முரசொலி தலையங்கம்

“பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !

குலத் தொழில் கூடாது. ஏழை எளிய - பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடி மக்களும் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடியது. திராவிட மாடல் ஆட்சி திட்டங்கள் தீட்டி வருகிறது.

“பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

குலத்தொழிலை ஊக்குவிக்கும் ஒன்றிய அரசு!

சனாதனம் என்றால் என்ன என்று பரப்புரை செய்ய ஒன்றிய அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி. அவர் அறிவித்துள்ள ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான். தந்தை தொழிலை மகன் தொடர வேண்டும் என்பதே சனாதனம். குலத் தொழிலை எவரும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பதுதான் சனாதனம். அதற்காகவே ஒரு திட்டம் போடுகிறார் பிரதமர்.

ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிவிட்டு பிரதமர் பேசும் போது குலத்தொழிலைச் செய்பவர்கள் தங்களது குடும்பத் தொழிலைத் தொடர்ந்து செய்தால் நிதி கொடுப்போம் என்று அறிவித்தார். இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் மறுபதிப்புதான் இது.

விஸ்வகர்மா யோஜனா - என்ற திட்டம் 18 வகையான ஜாதிகளை அடையாளம் காட்டுகிறது. அவர்களது பரம்பரைத் தொழிலுக்கு ஊக்கம் அளிப்பதன் மூலமாக குலத் தொழிலை ஊக்குவிக்கிறது. பரம்பரையாக தொழில் செய்பவர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் இது.

பரம்பரைத் தொழில்களைச் செய்பவர்கள் என்றால் அனைத்துத் தொழில்களையும் சொல்லாமல் 18 தொழில்கள் மட்டும் என வரையறுத்தது ஏன்?

“பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !

இந்தத் திட்டத்தில் சேர்பவர்கள் பரம்பரை பரம்பரையாக அந்தத் தொழிலை செய்பவர்களாக இருக்க வேண்டும். செருப்பு தைப்பவர் பரம்பரை பரம்பரையாக இந்தத் தொழிலை செய்து வருகிறேன் என சான்றிதழ் வாங்கி வர வேண்டும். இந்தத் தொழிலாளி ஒருவர் தனது தொழிலை விரிவுப்படுத்தி, வேறு ஒரு பொருளை தயாரித்தால் அவருக்கு நிதி உதவி கிடையாது. பி.எம்.விஸ்வகர்மா என்ற திட்டத்தை 16.8.2023 அன்று அமைச்சரவையின் பொருளாதாரக் குழு ஏற்று 13 ஆயிரம் கோடி பணத்தையும் ஒதுக்கி இருக்கிறது. 2023 முதல் 2028 முதல் குலத் தொழில் செய்ய வாரிசுகளுக்கு அவர்களது குடும்பத்தினர் கற்றுக் கொடுப்பார்களாம்.

பதினெட்டு பரம்பரைத் தொழில்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

1. தச்சர்

2. படகு தயாரிப்பாளர்

3. கவசம் தயாரிப்பவர்

4. கொல்லர்

5. சுத்தியல் மற்றும் கருவிகள் தயாரிப்பவர்

6. பூட்டு தயாரிப்பவர்

7. பொற்கொல்லர்

8. குயவர்

9. சிற்பி

10.காலணி தயாரிப்பவர்

11. கொத்தனார்

12. கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர்

13. பொம்மை தயாரிப்பவர்

14. முடி திருத்துபவர்

15. பூமாலை தொடுப்பவர்

16. சலவைத் தொழிலாளர்

17. தையலர்

18. மீன்பிடி வலை தயாரிப்பவர்

இதனை செய்யப் பழகுவோருக்கு ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மானியத்தில் கடன் கிடைக்கும்.

தச்சன் மகன் தச்சுத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் –

சலவைத் தொழிலாளி மகன் சலவைத் தொழிலைத்தான் செய்ய வேண்டும் –

முடிதிருத்தும் தொழிலாளி மகன் வாழ்க்கை முழுக்க முடிவெட்டத்தான் வேண்டும் – என்பதை ஊக்குவிக்கிறார் பிரதமர். அதற்குத்தான் இந்தத் திட்டம். அவரவர்க்கு விதிக்கப்பட்ட தொழிலை மட்டுமே அவரவர் செய்ய வேண்டும் என்பதுதான் மனுவின் கட்டளை. அதுதான் சனாதன தர்மம். அதை மீறக் கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வருகிறார் பிரதமர்.

“பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !

