முரசொலி தலையங்கம்

“நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் போதிக்கத் தேவையில்லை..” - ஆளுநருக்கு முரசொலி பதிலடி !

கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஊர்தியை பா.ஜ.க. அரசு மறுத்தது.

“நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் போதிக்கத் தேவையில்லை..” - ஆளுநருக்கு முரசொலி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தி.மு.க.வும் விடுதலைப் போராட்ட வீரர்களும் - 1

விடுதலைப் போராட்ட வீரர்களை திராவிட இயக்கம் கொண்டாடவில்லை என்பது போன்ற பொய்ப் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார் கிண்டி மாளிகை ஆளுநர் ஆர்.என்.ரவி. இவருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பற்றியும் தெரியாது. விடுதலைப் போராட்டம் பற்றியும் தெரியாது. தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவராக தன்னை நினைத்துக் கொண்டு நித்தமும் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் ஆர்.என்.ரவி.

கடந்த ஆண்டு இந்தியக் குடியரசு தின அணிவகுப்பில் இடம் பெறுவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட ஊர்தியை பா.ஜ.க. அரசு மறுத்தது. இந்திய விடுதலை வேள்விக்காக விறகு சுமந்த மருது சகோதரர்களும், இராணி வேலு நாச்சியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், மகாகவி பாரதியாரும்தான் அதில் இடம் பெற்றிருந்தார்களே தவிர, விடுதலைப் போராட்டத்துக்குத் தொடர்பில்லாத யாரும் இடம் பெறவில்லை. ‘இவர்கள் யார்?’ என்று அன்று அதிகாரிகள் கேட்டதாக டெல்லியில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ்களே செய்திகள் வெளியிட்டன. “இவ்விஷயத்தில் பிரதமர் உடனடியாகத் தலையிட்டு, விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். “தமிழ்நாடு அலங்கார ஊர்தி தொடர்பாக, மாநில அதிகாரிகள் 3 முறை குழுவிடம் நேரில் சென்று விளக்கம் அளித்தனர். திருத்தங்கள் செய்து தரப்பட்ட 7 மாதிரிகளையும் ஒன்றிய அரசின் குழுவினர் மறுத்ததை ஏற்க முடியவில்லை. அதுவும் 4வது சுற்று கூட்டத்திற்கு தமிழக அதிகாரிகளை அழைக்காமலேயே குடியரசு தின அணிவகுப்புப் பட்டியலிலிருந்து பெயரை நீக்கியிருப்பது வேதனை தருகிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார். அப்போதும் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் முதலமைச்சர் அவர்கள் இரண்டு முக்கியமான முடிவுகளை எடுத்தார். இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் உருவ மாதிரிகளை இந்திய பாதுகாப்புத் துறையின் உயர்நிலைக்குழு கவனத்தில் கொள்ளாத நிலையில், அந்தத் தலைவர்களின் விடுதலை வேட்கையைப் பறைசாற்றும் அலங்கார ஊர்தி தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இடம்பெறும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். இந்த அலங்கார ஊர்தி தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இந்த ஊர்தி கடந்த ஆண்டில் வலம் வந்தது. அனைத்து ஊர்களிலும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை எழுச்சியுடன் பறை சாற்றுவதற்கான களம் தமிழ்நாட்டில் அமைந்தது.

“நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் போதிக்கத் தேவையில்லை..” - ஆளுநருக்கு முரசொலி பதிலடி !

இந்த ஆண்டுக்காக குடியரசு தின அணிவகுப்பில் அருந்தமிழ் ஒளவை மூதாட்டி, வீரமங்கை வேலுநாச்சியார், சமூகச் சீர்திருத்த திராவிடத் தாய் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம், சமூகச் சீர்திருத்த முதல் மருத்துவர் முத்து லட்சுமி, இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, நாட்டியக் கலைஞர் பால சரசுவதி, இன்றும் வாழும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் - ஆகிய ஏழு முகங்களை தமிழ்நாட்டின் முகங்களாக எடுத்துக் காட்டியது தமிழ்நாடு. இவை எல்லாம் ஆளுநருக்குத் தெரியுமா?

நாட்டுப் பற்றில் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது.

