முரசொலி தலையங்கம்

பாலின இடைவெளியைக் குறைக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’.. மகளிர் மாண்பு காக்கும் முதல்வர் - முரசொலி புகழாரம்!

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள்.

பாலின இடைவெளியைக்  குறைக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’.. மகளிர் மாண்பு காக்கும் முதல்வர் - முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகளிர் மாண்பு காக்கும் முதல்வர்!

'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். திராவிட மாடல் அரசின் மாபெரும் சமூக வளர்ச்சித் திட்டமாக இது அமைந்துள்ளது.

பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் நாளன்று இத்திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் பெறப் போகிறார்கள். ஒரு கோடி குடும்பங்களுக்கான கலைஞர் நிதி, மு.க.ஸ்டாலின் நிதி, திராவிட மாடல் அரசின் நிதி போய்ச் சேர இருக்கிறது.

நீதிக்கட்சி ஆட்சி காலத்தில்தான், 1921 ஆம் ஆண்டு பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்ட உரிமை தரப்பட்டது. தந்தை சொத்தில் மகளுக்கும் சம உரிமை உண்டு என்ற சட்டத்தை தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள்தான் 1989 ஆம் ஆண்டு பிறப்பித்தார்கள். பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவிகித இடஒதுக்கீடு தந்தவர் கலைஞர். உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு தரப்பட்டது. மகளிர் சொந்தக் காலில் நிற்கவும், அவர்கள் பொருளாதாரச் சுதந்திரம் பெற்றவர்களாக வலம் வரவும் மகளிர் சுய உதவிக் குழுக்களை தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் தொடங்கி வைத்தவர் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இப்போது ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் அவர்கள் இட்ட முதல் கையெழுத்து என்பது மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தித் தந்தது ஆகும். இதுவரை பலநூறு கோடி பயணங்களை பெண்கள் கட்டணமில்லாமல் மேற்கொண்டுள்ளார்கள். இந்த வரிசையில் தொடங்கப்பட்ட புதுமைப் பெண் என்ற திட்டமும் தொடங்கப்பட்டு, அதற்கு மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அவர்கள் பெயர் சூட்டப்பட்டது.

பாலின இடைவெளியைக்  குறைக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’.. மகளிர் மாண்பு காக்கும் முதல்வர் - முரசொலி புகழாரம்!

அரசு பள்ளியில் படித்து, கல்லூரிக் கல்வியை அடையும் மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இது. பணமில்லாமல் மகளை படிக்க வைக்கத் தயங்கும் பெற்றோரின் கவலையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது இந்தத் திட்டம். இதன் மூலமாக அரசுப் பள்ளி மாணவிகளின் கல்லூரி நுழைவு அதிகம் ஆகி இருக்கிறது. அதை விட, மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரிக்கு போக முடியாமல் இருந்த மாணவிகள் இந்த ஆண்டு கல்லூரியில் சேர முன் வந்துள்ளார்கள். சமூக மாற்றம் என்பது இதுதான். இந்தத் திட்டத்தின் உண்மையான நோக்கம் இதுதான். அதில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

அடுத்து இதோ வந்துவிட்டது... ஒட்டுமொத்த பெண் குலத்தின் விடியலான 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை'!

''தொடக்க காலத்திலிருந்தே தாய்வழிச் சமூக முறைதான், மனிதகுலத்தை வழிநடத்தி வந்திருக்கிறது. உழவுக் கருவிகளைக் கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறிய போதுகூட, பெண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில், மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கல்வியறிவு மறுக்கப்பட்டது.

பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்புக் கூட்டின் கதவினைத் திறந்து, பெண் அடிமைத்தனத்தைத் தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதாரச் சுதந்திரத்தை மீட்க எத்தனையோ சமூகச் சீர்திருத்தவாதிகள் பணியாற்றினார்கள்" என்று ஆயிரமாண்டு வரலாற்றை மிகச் சுருக்கமானச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெண்குலத்தை முன்னேற்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட அனைத்து திட்டங்களையும் வரிசைப்படுத்தினார். இருப்பினும் இன்றைய சமூக உண்மையையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை.

பாலின இடைவெளியைக்  குறைக்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’.. மகளிர் மாண்பு காக்கும் முதல்வர் - முரசொலி புகழாரம்!

''இப்படி எண்ணற்ற திட்டங்களை மகளிருக்காக நாம் செயல்படுத்தி வந்தாலும், உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report 2023), தரவரிசைப் படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127 – ஆவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதற்கு முக்கிய காரணமாக பெண்களின் பொருளாதார நிலைமையும், கல்வி நிலையுமே உள்ளன. இந்த இரு காரணங்களில் முன்னேற்றம் காணாமல் சமூகத்திலும், குடும்பங்களிலும் மகளிர் உரிய அங்கீகாரம் பெற இயலாது.

இதற்காகத்தான் நமது அரசு பெண்களின் உயர்கல்வியினை இடைவெளியின்றி தொடர்ந்து பயில உதவும் வகையில், உயர் கல்வியினை நிறைவு செய்யும்காலம் வரை, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் “புதுமைப்பெண்” என்ற முன்னோடித் திட்டத்தைச் செயல்படுத்தி அதன்மூலம் மாதந்தோறும் ஏறக்குறைய இரண்டு இலட்சம் மாணவியர் பயனடைந்து வருகிறார்கள். இந்த வரிசையில் மகளிருக்கு மகுடம் சூட்டும் வகையில் மகளிர் உரிமைத் தொகையை மாதம்தோறும் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது" என்று சொன்னார்கள் முதலமைச்சர் அவர்கள்.

உலகளாவிய பாலின இடைவெளி குறியீட்டை உலகளாவிய பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டு வருகிறது. பாலின சமத்துவத்தை உருவாக்க வேண்டுமானால் பெண்களின் பொருளாதார வளம் அதிகமாக வேண்டும். அவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக வேண்டும். அவர்களது கல்வித் திறன் அதிகரிக்க வேண்டும். உடல் நலம் சீராக வேண்டும். அவர்கள் உயிர்வாழும் காலம் அதிகமாக வேண்டும். இந்த அளவீடுகளைக் கொண்டே பாலின சமத்துவம் வரையறுக்கப்படுகிறது.

தமிழினத் தலைவர் கலைஞரும் - திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களின் உண்மையான முழுமையான நோக்கம் என்பது பாலின இடைவெளியைக் குறைக்கும் திட்டங்கள் ஆகும். சரிநிகர் சமூகமாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

- முரசொலி தலையங்கம்

banner

Related Stories

Related Stories