அனைத்துக் கட்சிகளையும் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தி இதனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றினார் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். இக்கூட்டத்தின் முடிவுப்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் நடந்துள்ளது.

குலத் தொழில் கூடாது. ஏழை எளிய - பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடி மக்களும் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்று திராவிட இயக்கம் போராடியது. திராவிட மாடல் ஆட்சி திட்டங்கள் தீட்டி வருகிறது. ஆனால் குலத் தொழில் செய், உனக்கு மானியம் தருகிறேன் என்கிறார் பிரதமர்.

இவர்களது அனைத்து தர்மங்களும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டவைதான். இந்தத் திட்டமும் பிறப்பை அடிப்படையாகக் கொண்டதுதான். இராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தபோது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்: “நாம் மேன்மையடையக் கூடாது என்பதற்காகவே இராஜாஜி இந்த திட்டத்தைக் கொண்டு வருகிறார். நம்மை உத்தியோகத்துக்கு லாயக்கு ஆக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வந்த திட்டம் இது” என்று சொன்னார் பெரியார்.

“ஆயிரக்கணக்கான வருடங்களாக கூலிக்காரன் மகன் கூலிக்காரன், மேளம் அடிக்கிறவன் மகன் மேளம் அடிப்பவன், உழுபவன் மகன் உழுபவன் என்றே வைத்துவிட்டார்கள். வெள்ளைக்காரன் வந்துதான் 200 ஆண்டுக்கு முன் இதனை மாற்றினான். இதெல்லாம் தலையெழுத்து என்று நினைக்க வைத்துவிட்டார்கள். இந்தத் தலையெழுத்தை மாற்ற கவலைப்பட்டது நமது இயக்கம் மட்டும்தான். வண்ணார் மகனும், நாவிதன் மகனும் படித்துவிட்டால் உயர்ஜாதிக்காரனுக்கு மரியாதை போய்விடும். அதனால்தான் குலத் தொழிலையே செய்தால் போதும் என்கிறார்கள்” என்பதை தெளிவுபடுத்தினார் பெரியார்.

“பிரதமரின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தின் உள்ளடக்கமே சனாதனம்தான்..” - வெளுத்து வாங்கிய முரசொலி !

சாதியை தொழிலாகவும் - தொழிலாளிகளை சாதி ரீதியாகவும் பிரித்ததைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் விரிவாக எழுதி இருக்கிறார். ‘உன் தொழிலில் லாபமில்லை என்றால் அது உன் கர்மா என்றும், லாபமில்லாத தொழிலை விட்டு இன்னொரு தொழிலைச் செய்யத் தடை செய்வதும்தான் இதில் உள்ள கொடூரம்’ என்பதையும் அண்ணல் அம்பேத்கர் சொல்லி இருக்கிறார். ‘தொழிலைக் கற்றுத் தருகிறோம் என்பதற்குள்ளாக சாதியைக் கெட்டிப்படுத்தும் தந்திரம் இருக்கிறது’ என்பதையும் அண்ணல் சொன்னார்.

இந்தக் காலத்தில் சமூகநீதி - இடஒதுக்கீடு - நவீன மயம் - விழிப்புணர்வு ஆகியவற்றால் பலரும் ஜாதி அடையாளம் கொண்ட தொழிலில் இருந்து வெளியேறுகிறார்கள். இதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தடுக்கவே இத்தகைய திட்டங்களைக் கொண்டு வருகிறார் பிரதமர் மோடி. சனாதனக் காப்புத் திட்டங்களைக் கொண்டு வரும் மோடி தான், ‘சனாதனத்தை’ விளக்கி பிரச்சாரம் செய்யச் சொல்கிறார்.

இதனை ஏன் ஒன்றிய அமைச்சரவையில் சொல்கிறார். சனாதனம் பா.ஜ.க. ஆட்சியின் கொள்கை - அதனால் சொல்கிறார். சனாதனத்தை எதிர்த்த முதலமைச்சரின் அறிக்கையை தமிழ்நாடு அரசின் செய்தித்துறை வெளியிட்டதாம்? உடனே ‘தினமலர்’ திகில் ஆகிறது. சனாதனத்தை ஆதரித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பேசலாம் என்றால், ஒன்றிய அமைச்சர்கள் பிரச்சாரம் செய்யலாம் என்றால் முதலமைச்சரின் அறிக்கையை செய்தித் துறை வெளியிட்டது என்ன தவறு?

அவர் செய்யலாம் - இவர் செய்யக் கூடாது என்பதுதான் சனாதனம்!

banner

Related Stories

Related Stories