முரசொலி தலையங்கம்

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் சொன்ன பொய்யை அம்பலப்படுத்திய முரசொலி!

வேளாண் சட்டங்கள் மூலமாக இந்திய விவசாயிகளை மொத்தமாக முடக்கி வைக்க நினைத்தது பா.ஜ.க. ஆட்சி.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் சொன்ன பொய்யை அம்பலப்படுத்திய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (10-08-2023)

யார் தடுத்தது? - 2

வேளாண் சட்டங்கள் மூலமாக இந்திய விவசாயிகளை மொத்தமாக முடக்கி வைக்க நினைத்தது பா.ஜ.க. ஆட்சி.

* விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகம் (ஊக்கப்படுத்தல் மற்றும் வசதி செய்தல்) மசோதாவின் மூலம் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் என்ற நடைமுறையே முற்றிலுமாக வழக்கொழிந்து போகும். இந்த மசோதா, விவசாயிகள், இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களைத் தவிர்த்து விட்டு யாருக்கு வேண்டுமானாலும் விற்பனை செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது. இதன்மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடமும் குறைந்தபட்ச ஆதார விலையும் இன்ன பிற வசதிகளும் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும்.

* விவசாயிகள் (முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதியின் மீதான ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவை மசோதாவின்படி, விவசாயம் சார்ந்த தொழில் நிறுவனங்கள் அல்லது மெகா சில்லறை வியாபாரிகள் எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன சொல்கிறதோ அதுதான் விலையாக மாற்றப்படும்.

* அத்தியாவசியப் பொருட்கள் (திருத்த) மசோதாவின் படி, பொருட்களைப் பதுக்கி வைத்து தேவையைப் பெருக்கி, அதன் மூலம் விலையைக் கூட்டி அதிக லாபம் பார்க்கலாம். அவசியப் பொருட்களை, அவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது. ஸ்டாக் வைக்கும் வரையறையையும் தளர்த்தி விட்டது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் சொன்ன பொய்யை அம்பலப்படுத்திய முரசொலி!

-– இந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக இந்திய விவசாயிகள் வீறுகொண்டு எழுந்தார்கள். தலைநகர் டெல்லியையே முடக்கினார்கள். அவர்கள் நடத்திய படையெடுப்பு –- இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்று சொல்லும் வரைக்கும் தொடர்ந்தது. ‘இரும்பு மனிதர்’ மோடியை அடிபணிய வைத்தார்கள் இந்திய விவசாயிகள். இத்தகைய போராட்டம் நடத்தாமல் இருந்திருந்தால் மூன்று வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்திருக்கும். இருந்த வாய்ப்புகளையும் மொத்தமாக இழந்திருப்பார்கள் விவசாயிகள். விவசாயிகள் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன் என்ற வாக்குறுதி நிறைவேறியதா என்றால் இதுவரை இல்லை. இப்படிச் செய்யவிடாமல் தடுத்தது யார்? எதிர்க்கட்சிகளா?

2 கோடி பேருக்கு வேலை:

“ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவோம்” என்றார் பிரதமர் மோடி. தரப்பட்டதா? இல்லை.

இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (CMIE) படி, ஆகஸ்ட் 2022 இல் வேலையின்மை விகிதம் 12 மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.3 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42 சதவீதமாக இப்போது உள்ளது. இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் சாதனையாகும்.

நவம்பர் 8, 2016 அன்று, பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதன் விளைவாக 50 லட்சம் பேர் வேலையை இழந்தார்கள். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பை PLFSஇன்படி 2017-–18 வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகாலம் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டது. மிக மோசமான ஜி.எஸ்.டி. வரியும் தொழில் வளர்ச்சியை முடக்கி வேலை வாய்ப்பைக் குறைத்தது. அடுத்து வந்தது கொரோனா. நோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடாமல், தடுப்பூசியும் போடாமல் பா.ஜ.க. அரசு இருந்தது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வாக ஊரடங்கு மட்டுமே இருந்தது. இதுவும் பலரது வேலையைக் காலி செய்தது. 2 கோடிப் பேர் வேலையை இழந்தார்கள். வேலை இழப்புகள் அதிகமாக தொடரும் காலமாக மோடி ஆட்சிக் காலம் இருந்தது.

இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற யார் தடுத்தது?.. பிரதமர் சொன்ன பொய்யை அம்பலப்படுத்திய முரசொலி!

ஒன்றிய பணியாளர் துறை அமைச்சர், கடந்த எட்டு ஆண்டுகளில் 22 கோடி அரசு வேலை விண்ணப்பங்கள் பெறப்பட்டதாகவும், 7.2 லட்சம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளு மன்றத்தில் தெரிவித்தார். 2014 முதல் ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தந்திருந்தால் ஒன்பது ஆண்டு காலத்தில் 18 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். கிடைத்ததா? என்றால் இல்லை.

நாட்டில் அதிகமாக பதிவு செய்து, வேலை கிடைக்காமல் இருப்பவர்களின் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2022 ஆம் ஆண்டு உயர்ந்தது. இதுதான் பா.ஜ.க. ஆட்சியின் சாதனையாகும். இதுதான் பா.ஜ.க. ஆட்சியில் வேலை பெறுவோர் நிலைமை ஆகும். அதனால்தான் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாளை ‘வேலைவாய்ப்பின்மை தினமாக’ கொண்டாடி வருகிறது இளைஞர் காங்கிரஸ். இது பொருத்தமான பெயராகவே அமைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரை விட டிசம்பரில் வேலை வாய்ப்பின்மை அதிகம் ஆனது. நவம்பரில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8 விழுக்காடு என்றால் டிசம்பரில் 8.3 விழுக்காடு ஆனது. இது யார் குற்றம்? எதிர்க்கட்சிகளின் குற்றமா?

ஒன்பது ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உடனடியாகத் தர வேண்டும் என்று கடந்த ஆண்டு அறிவித்தார் பிரதமர். 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை என அறிவிக்கப்பட்டது. அதிலும் 70 ஆயிரம் பேருக்குத்தான் வேலை தரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 8.72 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்தர சிங் கடந்த ஆண்டு சொன்னார். அதனை நிரப்பும் எந்த முயற்சியும் பா.ஜ.க. அரசிடம் இதுவரை இல்லை.

இப்படி தான் சொன்ன –

* கருப்புப்பணத்தை மீட்பேன், 15 லட்சம் வரை இந்தியர்கள் பெறலாம்.

* விவசாயிகளுக்கு அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையை இரண்டு மடங்கு ஆக்குவேன்.

* ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிப்பேன் – - ஆகிய மூன்று முக்கியமான இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதா? இல்லை என்றால், அதனை நிறைவேற்ற முடியாமல் தடுத்தது எதிர்க்கட்சிகளா?

banner

Related Stories

Related Stories