முரசொலி தலையங்கம்

2015ல் எதையும் செய்யாமல் ஓடிவிட்டு இப்போது பொய்களை விதைக்கிறது அ.தி.மு.க : உண்மையை சொல்லும் முரசொலி!

முதலமைச்சரின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டதாக ஆட்சியும் கட்சியும் இருப்பதால்தான் இரண்டு தரப்பும் குதிரை வேகத்தில் செயல்பட்டு, இயற்கைப் பேரிடரை வென்று காட்டி வருகிறது.

2015ல் எதையும் செய்யாமல் ஓடிவிட்டு இப்போது பொய்களை விதைக்கிறது அ.தி.மு.க : உண்மையை சொல்லும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (09-12-2023)

2015 ஆம் ஆண்டும் 2023 ஆம் ஆண்டும் !

2015ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதையே அறியாமல் - 2023 ஆம் ஆண்டையும் அதனையும் ஒப்பிட்டு சிலர் உளறி வருகிறார்கள்.

•2015 பெருவெள்ளத்தின்போது பெய்த மழையளவு 33 செ.மீ – 2023 ஆம் ஆண்டு இரண்டு நாட்களில் மட்டும் 47 செ.மீ. மழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனை அவர்கள் முதலில் உணர வேண்டும்.

2015இல் மக்களுக்கு முன்னறிவிப்புகள் ஏதும் வழங்கப்படவில்லை. மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது. மழை நீர்க் கால்வாய்கள் சரி செய்யப்படாத காரணத்தினால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. பத்து நாட்கள் வரை நீர் வடியவில்லை. தொலைத் தொடர்பு முழுமையாகத் துண்டாகியது. சென்னை முழுவதுமாகஸ்தம்பித்தது. பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு கடுமையாக நிலவியது. பல இடங்களில் பத்து நாட்களுக்குப் பிறகே மின் இணைப்பு வழங்கப்பட்டது. 289 பேர் உயிரிழந்தனர். 23.25 லட்சம் வீடுகள் மூழ்கின. அமைச்சர்களோ முதலமைச்சர் ஜெயலலிதாவோ களத்திற்கு வரவில்லை.

2015ல் எதையும் செய்யாமல் ஓடிவிட்டு இப்போது பொய்களை விதைக்கிறது அ.தி.மு.க : உண்மையை சொல்லும் முரசொலி!

2015-ஆம் ஆண்டு சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட்ட போது சென்னையின் மேயராக இருந்தவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சைதை துரைசாமி. அப்போது அவர் செயல்படாமல் முடங்கிக் கிடந்தார். வெள்ளச்சேதத்தைப்பார்வையிடச் சென்ற மேயர் சைதை துரைசாமியை ‘டைம்ஸ் நவ்’ டிவி நிருபர் பேட்டியெடுக்க முற்பட்ட போது சைதை துரைசாமி பயந்து ஓட்டம் பிடித்தார்.

“சார்.. மழை வெள்ளச் சேதத்தில் சென்னை மாநகராட்சி தோல்வியடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, அதுபற்றி ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்கள்” என அந்த நிருபர் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போது மேயர் சைதை துரைசாமியோ கேமராவைவிட்டு திரும்பி நின்றுகொண்டார், “ப்ளீஸ்... என் ‘நிலைமையை’ புரிந்து கொள்ளுங்கள்” என்று நிருபரைப் பார்த்துக் கெஞ்சி விட்டு கடைசி ஓட்டம் பிடித்தார். இப்போதைய சென்னை வெள்ளத்தைப் பாருங்கள். இப்போதைய மேயர் ப்ரியா, முழுக்க முழுக்க களத்தில் நிற்கிறார்.

2015 சென்னை வெள்ளத்தில் தன்னார்வலர்கள் அளித்த நிவாரணப் பொருட்களில் எல்லாம் ஜெயலலிதாவின் படம் போட்ட ‘ஸ்டிக்கர்’களை ஒட்டி அரசே வழங்கியது போல தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் அ.தி.மு.க.வினர். அந்த ஏமாற்றுக்காரர்கள்தான் இப்போதை மழை வெள்ளத்திலும் பொய்களை விதைக்கிறார்கள்.

