முரசொலி தலையங்கம்

சிலப்பதிகாரம் - திராவிடம் : “எதைப் போய் எதில் தேடுகிறார்?” - நிர்மலா சீதாராமனை விளாசிய முரசொலி !

எங்களிடம் பழங்கால பனுவல்கள் ஏராளமாக உண்டு. திரும்பத் திரும்ப சொல்வது, 'திராவிடம்' என்பது ஒரு கருத்தியல் வடிவம். அது நிர்மலா சீதாராமன்களுக்கும் அவரை ஆட்டுவிக்கும் ஆரியத்துக்கும் எதிரான கருத்தியல் ஆகும்

சிலப்பதிகாரம் - திராவிடம் : “எதைப் போய் எதில் தேடுகிறார்?” - நிர்மலா சீதாராமனை விளாசிய முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சிலப்பதிகாரமும் நிர்மலா சீதாராமனும் !

நாடாளுமன்ற மக்களவை தி.மு.க. குழு துணைத் தலைவர் கனிமொழி அவர்கள், நாடாளுமன்றத்தில் பேசும்போது சிலப்பதிகாரத்தைச் சுட்டிக்காட்டினார். "நாடாளுமன்றத்தில் சோழர்களின் செங்கோலை வைக்கிறீர்களே! உங்களுக்கு பாண்டியரின் செங்கோல் பற்றித் தெரியுமா? சாமான்யரின் குரலைச் செவிமடுக்காத காரணத்தால் அந்தச் செங்கோலுக்கு என்ன கதி ஏற்பட்டது என்பது தெரியுமா? தெரிந்து கொள்ள சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்” என்று சொன்னார். உடனடியாக அன்றைய தினமே சிலப்பதிகாரத்தைப் படித்து விட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தவறுதலாக!

எதற்காக சிலப்பதிகாரத்தை கனிமொழி படிக்கச் சொன்னாரோ அதற்காகப் படித்திருக்க வேண்டும்.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்' - என்பது சிலம்பின் உள்ளடக்கம். அரசியலில் தவறு செய்தவர்களை அந்த அறமே பகையாகமாறி எதிர்வினையாற்றும் என்பதுதான் இளங்கோவடிகள் வடித்த தமிழிய அறம் ஆகும். இதற்காகத்தான் சிலப்பதிகாரத்தைப் படிக்க வேண்டும் என்கிறோம்.

குடிமக்கள் தலையில் தாங்கமுடியாத வரியைச் சுமத்தும் அரசு வாழ முடியாது, அத்தகைய அரசு குடிமக்களால் கவிழ்க்கப்படும் என்ற பொருளில், 'கறைகெழு குடிகள் கைதலை வைப்ப..' என்று எழுதியவர் இளங்கோ. ஜி.எஸ்.டி. வரி போட்ட இவர்களை அதனால்தான் சிலப்பதிகாரத்தைப் படிக்கச் சொல்கிறோம்.

கொடுங்கோன்மை இருக்கும் ஆட்சி எப்போது முடியும் என்று மக்கள் தினமும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள் என்ற பொருளில், 'கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல' என்று எழுதிய சிலம்பை அவர்கள் வாசிக்க வேண்டாமா? குடிகளை பயமுறுத்தும் வகையில் ஆட்சி செய்யக் கூடாது என்கிறது சிலம்பு. அதை அவர்கள் வாசிக்க வேண்டாமா? தனக்கு ஏற்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்காத இந்த ஊரில் தெய்வமும் உண்டா என்று கேட்டவள் கண்ணகி. 'தேரா மன்னா?' என்று கேட்டவள் கண்ணகி. ஆனால் இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல், அற்றை பாண்டியன்போல் அவசரப்பட்டு 'திராவிடர்' என்ற சொல் சிலப்பதிகாரத்தில் இல்லையே என்று பதில் சொல்லி இருக்கிறார். எதைப் போய் எதில் தேடுகிறார்?

சிலப்பதிகாரம் - திராவிடம் : “எதைப் போய் எதில் தேடுகிறார்?” - நிர்மலா சீதாராமனை விளாசிய முரசொலி !

“சிலப்பதிகாரம் கூறுவது நாம் திராவிடர் அல்லர். நாம் தமிழர்.” என்று சிலம்புச் செல்வர் சொன்னதாக நிதி அமைச்சர் சொல்லி இருக்கிறார். திராவிட இயக்கத்துக்கு எதிர் நிலையில் செயல்பட்டவர் ம.பொ.சி. இராஜாஜியின் சீடர் இவர். 'நான் போக முடியாத இடங்களுக்கு சக்கர வியூகத்தை உடைத்து அனுப்புவதற்காக இவரை வைத்திருக்கிறேன்' என்று இராஜாஜியே சொன்னார். திராவிட இயக்கத்தை விமர்சிப்பதற்காக நேரடியாக வர முடியாதவர்கள் ம.பொ.சி.யை பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் நடந்த காலத்தில் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை நடத்தியவர் இவர். இந்தி எழுத்துக்களை தார் வைத்து திராவிட இயக்கம் அழித்தபோது, மண்எண்ணெய் வைத்து தாரை அழித்தவர் ம.பொ.சி. அவரது தமிழ்ப் பற்று, எழுத்தாற்றல், இதழியல் தொண்டு ஆகியவற்றில் நாம் குறை காணவில்லை. ஆனால் அதை திராவிட இயக்க எதிர்ப்புக்கு பயன்படுத்தினார் அவர். அவரது இந்தி ஆதரவு என்பது சமஸ்கிருத ஆதரவு என்கிற நிலைக்குப் போனது. சமஸ்கிருதத்தை தனது கலாச்சார மொழி என்று பெருமை பொங்க அழைத்துக் கொண்ட விநோதமானதமிழ்த் தேசியத் தலைவர் அவர். எனவே ம.பொ.சி. அப்படித்தான் பேசுவார்.

திராவிட இயக்கத்தை எதிர்த்த ம.பொ.சி. அவர்கள்தான் 1967 தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். தியாகராயர் நகர் தொகுதியில் வென்றார். 1971 தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் மயிலாப்பூரில் நின்றாலும் வெற்றி வாய்ப்பை இழந்தார். முதல்வர் கலைஞர் அவர்கள்தான் அவரை சட்டமன்ற மேலவை துணைத் தலைவராக ஆக்கினார். பிற்காலத்தில் சென்னையில் அவருக்கு சிலை வைத்தவரும் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்தான்! திராவிட எதிர்ப்பாளரான ம.பொ.சி. புத்தகத்திலா திராவிடத்தை தேடுவது? மோடியின் உரையிலா ‘அதானி'யைத் தேடுவது?

சிலப்பதிகாரம் - திராவிடம் : “எதைப் போய் எதில் தேடுகிறார்?” - நிர்மலா சீதாராமனை விளாசிய முரசொலி !

தமிழ் வரலாறு எழுதிய ரா. இராகவையங்கார், "வடமொழியாளர் த்ரமிளர் எனத் தமிழ் மொழியாளரையும், த்ரமிளம், த்ராவிடம் என அவர் தம் நாட்டினரையும் மொழியினரையும் குறித்தனர்” என்கிறார்.

* ‘றிராவிட மென்றியல் பாடை' என்கிறது காஞ்சி புராணம்.

* 'வல்லான் ஒருத்தன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்' என்கிறார் தாயுமானவர்.

* நாலாயிர திவ்ய பிரபந்தத்துக்கு ‘திராவிட வேதம்' என்று பெயர்.

* சிவஞானயோகிகள் எழுதிய நூலுக்கே 'திராவிட மாபாடியம்' என்றுதான் பெயர்.

* ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடமும்' என்கிறது தமிழ்த்தாய் வாழ்த்து.

பி.டி.சீனிவாச அய்யங்கார் எழுதிய ‘தமிழர் வரலாறு' படிக்கவும். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி எழுதிய ‘தென்னிந்திய வரலாறு' படிக்கவும். கி.மு.155 ஆம் ஆண்டு தமிழக வேந்தர் கூட்டணியை முறியடித்தான் கலிங்க நாட்டை ஆண்ட காரவேலன். அந்த மன்னன் யாரை முறியடித்ததாக கல்வெட்டு எழுதினான் என்றால், 'திரமிள தேச சங்காத்தம்' என்ற கூட்டணியை வீழ்த்தியதாக கல்வெட்டு எழுதி வைத்தான். தமிழக வேந்தர் கூட்டணிக்கு கலிங்க மன்னன் வைத்த பெயர். அசோகர் காலத்துக்குப் பிறகு நமக்குக் கிடைத்த மிகப்பழைய கல்வெட்டு இந்த ஹத்திரும்பிக் கல்வெட்டுதான்.

எனவே, ம.பொ.சி.யை தூசி தட்டி எடுத்து வர வேண்டாம். எங்களிடம் பழங்கால பனுவல்கள் ஏராளமாக உண்டு. திரும்பத் திரும்பச் சொல்வது, 'திராவிடம்' என்பது ஒரு கருத்தியல் வடிவம். அது நிர்மலா சீதாராமன்களுக்கும் அவரை ஆட்டுவிக்கும் ஆரியத்துக்கும் எதிரான கருத்தியல் ஆகும். அதனை உரக்கவே உச்சரிப்போம். மாற்றிக் கொள்ள மாட்டோம்.

- முரசொலி தலையங்கம் (15.08.2023)

banner

Related Stories

Related Stories