முரசொலி தலையங்கம்

“காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல..” - யோகி ஆதித்யநாத்தை தாக்கிய முரசொலி !

யோகி யாரோடு போட்டி போடலாம் என்றால் மோடியுடன் போட்டி போடலாம். இருவரும் தான் ஜாடிக்கு ஏற்ற மூடி. மோடியின் சாயம் போனதும், யோகியை வைத்து விற்கப் பார்க்கிறார்கள். யோகியின் சாயமும் வெளுத்துப் போனது தான்!

“காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல..” - யோகி ஆதித்யநாத்தை தாக்கிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

யார் யோகி? யார் சந்நியாசி?

திடீரென்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னுக்குக் கொண்டு வரப்படுகிறார். மோடி முகத்தை வைத்து இனி வெற்றி பெற முடியாது என்று நினைப்பவர்கள், யோகியைக் காட்ட முயற்சிக்கிறார்களா எனத் தெரியவில்லை.

‘குஜராத் மாடல்’ எவ்வளவு பொய்யானதோ - அதை விட மிக மோசமானது யோகியின் உ.பி. ‘தாடி வைத்தவர் எல்லாம் தாகூர் அல்ல’ என்பதைப் போலத் தான் காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல.

அடுத்த வேளையையும் - அடுத்த வேலையையும் கருதாமையே துறவறம் ஆகும். மனித வாழ்க்கையில் இருந்தும் - பந்த பாசங்களில் இருந்தும் - அனைத்து பதவி - பொறுப்புகளில் இருந்தும் - அனைத்து அதிகாரத்திலும் இருந்தும் விடுபட்டு தன்னை வருத்தி துறவு மேற்கொள்பவரே துறவி என்று ஆன்மீகர் மொழியில் சொல்லப்படுகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதும் - மனைவியை பாதியில் விட்டுவிட்டுப் போவதும் - காவி வேட்டி உடுத்திக் கொள்வதும் சந்நியாசியின் அடையாளம் என்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள்.

பலனில் பற்றுக் கொண்டு எந்தச் செயலையும் செய்யாமல் இருப்பதே துறவு நிலை. அந்த வகையில் பார்த்தால் வோட்டுக் கேட்டு அலைந்த - அதிகாரத்தின் அத்தனை பலனையும் அனுபவிக்கும் யோகி ஆதித்யநாத் எப்படி சந்நியாசி ஆவார்?

“காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல..” - யோகி ஆதித்யநாத்தை தாக்கிய முரசொலி !

‘பேய்போல் திரிந்து பிணம்போல் கிடந்திட்ட பிச்சை யெல்லாம் நாய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லி சேய்போல் இருப்பர்கண் டீருண்மை ஞானம் தெளிந்தவரே ’ - என்பது பட்டினத்தார் பாடல் ஆகும்.

இந்த அளவுக்கு எல்லாம் யோகியிடம் எதிர்பார்க்க முடியாது. மிகமிகச் சாதாரண அறநெறிகளுக்கும், விதிமுறைகளுக்கும், சட்டதிட்டங்களுக்கும், நியாய தர்மங்களுக்கும் சம்பந்தமில்லாத ஆட்சிதான் யோகியின் ஆட்சி ஆகும். இந்தியாவில் மிகமிக மோசமான ஆட்சியில் முதலிடம் யாருக்காவது தர வேண்டுமானால் அது உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு தான். பள்ளிப் பிள்ளைகள் சப்பாத்திக்கு குருமா இல்லாமல் உப்பு வைத்துச் சாப்பிட்ட காட்சியை உ.பி.யில் தான் பார்த்தோம்.

கொரோனா காலத்தில் மக்களைக் காப்பாற்றக் கூட எந்த உள்கட்டமைப்பு வசதியும் இல்லாமல் இருந்த மாநிலம் உ.பி. ஒவ்வொரு மாநிலமும் தினமும் எத்தனை பேருக்கு பாதிப்பு என்பதை அறிக்கையாகக் கொடுத்து வந்தபோது அது பற்றி அறிக்கை கொடுக்காத மாநிலம் உ.பி.கொரோனா ஊசிக்குப் பதிலாக நாய்க்கடி ஊசி போட்ட மாநிலம் அது. மக்கள் தேவைக்கு ஆக்ஸிஜன் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தால் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளானது யோகி ஆட்சி. மின்சார வசதியும் கழிப்பறை வசதியும் இல்லாமல் ஏன் மருத்துவமனைகள் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டது அலகாபாத் நீதிமன்றம்.

உத்திர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக பலர் உயிரிழந்த நிலையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ளது என யாராவது கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என உ.பி முதல்வர் யோகி மிரட்டினார். உத்திர பிரதேச கொரோனா நிலவரம் மோசமாக உள்ளது என செய்திகள் பரப்பப்பட்டால் அவர்கள் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என யோகி மிரட்டினார். மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த தன் தாத்தாவுக்காக, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட இளைஞர் மீது, உத்தரப் பிரதேச காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

Hathras rape case
Hathras rape case

பொதுவாகவே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலம் அது. பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் மாநிலங்களில் முதலாவது இடத்தில் உத்தரப்பிரதேசம் இருக்கிறது. அதிலும், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் நடக்கும் மாநிலத்திலும் உ.பி. முதலாவது இடத்தில் இருக்கிறது. ஒன்றிய அரசின் புள்ளிவிபரமே இதைச் சொல்கிறது.

2020 அக்டோபர் மாதம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு அப்பாவிப் பெண், நான்கு பேரால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். இறந்த அந்த பெண்ணில் உடலை அவர்களது குடும்பத்துக்குக் கூட காட்டாமல், தராமல் போலீஸே எரித்து விட்டார்கள். அந்தப் பெண்ணின் தந்தையைக் கடத்தி வைத்து விட்டு இதனை செய்திருக்கிறார்கள். அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரையும் அந்த ஊருக்குள் அனுமதிக்கவில்லை யோகி அரசு. பிரியங்காவை போலீஸார் பிடித்து தள்ளினார்கள். கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தை யாரும் பார்க்க அனுமதிக்கவில்லை. அந்தப் பெண்ணின் குடும்பத்தை வீட்டுச் சிறையில் வைத்தார்கள். இது தான் யோகி அரசு.

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற கேரள பத்திரிகையாளர் சித்திக் காப்பான் கைது செய்யப்பட்டார். அவரை உ.பி அரசு சிறுநீர் கழிக்கக் கூட விடாமல் கட்டி வைத்துச் சித்ரவதை செய்தது. சித்திக் காப்பனின் மனைவி ரைகாந்த் காப்பான், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு கடிதம் எழுதி, சித்திக் காப்பானை சித்திரவதையில் இருந்து காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார். பத்திரிகையாளர் கதியே இது என்றால், சாதாரண பொதுமக்களைப் பற்றிச் சொல்ல வேண்டியது இல்லை.

“காவி கட்டியவர் எல்லாம் சந்நியாசி அல்ல..” - யோகி ஆதித்யநாத்தை தாக்கிய முரசொலி !

அரசாங்கத்துக்கு எதிராக எழுதும் பத்திரிகையாளர்கள் அரசாங்கத்துக்குப் பதில் சொல்ல வேண்டும் என்ற அவரது சமீபத்திய உத்தரவு, ‘அறிவிக்கப்படாத எமர்ஜென்சியைப் போன்றது’ என்று சொல்லி இருக்கிறார் பத்திரிகையாளர் அம்பரீஷ் குமார். தவறான செய்தியாக இருந்தால் வழக்கு பதிந்து சிறைக்கு அனுப்பச் சொல்லி இருக்கிறார் இந்த சந்நியாசி. இது சட்டமா? சாபமா?

சட்டம் என்ற பெயரால் சிறுபான்மையினர், தலித்துகள் வேட்டையாடப்படும் மதவாத பாசிச ஆட்சி அது.

மனித வள மேம்பாட்டில் 35 ஆவது இடம்

மேல்நிலைக் கல்வியில் 24 ஆவது இடம்

பள்ளிக் கட்டமைப்பில் 27 ஆவது இடம்

பிறக்கும் குழந்தைகள் மரணத்தில் 35 ஆவது இடம்

குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டில் 20 ஆவது இடம் தனிநபர் சராசரி உற்பத்தியில் 31 ஆவது இடம்

பயிற்சி பெற்ற ஆசிரியர்களை வைத்திருப்பதில் 30 ஆவது இடம்

அலைபேசி வசதியில் 33 ஆவது இடம்

கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பில் 16–ஆவது இடம் - இது தான் இன்றைய உத்தரப் பிரதேசம் ஆகும்.

யோகி யாரோடு போட்டி போடலாம் என்றால் மோடியுடன் போட்டி போடலாம். இருவரும் தான் ஜாடிக்கு ஏற்ற மூடி. மோடியின் சாயம் போனதும், யோகியை வைத்து விற்கப் பார்க்கிறார்கள். யோகியின் சாயமும் வெளுத்துப் போனது தான்!

banner

Related Stories

Related Stories