2015ல் மீனம்பாக்கம் விமான நிலையம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருந்தது. சென்னை நகரம் ஒட்டுமொத்தமாக இரண்டு வாரங்கள் முடக்கப்பட்டது. தரைவழியாகச் சேதங்களைப் பார்வையிட முதலமைச்சர் ஜெயலலிதா வரவில்லை. பிரதமர் மோடி வந்தபோது ஹெலிகாப்டரில் தான் அவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா பார்த்தார். ஜெயலலிதாவின் தொகுதிதான் சென்னையிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளான இடம். அங்குள்ள மக்கள் அரசு நிவாரண உதவிகளை நான்கு நாட்களுக்குப் பிறகுதான் வாங்கினார்கள்.

2015 பெரு வெள்ளத்திற்குப் பிறகு ஐந்தரை ஆண்டுகளை ஆண்டது அ.தி.மு.க. அரசுதான். அந்தப் படிப்பினையை வைத்து எதையும் செய்யவில்லை.

ஆனால் 2023 ஆம் ஆண்டான இப்போது அனைத்துக்கும் தயார் நிலையில் இருந்தது தமிழ்நாடு அரசு. ஐந்து நாட்களுக்கு முன்பு இருந்தே முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டுக் கொண்டு இருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். மழை நீர் வடிகால் பணிகள் திட்டமிடப்பட்டு அதில் 60 முதல் 80 விழுக்காடு பணிகள் முடிவடைந்து இருந்தன. இரண்டரை ஆண்டுகளில் 3,031 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால்கள், 33 மைக்ரோ ஏரிகள், 16 இதர ஏரிகள் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மின்கம்பங்கள், ட்ரான்ஸ்பார்மர்கள், பில்லர் பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் மின்சார வாரியம் இருந்தது.

2015ல் எதையும் செய்யாமல் ஓடிவிட்டு இப்போது பொய்களை விதைக்கிறது அ.தி.மு.க : உண்மையை சொல்லும் முரசொலி!

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ‘அலெர்ட்’ தரப்பட்டது. மழை பாதிப்பு மாவட்டங்களுக்கு மழைக்கால பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டனர்.

வரலாறு காணாத பெருமழை பெய்த போதும் சூழல் முழுமையாகக் கட்டுப்பாட்டில் இருந்தது. புயலால் கடல் கொந்தளிப்பு அதிகம் இருந்ததால் மழைநீர் கடலுக்குள் சென்று கலக்க முடியாத சூழலில் தேங்கியது. மழை நின்ற ஒன்றிரண்டு மணி நேரத்தில் பல இடங்களில் நீர் வடியத் தொடங்கியுள்ளது. மழையில் சாய்ந்த மரங்கள் ஒரு நாள் இரவிலேயே முழுமையாக அகற்றப்பட்டுள்ளன. படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இரண்டாவது நாளில் முழுமையாக அனைத்துப் பகுதிகளுக்கும் மின்சாரம் தரப்பட்டு விட்டது.

மொத்த அமைச்சரவையும் களத்தில் நிற்கிறது. அனைத்து அரசுத் துறைகளும் களத்துக்கு வந்துவிட்டன. 5000 தூய்மைப் பணியாளர்கள் வெளியூர்களில் இருந்து சென்னை வந்திருக்கிறார்கள். பல இடங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுவிட்டனர். பால் வழங்கல் ஒரே நாளில் சரி செய்யப்பட்டது. வெளிமாநகரங்களில் இருந்தும் பால் பாக்கெட்டுகள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தினமும் – பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து வருகிறார். உதவிகளைச் செய்து வருகிறார். அமைச்சர்கள், மக்களோடு மக்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் களத்தில் நிற்கிறார்கள். இவை எதையும் 2015 பார்த்திருக்க முடியாது. அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்குமான வித்தியாசம் இதுதான்.

முதலமைச்சரின் கண்ணசைவுக்குக் கட்டுப்பட்டதாக ஆட்சியும் கட்சியும் இருப்பதால்தான் இரண்டு தரப்பும் குதிரை வேகத்தில் செயல்பட்டு, இயற்கைப் பேரிடரை வென்று காட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories