்ட் உறுப்பினர்களான நடராஜன், சு.வெங்கடேசன் ஆகியோரும், இந்தியக் கம்யூனிஸ்ட் உறுப்பினரான சுப்பராயனும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். மொத்தம் 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் தி.மு.க. உறுப்பினரான சேலம் பார்த்திபன், அன்றைய தினம் அவைக்கு வரவில்லை. அவரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டார்கள். ‘அவைக்கே வராதவர் எப்படி முழக்கம் எழுப்பி இருக்க முடியும்?’ என்று தி.மு.க. எம்.பி.க்கள் கேட்டதும், பார்த்திபன் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது. ‘அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு’ என்று விளக்கம் அளித்தார் அமைச்சர் பிரகலாத் ஜோஷி. இவர்களுக்கு உறுப்பினர்களையும் அடையாளம் தெரியவில்லை, குண்டு போடுபவர்களையும் அடையாளம் தெரியவில்லை.

புகைக் குண்டு வீசியவர்களுக்கு அனுமதி பாஸ் கொடுத்தவர் பா.ஜ.க. எம்.பி. அவர் சபைக்குள் இருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அது பற்றி கேள்வி எழுப்பிய உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள். “குற்றவாளிகளுக்கு பாஸ் வழங்கிய எம்.பி. மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார். அதற்கு எந்தப் பதிலும் இல்லை.

““டிஸ்மிஸ் - சஸ்பெண்ட்” இதுதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையா?” - மோடி அரசை வெளுத்து வாங்கிய முரசொலி!

“மஹூவா மொய்த்ரா பிரச்சினையை விட, தீவிரவாதிகளுக்கு பா.ஜ.க. எம்.பி., பிரதாப் சிம்பா, பாஸ் வழங்கப் பரிந்துரைத்தது கடுமையான விதி மீறல். தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது” என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தர்கள். பாஸ் வழங்கியது குறித்து பா.ஜ.க. எம்.பி. இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றப் பாதுகாப்பில் மிகப்பெரிய குளறுபடி உள்ளது. நாடாளுமன்றப் பாதுகாப்புப் பிரிவு இணை இயக்குனர் பதவி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காலியாக இருக்கிறது. பாதுகாப்புப் பணியில் 301 காவலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 176 பேர் மட்டுமே பணியில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் பாதுகாப்புக்காக புதிய நியமனங்கள் நடத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அவ்வளவுதான்.

நாடாளுமன்றத்தில் புகைக்குண்டு போட்ட மனோரஞ்சன் என்பவர், ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும் பார்வையாளர் பாஸ் பெற்று நாடாளுமன்றம் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உள்ளே புகுந்தவர்கள் இரண்டு பேர் மட்டுமல்ல, வெளியே இவர்களது ஆட்கள் அதிகம் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைப் பற்றி எல்லாம் ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டாமா? இதைக் கேள்வி கேட்பது தவறா?

அதானியைப் பற்றிப் பேசினால் டிஸ்மிஸ், நாடாளுமன்ற அச்சுறுத்தல் பற்றிப் பேசினால் சஸ்பெண்ட் – இவைதான் பா.ஜ.க.வின் ஜனநாயகப் பாதையாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories