முரசொலி தலையங்கம்

பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : “'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிகிறது” - முரசொலி !

பா.ஜ.க. ஆட்சிக்கு அகில இந்திய அளவில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான அறிகுறி அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரத் தொடங்கி இருக்கிறது. இதோ காஷ்மீரும் வழிமொழியத் தொடங்கி இருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : “'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிகிறது” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காஷ்மீரும் வழிமொழிகிறது!

பா.ஜ.க. ஆட்சிக்கு அகில இந்திய அளவில் முற்றுப்புள்ளி வைப்பதற்கான அறிகுறி அனைத்து மாநிலங்களில் இருந்தும் வரத் தொடங்கி இருக்கிறது. இதோ காஷ்மீரும் வழிமொழியத் தொடங்கி இருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பல்வேறு இடைத் தேர்தல்களில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அது. உத்தரப்பிரதேச மாநிலம் கோசி தொகுதியை சமாஜ்வாதி கட்சியும், கேரள மாநிலத்தில் உள்ள புதுப்பள்ளி தொகுதியை காங்கிரஸ் கட்சியும், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள துப்குரி தொகுதியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தும்ரி தொகுதியை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவும் கைப்பற்றியது. காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகியவை 'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சிகள் ஆகும்.

கடந்த மே மாதம் நடந்த கர்நாடக மாநிலத் தேர்தலில் பா.ஜ.க.தோற்றது. கடந்த ஏழு ஆண்டு காலத்தில் பல்வேறு மாநில சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் தோல்வி, கேரளாவில் தோல்வி, பீகாரில் தோல்வி, மேற்கு வங்கத்தில் தோல்வி, ஜார்கண்ட் மாநிலத்தில் தோல்வி, ஒடிசாவில் தோல்வி, சட்டீஸ்கரிலும் தோல்வி, தெலுங்கா னாவில் தோல்வி, ஆந்திராவில் தோல்வி, பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு முறை தோல்வி, டெல்லியில் இரண்டு முறை தோல்வி, ராஜஸ் தானில் தோல்வி – என சட்ட மன்றத் தேர்தல்களில் தோற்ற கட்சிதான் பா.ஜ.க. இப்படி தோற்றுக் கொண்டே வரும் கட்சியான பா.ஜ.க. - கடந்த வாரம் காஷ்மீரிலும் தோற்றுள்ளது.

லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில், 'இந்தியா' கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. 1 இடத்தை மட்டும் வெற்றி பெற்று பா.ஜ.க. படுதோல்வியடைந்துள்ளது.

பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : “'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிகிறது” - முரசொலி !

லடாக் - கார்கில் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சிலுக்கு கடந்த 4ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. அதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்த முள்ள 30 இடங்களில் 26 இடங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில், காங்கிரஸ் 10, தேசிய மாநாட்டு கட்சி 12 இடங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளன. அதாவது, 'இந்தியா' கூட்டணியானது 22 இடங்களைக் கைப்பற்றி உள்ளது.

17 இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க. ஒரே ஒரு இடத்தை மட்டுமே பெற்று 16 இடங்களில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்த தாமதம் செய்து வருவதாக இந்தியா கூட்டணி புகார் தெரிவித்து வரும் நிலையில், இந்த லடாக் தன்னாட்சி மலைமேம்பாட்டு கவுன்சில் தேர்தல் முடிவுகள் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த வெற்றியை காஷ்மீர் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜம்மு–காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி நாடாளுமன்றத்தின் மூலம் ரத்து செய்யப்பட்டது. இரண்டு யூனியன் பிரதேசங்களாக அதனை பிரித்தார்கள். இவை துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஜம்மு–காஷ்மீர் தேர்தலை இதுவரை நடத்த வில்லை. 370 ஆவது பிரிவு நீக்கத்தை ஒட்டுமொத்த இந்தியாவும் குறிப்பாக காஷ்மீர் மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு விட்டதாக பா.ஜ.க. ஒரு பிம்பத்தை கட்டமைத்தது. உண்மையாக இருந்தால் அந்த மாநிலத்தில் தைரியமாக தேர்தலை நடத்த வேண்டும். அதைச் செய்ய தைரியம் இல்லை.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி அளித்த பிறகு நடைபெறும் தேர்தல் இது. இதில் காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் இணைந்து வெற்றியைப் பெற்றுள்ளது. 'லடாக் மற்றும் கார்கிலில் புதிய ஜனநாயக விடியல் ஏற்பட்டுள்ளது' என்று ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். 370 ஆவது பிரிவை நீக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பா.ஜ.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி : “'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிகிறது” - முரசொலி !

இந்த வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அப்போது மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் 5 ஆண்டுகளை எடுத்துக் கொண்டதால் இது ஒரு வரலாற்றுத் தருணம். இந்த 5 ஆண்டுகளில் ஜம்மு–காஷ்மீரில் மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி கிடையாது. அம்மாநிலத்தில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்துவதற்கு முன் அம்மாநில சட்டமன்றம் முடக்கப்பட்டது.

இதற்கான அதிகாரம் ஆளுநருக்கு உள்ளதா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும்.சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் அதேவேளையில், ஜம்மு–காஷ்மீர் இந்தியா வின் ஒருங்கிணைந்த பகுதி என்பதில் மனுதாரர் உறுதியாக இருக்கிறார். அது நேற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது; இன்றும் அது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது; நாளையும் அது அவ்வாறே இருக்கும் என்பதே மனு தாரரின் நிலைப்பாடு" என்று வாதிட்டார். விசாரணை நடைபெற்று வருகிறது.

இப்படி 370ஆவது பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் அமைதியாக இருக்கிறதா என்றால் இல்லை என்பதே உண்மை. அப்படியானால் எதற்காக 370 ஆவது பிரிவை நீக்கினார்கள்? தங்களது மதவாத எண்ணத்தை திருப்திப்படுத்துவதற்காக!

அரசியல் தலைவர்கள் அனைவரையும் வீட்டுக் காவலில் வைத்து விட்டு - இதனைச் செய்தார்கள். அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்ததைப் போல மக்களை வைக்க முடியாது அல்லவா? மக்கள் வெளியில் வந்து வாக்களித்து விட்டார்கள். பா.ஜ.க.வுக்கு படுதோல்வியை தந்துவிட்டார்கள். இதோ பா.ஜ.க.வை தோல்வியுறச் செய்யும் முடிவில் காஷ்மீரும் சேர்ந்துவிட்டது. 'இந்தியா' கூட்டணியை காஷ்மீரும் வழிமொழிந்துவிட்டது.

banner

Related Stories

Related Stories