முரசொலி தலையங்கம்

பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க : இதுதான் மோடியின் பாரதம் - முரசொலி கடும் தாக்கு!

கார்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வதும், கோடிக்கணக்கான மக்களுக்கு வறுமையைப் பரிசளிப்பதும் தான் மோடியின் பாரதம்.

பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க : இதுதான் மோடியின் பாரதம் - முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-10-2023)

பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க

''நாட்டில் வறுமை ஒழியும் வரை ஓயமாட்டோம்" என்று வாயால் வடை சுட்டுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. மத்தியப்பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதனால் அந்த மாநிலத்தில் பள்ளி ஆண்டு விழாவில் எல்லாம் பிரதமர் கலந்து கொள்கிறார். குவாலியர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்னால் பேசி இருக்கிறார் பிரதமர்.

''பாரதத்தில் இருந்து வறுமையை ஒழிப்பது இன்றியமையாதது. அந்த நேசத்துக்குரிய இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய மாட்டோம்" என்று அந்தப் பள்ளி விழாவில் பேசி இருக்கிறார் பிரதமர்.

2014 ஆம் ஆண்டு பிரதமர் ஆனதும் பேசி இருக்க வேண்டியதை, 2023 இல் பிரதமர் நாற்காலியில் இருந்து இறங்கப் போகும் போது சொல்லி இருக்கிறார்.

இந்த ஒன்பது ஆண்டு காலம் இந்திய நாட்டின் பிரதமராக இருந்தவர் அவர் தான். பட்டினியை ஒழிக்க என்ன செய்தார்? இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து - அந்த இரண்டாவது முறையும் முடியப் போகும் போது, பட்டினிக்கு எதிராகப் பேசி இருக்கிறார் பிரதமர்.

சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு புள்ளிவிபரம் வெளியானது. கடந்த ஒன்பது ஆண்டு கால மோடி ஆட்சியில் இந்தியாவில் பட்டினி அதிகரித்துள்ளது என்பது அந்த புள்ளிவிபரம் ஆகும். உலகப் பட்டினி குறிப்பீட்டில் (Global Hunger Index) இந்தியா இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான இடத்தை அடைந்துள்ளது. ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 125 நாடுகளில் 111 ஆவது இடத்தை பெற்றுள்ளது மோடியின் இந்தியா.

'இந்தியா' என்று சொன்னால் அவர்களுக்கு பிடிக்காது. அதனால் மாற்றிச் சொல்லுவோம்... ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 125 நாடுகளில் 111 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது மோடியின் பாரதம். 125 நாடுகளில் 28.7 என்ற புள்ளிகளை மட்டுமே மோடியின் பாரதம் பெற்றுள்ளது.

பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க : இதுதான் மோடியின் பாரதம் - முரசொலி கடும் தாக்கு!

அரசியலில் மிக மோசமான நிலையில் உள்ள நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகள் எல்லாம் இந்தியாவை விட நன்றாக இருக்கின்றன. பாகிஸ்தான் 102 ஆவது இடத்திலும், வங்கதேசம் 81 ஆவது இடத்திலும், நேபாளம் 69 ஆவது இடத்திலும், இலங்கை 60 ஆவது இடத்திலும் இருக்கிறது. மோடியின் பாரதம், 111 ஆவது இடத்தில் இருக்கிறது.

இவை ஏதோ காலம் காலமாக இருக்கும் நிலைமை அல்ல. மோடியின் ஆட்சிக்குப் பிறகுதான் நிலைமை மோசம் ஆகி இருக்கிறது.

2011 ஆம் ஆண்டு 122 நாடுகளில் இந்தியா 67 ஆவது இடம்

2012 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 65 ஆவது இடம்

2013 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 63 ஆவது இடம்

2014 ஆம் ஆண்டு 120 நாடுகளில் 55 ஆவது இடம் - என இந்தியாவில் பட்டினிக் குறியீடு இருந்தது. 2014 ஆம் ஆண்டு மோடி, இந்தியாவின் பிரதமராகிறார். அதன்பிறகு என்ன ஆனது பாருங்கள்...

2015 ஆம் ஆண்டு 117 நாடுகளில் 80 ஆவது இடம்

2016 ஆம் ஆண்டு 118 நாடுகளில் 97 ஆவது இடம்

2017 ஆம் ஆண்டு 119 நாடுகளில் 100 ஆவது இடம்

2018 ஆம் ஆண்டு 132 நாடுகளில் 103 ஆவது இடம்

2019 ஆம் ஆண்டு 117 நாடுகளில் 102 ஆவது இடம்

2020 ஆம் ஆண்டு 107 நாடுகளில் 94 ஆவது இடம்

2021 ஆம் ஆண்டு 116 நாடுகளில் 101 ஆவது இடம்

2022 ஆம் ஆண்டு 121 நாடுகளில் 107 ஆவது இடம்

2023 ஆம் ஆண்டு 125 நாடுகளில் 111 ஆவது இடம் - என இந்தியாவின் பட்டினிக் குறிப்பீட்டில் மோடியின் பாரதம் சரிந்து கொண்டே வந்துவிட்டது.

குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை வைத்து இதனைக் கணக்கீடு செய்கிறார்கள். இந்தியாவில் 22 கோடிப் பேர் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா.அறிக்கை கடந்த ஆண்டு கூறியது. பீகார், ஜார்கண்ட், மேகாலயா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம், ஒடிசா, சத்தீஸ்கர், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வறுமையும் ஏழ்மையும் அதிகமாக உள்ளது.

பட்டினியை உருவாக்கிய பா.ஜ.க : இதுதான் மோடியின் பாரதம் - முரசொலி கடும் தாக்கு!

சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளனர். இந்தியாவின் கிராமப்புறங்களில் வாழும் மொத்த மக்கள்தொகையில், 25.7% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர், நகர்ப்புறங்களில், 13.7% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர்.

இவை அனைத்தையும் மறைத்து கடந்த ஆண்டு ஒன்றிய நிதி ஆயோக் ஒரு அறிக்கையை கொடுத்தது. 'வறுமை இல்லாத நாடாக 2022ஆம் ஆண்டு இந்தியா உருவாகும்” என நிதி ஆயோக் அறிக்கை நம்பிக்கை தெரிவித்தது. அரசுக்கு ஆலோசனை கூறும் உயர் அமைப்பான நிதி ஆயோக், ‘2022-ஆம் ஆண்டில் இந்தியா’ என்ற தலைப்பிடப்பட்ட அந்தத் தொலைநோக்கு அறிக்கையில், ‘உலகின் முன்னணிப் பொருளாதார நாடாக இந்தியா வளரும்; இந்தியாவில் நிலவும் வறுமை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழியும்; அதேபோல, 2022-ஆம் ஆண்டுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாத இந்தியாவாக மாறும்’ என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 'சர்க்கரை' என்று எழுதினால் அந்த தாள் இனிக்குமா?

ஆனால் உண்மையான நிலைமை என்ன என்பது இப்போது அம்பலமாகி விட்டது. கார்பரேட் கம்பெனிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்வதும், கோடிக்கணக்கான மக்களுக்கு வறுமையைப் பரிசளிப்பதும் தான் மோடியின் பாரதம்.

banner

Related Stories

Related Stories