முரசொலி தலையங்கம்

”மதவாதத்தோடு ஜாதியவாதத்தையும் இணைத்து வெறுப்பை பரப்பும் பிரதமர் மோடி” : முரசொலி கடும் தாக்கு!

‘இந்தியா’ கூட்டணி அவருக்கு எத்தகைய அச்சத்தைக் கொடுத்துள்ளது என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தி இருக்கிறது.

”மதவாதத்தோடு ஜாதியவாதத்தையும் இணைத்து வெறுப்பை பரப்பும் பிரதமர் மோடி” : முரசொலி கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05-10-2023)

பிளவுபடுத்துவது யார்?

“நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன்” –“'பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து பிரதமராகப் போட்டியிடும் அளவுக்கு நான் உயர்ந்திருக்கிறேன்” – “பிற்படுத்தப்பட்டவனாக பிறந்ததால் நான் பிரதமர் ஆகியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குப் பிடிக்கவில்லை” – என்றெல்லாம் சொல்லி வந்த பிரதமர் நரேந்திரமோடி – இப்போது என்ன சொல்ல ஆரம்பித்திருக்கிறார் தெரியுமா?

“ஜாதி அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்துகிறது காங்கிரஸ் கட்சி” என்று குற்றம் சாட்டி இருக்கிறார். ஜாதி அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்தியது என்றால், இவர் எதற்காக, ‘பிற்படுத்தப்பட்டவர்’ பல்லவியை இத்தனை ஆண்டு காலம் பாடினாராம்?

மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அங்கு தேர்தல் வரப்போகிறது. அதற்காக அங்கு சென்றுள்ளார் பிரதமர். மத்தியப் பிரதேசத்துக்கு எத்தகைய வளர்ச்சியைக் கொடுத்தது பா.ஜ.க. என்பதை சொல்லக் காணோம். ஆனால் ஆட்சியில் இல்லாத காங்கிரஸை விமர்சித்து இருக்கிறார். ‘இந்தியா’ கூட்டணி அவருக்கு எத்தகைய அச்சத்தைக் கொடுத்துள்ளது என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்தி இருக்கிறது.

“வளர்ச்சிக்கு எதிரிகளாக இருப்பவர்களுக்கு மத்தியில் ஆட்சிபுரிய 60 ஆண்டுகள் கிடைத்தது. ஆனால் அவர்களால் நன்மைகளை வழங்க முடியவில்லை. அவர்கள் ஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடினர். ஜாதி அடிப்படையில் நாட்டில் பிளவை ஏற்படுத்தினர். அந்தப் பாவத்தை இப்போதும் அவர்கள் செய்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் நாட்டில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலகமே இந்தியாவைப் புகழ்ந்து பாடுகிறது” என்று பேசி இருக்கிறார் பிரதமர்.

ஒன்பது ஆண்டுகளாக இந்திய நாட்டின் வளர்ச்சி எந்தெந்தத் துறைகளில் நடந்துள்ளது என்பதை பட்டியல் போட்டிருந்தால் பிரதமரைப் பாராட்டலாம். அந்தப் பட்டியலின் உண்மைத் தன்மையையாவது விமர்சிக்கலாம். அதை விட்டுவிட்டு, பொத்தாம் பொதுவாக வளர்த்துவிட்டேன் என்று சொல்வது பம்மாத்து தவிர வேறல்ல.

”மதவாதத்தோடு ஜாதியவாதத்தையும் இணைத்து வெறுப்பை பரப்பும் பிரதமர் மோடி” : முரசொலி கடும் தாக்கு!

‘உலகமே இந்தியாவைப் புகழ்ந்து பாடுகிறது’ என்பதும் அடுத்த கதையளப்பு தான். அப்படி எந்தப் பாட்டுக் கச்சேரியாவது எந்த நாட்டிலாவது நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.

கடந்த மார்ச் மாதம் அதானி குழுத்தின் முறைகேடுகள் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்’ என்ற ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை அதானி குழுமம் செய்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைப் பற்றி இதுவரை வாய் திறக்கவில்லை பிரதமர். ROLL PKG Organized Crime and Corruption Reporting Project என்ற சர்வதேச பத்திரிகையாளர்கள் அமைப்பு அதானி குழுமம் குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ், தி கார்டியன் ஆகிய பத்திரிகைகள் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. அதில், குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த காலத்தில் இருந்து கவுதம் அதானியுடன் தொடர்பு இருந்து வருவதை இந்தக் குழுமம் குற்றம் சாட்டியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம் மேற்கொண்டார். அப்போது பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் வகையைச் சேர்ந்த 36 போர் விமானங்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்களை வாங்க உடன்பாடு கையெழுத்தானது. இந்நிலையில் இந்த ஒப்பந்தத்தில் நடந்த ஊழல் குறித்து ‘மீடியா பார்ட்’ என்ற பிரெஞ்ச் ஊடகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.

”மதவாதத்தோடு ஜாதியவாதத்தையும் இணைத்து வெறுப்பை பரப்பும் பிரதமர் மோடி” : முரசொலி கடும் தாக்கு!

2002 – குஜராத் கலவரம் – அதன் மூலமாக நடந்த பச்சைப் படுகொலைகளை நினைவூட்டி பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு செய்திப்படம் தயாரித்து வெளியிட்டது. மணிப்பூர் கலவரம் குறித்து உலகப் பத்திரிகைகள் அனைத்தும் எழுதிவிட்டன. இதெல்லாம் தான் ‘உலகமே இந்தியாவைப் புகழ்ந்து பாடுகிறது’ என்று பிரதமர் சொல்வதா?

இத்தகைய போலிப் பெருமைகளைக் கட்டமைத்துக் கொள்ளும் பிரதமர், அவசியமற்ற வகையில் ‘ஜாதியவாதத்தை’க் கையில் எடுத்துள்ளார். இதுவரை அவர் கையில் இருந்தது மதவாதம். இப்போது ஜாதியவாதமும் அவர் கையில் இணைந்துள்ளது. சோஷியல் இன்ஜினியரிங்’ என்ற பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி - ஜாதிப்பிணைப்பை இறுக்கமாக்கி - ஜாதிக் கூட்டணிகளை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை ஜாதியை வைத்து பிளவுபடுத்துபவர்கள் என்று குற்றம் சாட்டுவது வேடிக்கை மட்டுமல்ல, அதன் வாடிக்கை.

மக்களைப் பிளவுபடுத்தும் பா.ஜ.க. அரசியலால்தான் மணிப்பூர் எரிந்து கொண்டு இருக்கிறது. ஐந்து மாதம் ஆகியும் அடக்க முடியவில்லை. ‘எரியட்டும், அணைந்து விடக் கூடாது’ என்றே பா.ஜ.க. நினைப்பது போலத் தெரிகிறது. ஐந்து மாதம் ஆனபிறகும் அந்த மாநிலத்துக்குப் போக மாட்டேன் என்பதில் ‘உறுதியாக’ இருக்கிறார் பிரதமர்.

மக்களைப் பிளவுபடுத்த கர்நாடக பா.ஜ.க. அரசு, இடஒதுக்கீட்டில் கை வைத்தது. இதனால் அந்த மாநிலத்திலும் கலவரம் ஏற்பட்டது. அதை உணர்ந்த கர்நாடக மக்கள், பா.ஜ.க.வுக்கு தோல்வியைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.

குடியுரிமைச் சட்டம் - பொதுசிவில் சட்டம் ஆகியவை பா.ஜ.க.வின் பிளவுவாத அரசியலின் சட்டப்பூர்வ வடிவங்கள் ஆகும். பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற கண்துடைப்பு நாடகத்தில் கூட, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்காததும் பா.ஜ.க.வின் ஜாதியவாதமே. இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்கள், அரசியல் அதிகாரம் பெற்றவர்களாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ‘பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்’ என்று சொல்லிக் கொள்பவர் நடத்திய நாடகம் இது. அல்லது இவரை முன்னிறுத்தி ஆதிக்க வர்க்கம் நடத்திக் காட்டிய நாடகம் இது. பெண்ணினத்துக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம்தான், இந்த சட்டம் ஆகும். இதை மறைப்பதற்காக ‘ஜாதியால் பிளவுபடுத்துகிறார்கள்’ என்கிறார் பிரதமர்.

ஜாதிப் பிரிவினைகளே 60 ஆண்டுகளுக்கு முன்னால் காங்கிரஸ் கட்சிதான் உற்பத்தி செய்தது போல பிரதமர் பேசுகிறார். பிரிட்டிஷ்காரர்கள் தான் ஜாதியை உருவாக்கினார்கள் என்பதைப் போல இங்கேயுள்ள ஒரு ஆளுநர் பேசிக் கொண்டு வருகிறார். இருவருமே தவறான வரலாற்றை - மேலும் தவறாகப் பேசுகிறார்கள். தவறான உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள். தங்களது கடந்த காலத் தவறுகளை மறைப்பதற்காகவே பேசுகிறார்கள்.

banner

Related Stories

Related Stories