உச்சநீதிமன்றம் எழுப்பும் கேள்வி!
ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரும் டெல்லி மாநில துணை முதலமைச்சராக இருந்தவருமான மணீஷ் சிசோடியா கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி அன்று சி.பி.ஐ.–யால் கைது செய்யப்பட்டார். இன்னமும் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு இடைக்காலப் பிணை கூட வழங்கப்படவில்லை. சிசோடியாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.பாட்டியா அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலைப் பார்த்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பி இருக்கும் கேள்வி மிகமிக முக்கியமானது ஆகும்.
“டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் லஞ்சம் கைமாறியதாகச் சொல்கிறீர்கள். யார் அதை வழங்கினார்கள்? சிசோடியா மீதான புகாருக்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இவர் மீது எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்? தினேஷ் அரோரா என்பவரின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாகக் காட்டுகிறீர்கள். வேறு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? சிலர் பேசிக் கொண்டதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? ‘வாட்ஸ் அப்’ செய்திகளை ஆதாரமாகக் கொள்ள முடியுமா? ஒரு அப்ரூவர் அனுமானமாகச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா? குறுக்கு விசாரணை நடக்கும் போது இந்தப் புகார்கள் எல்லாம் இரண்டு நிமிடம் கூட நிற்காது” என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
சி.பி.ஐ. - வருமானவரித்துறை - அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு ஒன்றிய பா.ஜ.க. அரசு நடத்தும் உருட்டல் மிரட்டல்கள் அனைத்தும் உச்சநீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு முன்னால் தலைகுனிந்து நிற்கின்றன.
ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்புடைய வழக்கில் - அவரை எதற்காகக் கைது செய்துள்ளோம் என்பதையே சொல்லவில்லை. அவர் மீதான குற்றத்தை ஒரு தாளில் எழுதி வாசித்திருக்கிறார்கள். அவர் உச்சநீதிமன்றம் சென்று பிணை வாங்கி இருக்கிறார். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கண்டித்துள்ளது.
“பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் கடுமையான பொறுப்பைக் கொண்ட முதன்மை விசாரணை நிறுவனமாக இருப்பதால் - அமலாக்கத்துறையின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகவும் - நியாயமாகவும் இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் சொன்னார்கள். இதன் மூலமாக அமலாக்கத் துறையின் நடவடிக்கைகள் உள்நோக்கம் கொண்டதாக அமைந்து வருவதையே அறிய முடிகிறது.
எதிர்க்கட்சி ஆட்களை மிரட்டுவதற்காகவே இவை பயன் படுத்தப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு உள்ளானதால் பயந்து போய், பா.ஜ.க. ஆதரவாளர்களாக மாறியவர்கள் மீது, நடவடிக்கைகள் இருப்பது இல்லை.
கடந்த 2021, அக்டோபர் 7ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மூன்று சகோதரிகளின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
மும்பை, புனே, கோவா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அஜித் பவாருக்குச் சொந்தமான, நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிக்கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணம் கண்டறியப்பட்டதாகவும், 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 4.32 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், அஜித் பவாருக்கு, அவர் பெயரிலும் அவரது பினாமிகள் பெயரிலுமாக மொத்தம் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பு உள்ளதாக வருமான வரித்துறை செய்தியை கசியவிட்டது. ‘என்னை மிரட்ட முடியாது’ என்றார் அஜித் பவார். ஆனால் அஜித் பவார் இப்போது பா.ஜ.க.வாக மாறிவிட்டார். அவர் மீது ரெய்டு நடத்திய பா.ஜ.க. கட்சி, அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கி உள்ளது.
இப்போது அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுக்கவும் மாட்டார்கள். இப்படி புனிதர்களாக ஆகிவிட்ட பல பேரின் பட்டியலை சசிதரூர் முன்பு வெளியிட்டு இருந்தார்.
* 300 கோடி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நாராயண் ரானே, பா.ஜ.க.வில் சேர்ந்ததும் விசாரணை நிறுத்தப்படுகிறது.
* நாரதா ஊழல் வழக்கில் சிக்கிய சுவெந்து அதிகாரி, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்.
* லஞ்ச வழக்கில் சிக்கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பா.ஜ.க.வில் இணைந்ததும் விசாரணை நிறுத்தம்.
* அமலாக்கத்துறையால் ரெய்டு நடத்தப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர் பிரதாப் சர்னாய் மீதான வழக்கு மூடப்பட்டது.
* லஞ்ச வழக்கில் லோக் ஆயுக்தாவால் வழக்குப் பதியப்பட்ட எடியூரப்பா, மீண்டும் பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்டார். –- இதுதான் பா.ஜ.க.வின் கறை படிந்த விசாரணை வரலாறுகள் ஆகும்.
ராகுல்காந்தியின் எம்.பி. பதவியை பறிக்க நடத்தப்பட்ட சதியை அனைவரும் அறிவோமே. 07.02.2023 அன்று அதானியும் மோடியும் இருக்கும் புகைப்படத்தைக் காட்டி நாடாளுமன்றத்தில் ராகுல் கடுமையாக விமர்சித்தார். ராகுல் மீது வழக்கு போட்டு திரும்பப் பெற்றுக் கொண்டவர் 16.2.2023 அன்று திடீரென்று குஜராத் உயர்நீதிமன்றம் சென்று தான் பெற்ற தடை உத்தரவை திரும்பப் பெறுகிறார்.
இதையடுத்து, 17.03.2023 வாதங்களை தொடர சூரத் மாவட்ட நீதிபதி அனுமதிக்கிறார். ஐந்தே நாளில் அதாவது 23 ஆம் தேதியே தீர்ப்பு வருகிறது. ராகுலுக்கு 2 ஆண்டு சிறை விதிக்கப்படுகிறது. அதற்காகவே காத்திருந்தது போல, மறு நாளே 24 ஆம் தேதி அன்று அவரது எம்.பி. பதவி பறிக்கப்படுகிறது. ராகுல் காந்தியின் பதவியைப் பறிப்பதற்காகவே இவை அனைத்தும் நடத்தப்பட்டது. இவை தான் இப்போதும் விசாரணை அமைப்புகள் மூலமாக நடத்தப்படுகின்றன.
Don't Create Atmosphere of Fear - என்பது அமலாக்கத்துறைக்கு முன்பு உச்சநீதிமன்றம் சொன்ன அறிவுரை ஆகும். அதாவது ‘அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்’ என்பது ஆகும். ஆனால் அச்சம் நிறைந்த சூழ்நிலையையே உருவாக்கி வருகிறார்கள்.