* சீன நாட்டால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட போது 1962 ஆம் ஆண்டு, திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டு, இந்திய நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்று அறிவித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

* 1971ஆம் ஆண்டு இந்தியாவைப் பாகிஸ்தான் அச்சுறுத்தியபோது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாகிஸ்தான் படையெடுப்பு கண்டனத் தீர்மானம் போட்டவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

* 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களிடம் நாட்டுப் பாதுகாப்புக்காக ஆறுகோடி ரூபாய் நிதி வழங்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள். அன்றைய தினம் அனைத்து மாநிலங்களும் வழங்கிய தொகை மொத்தம் 25 கோடி. அதில் 6 கோடியை வழங்கியது தி.மு.க. அரசு.

* அந்தப் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு நிதியும் நிலமும் வழங்கிய அரசு, கலைஞரின் அரசு.

* 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின் போது அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் மூன்று தவணைகளாக மொத்தம் 50 கோடி ரூபாய் வழங்கிய அரசு, முதல்வர் கலைஞரின் அரசு.

எனவே நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் எங்களுக்குப் போதிக்கத் தேவையில்லை.

“நாட்டுப்பற்றை புதிதாக இங்கு வந்து யாரும் போதிக்கத் தேவையில்லை..” - ஆளுநருக்கு முரசொலி பதிலடி !

* வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு இன்று கோட்டை அமைந்திருக்கிறது என்றால், அதனை அமைத்தவர் முதல்வர் கலைஞர். கட்டபொம்மன் பிறந்தநாளை ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாட உத்தரவிட்டவரும், அரசுப் பதிவேட்டில் பாஞ்சாலங்குறிச்சி என்ற பெயரைப் பொறித்தவரும் முதல்வர் கலைஞரே. வீரபாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு வழங்கப்பட்டு வந்த பென்ஷன் 1952 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. அதனை 1969 ஆம் ஆண்டு திரும்ப வழங்கியவர் முதல்வர் கலைஞர்.

* வ.உ.சி. என்ற பெயருக்கு சிறப்பான விளக்கம் அளித்தவர் கலைஞர் அவர்கள்.

வ - வழக்கறிஞர்

உ - உரிமைக்காகப் போராடிய, வாதாடிய வழக்கறிஞர்

சி - உரிமைக்காக வாதாடிச் சிறை சென்ற வழக்கறிஞர் - என்று விளக்கம் அளித்தார்.

கழக ஆட்சியில் 1968 ஆம் ஆண்டு இரண்டாம் உலகத் தமிழ்மாநாடு நடத்தப்பட்டபோது தலைநகர் சென்னையில் வைக்கப்பட்ட பத்துச் சிலைகளில் ஒன்று வ.உ.சிதம்பரனார் சிலை. கோவைச் சிறையில் இருந்தபோது செக்கு இழுக்க வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார் வ.உ.சி. அந்த செக்கை நினைவுச் சின்னமாக ஆக்கியவர் முதல்வர் கலைஞர் அவர்கள்.

1972 ஆம் ஆண்டு வ.உ.சி.யின் நூற்றாண்டு விழாவை நாடு போற்றும் அளவில் மிகச்சிறப்பாகக் கொண்டாடியவர் முதல்வர் கலைஞர். அதே ஆண்டுதான் இந்திய நாடும் தனது 25 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. இரண்டையும் இணைத்து தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு சிலை அமைத்தவர் முதல்வர் கலைஞர்.

* எட்டையபுரத்தில் பாரதியார் வீட்டை அரசு சார்பில் விலைக்கு வாங்கி அதனை நினைவுச் சின்னம் ஆக்கியவர் முதல்வர் கலைஞர். 12.5.1973 அன்று, அன்றைய அமைச்சர் சி.பா. ஆதித்தனார் தலைமையில் நடந்த விழாவில் திறந்து வைத்தவர் முதல்வர் கலைஞர்.

* பாரதியாரின் நண்பர் பரலி சு.நெல்லையப்பர் குடும்பத்துக்கு அரசு நிதி உதவி வழங்கியவர் முதல்வர் கலைஞர். இவை அனைத்தையும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே செய்து விட்டது கழகம்.

- தொடரும்

முரசொலி தலையங்கம்

27.10.2023

banner

Related Stories

Related Stories