முரசொலி தலையங்கம்

நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் கைது.. பாஜக MP-யை காக்க உடைபட்ட செங்கோல் -முரசொலி விமர்சனம்!

நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் கைது.. பாஜக MP-யை காக்க உடைபட்ட செங்கோல் -முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (29-05-23)

செங்கோல் ஏந்தும் அறம் எங்கே?

அது சோழர் கால செங்கோலா? மடத்தில் தயார் ஆனதா? நகைக்கடையில் தயார் ஆனதா? அப்படி ஒரு வழக்கம் இருந்ததா? மவுண்பேட்டன் கொடுத்தாரா? அது அதிகார மாற்றத்தின் அடையாளமா?அப்படியானால் இப்போது நடப்பதும் அதிகார மாற்றமா? அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரம் மாறப் போகிறதா? இப்படி எத்தனையோ கேள்விகள் சுற்றிச் சுழல்கின்றன. வாட்ஸ் அப்-களே வரலாற்று ஆதாரங்களாக ஆனபிறகு உண்மை வரலாறுகள் தங்களைத் தாங்களே தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. கடந்த காலங்களைக் கல்லறையில் வைத்துவிட்டு - நிகழ்கால நிதர்சன உண்மைகளைப் பேசுவது அறம் என்பதால், ‘செங்கோல் ஏந்தும் அறம் எங்கே?’ என்பதே நாம் எழுப்ப வேண்டிய கேள்வி.

செங்கோலை யாரும் கொடுக்கலாம். யாரும் தாங்கலாம். செங்கோலை அதன் தன்மையுடன் தாங்கும் கரம் வேண்டாமா? அந்தக் கரத்துக்கு அறம் வேண்டாமா? அந்தக் கரம் இருக்கிறதா? அந்த அறம் இருக்கிறதா?இதே தலைநகர் டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பெண் வீராங்கனைகள் அவர்கள். தங்களது ஆற்றலால் இந்தியாவுக்கு பல பரிசுகளைப் பெற்றுத் தந்தவர்கள் அவர்கள். இப்போது வீதியில் அமர்ந்து இரண்டு மாத காலமாக போராடி வருகிறார்கள். அறமற்ற பா.ஜ.க. அரசும், அக்கட்சியின் தலைமையும் அதற்கு இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். அவரும் இப்போது புதிதாக கட்டப்பட்டுள்ளதே நாடாளுமன்றம் அதில் அமரப் போகும் உறுப்பினர்தான். அதுவும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். பாலியல் தொல்லை கொடுத்தவர் பா.ஜ.க. எம்.பி.என்பதால் இதுவரை நடவடிக்கை இல்லை.

நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் கைது.. பாஜக MP-யை காக்க உடைபட்ட செங்கோல் -முரசொலி விமர்சனம்!

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர்களை தாக்குகிறது காவல்துறை. மண்டையை உடைக்கிறது. ‘நாங்கள் எங்களின் மதிப்பையும் மரியாதையையும் காக்கப் போராடுகிறோம். ஆனால் போலீஸ்காரர், பெண்களின் மார்பை பிடித்துத் தள்ளுகிறார்’ என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். செங்கோல் வளைந்து கிடக்கிறது. ‘உண்மை கண்டறியும் சோதனைக்கு நீங்கள் தயாரா?’ என்று பா.ஜ.க. எம்.பி.கேட்டார். ‘பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மை கண்டறி யும் சோதனைக்கு நாங்கள் அனைவரும் தயார்’ என்று மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருக்கிறார்கள். அதனை ஏற்றுக் கொண்டால் பா.ஜ.க. எம்.பி.யின் தலை உருளும். செங்கோலை நிமிர்த்தத் தயாராக இருக்கிறதா பா.ஜ.க. தலைமை? ஒற்றை மனிதரைக் காப்பாற்ற செங்கோல் உடைபட்ட காட்சியைத் தானே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. திறப்பு விழா காண்கிறது. இது மக்களாட்சியின் மாண்பைக் காக்கும் நாடாளுமன்றமாகத் திகழுமா? அதானி விவகாரத்தில் கேள்வி மேல் கேள்வி கேட்டவர்களுக்கு இதுவரை பதில் சொல்லவில்லை. இனியாவது இந்த புதிய கட்டடத்திலாவது மாட்சிமை தாங்கிய பிரதமர் பதில் அளிப்பாரா?

நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் கைது.. பாஜக MP-யை காக்க உடைபட்ட செங்கோல் -முரசொலி விமர்சனம்!

‘‘2014 ஆம் ஆண்டு 8 பில்லியன் டாலராக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இப்போது 140 பில்லியன் ஆனது எப்படி? 2014 ஆம் ஆண்டு உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 609 ஆவது இடத்தில் இருந்தவர், 2022 ஆம் ஆண்டு இரண்டாவது இடத்தை பிடித்தது எப்படி? விமான நிலையம் என்றாலும் அதானி தான். துறைமுகம் என்றாலும் அதானி தான். இந்தியா முழுக்க அனைத்து மாநிலங்களிலும் அதானி தான். அவர் எந்தத் தொழிலைத் தொடங்கி னாலும் நஷ்டம் அடைவது இல்லையே எப்படி? என்னைச் சந்திக்கும் மக்கள் அனைவரும் அதானிக்கும் பிரதமருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறார்கள். இவர்கள் இருவருக்குமான உறவு குஜராத் முதலமைச்சராக மோடி இருக்கும் காலத்தில் இருந்து தொடர்கிறது.

முன் அனுபவம் இல்லாதவர்கள் விமான நிலைய மேம்பாட்டுத் திட்டத்தை மேற்கொள்ள இயலாது என்ற விதியைத் திருத்தினார்கள். அதானிக்கு 6 விமான நிலையங்கள் தரப்பட்டன.இஸ்ரேலுக்கு பிரதமர் செல்கிறார்.அவருக்குப் பின்னாலேயே நடந்து அதானி செல்கிறார். உடனே இஸ்ரேல் இந்தியா இடையிலான அனைத்து தொழில்துறை ஒப்பந்தங்களும் அதானிக்கு வந்து விடுகிறது. இதே போன்று ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் செல்கிறார். உடனே மாயமந்திரமாக எஸ்.பி.ஐ. வங்கி அதானிக்கு 1 பில்லியன் டாலர் கடன் வழங்கு கிறது. வங்கதேசத்திற்கு மோடி முதல் முறையாக செல்கிறார். அங்கு மின் விநியோகத்திற்கான திட்டம் முடிவாகிறது. சில நாட்களுக்கு பின் வங்க தேசத்தின் மின்வாரியம் 25 ஆண்டுகளுக்கு மின் விநியோக உரிமையை அதானிக்கு வழங்குகிறது. 1500 மெகாவாட் மின்சார ஒப்பந்தம் அதானிக்கு கிடைக்கிறது.அங்கிருந்து இலங்கை செல்கிறார்.

நாட்டுக்காக பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் கைது.. பாஜக MP-யை காக்க உடைபட்ட செங்கோல் -முரசொலி விமர்சனம்!

ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபட்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல.அதானியின் வெளியுறவுக்கொள்கை” - என்று குற்றச்சாட்டு களை பகிரங்கமாக வைத்து வருகிறார் ராகுல்காந்தி. இவற்றுக்கெல்லாம் புதிய நாடாளு மன்றத்திலாவது பதில் கிடைக்குமா?நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை கேட்கப்பட்டது. அது அமைக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. ‘அதானி குழுமம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவிதமான முகாந்திரமும் கண்டறியப்படவில்லை’ என்று அந்த நிபுணர் குழு அறிக்கை கொடுத்திருக்கிறது மே 20 ஆம் தேதி. சபாஷ்! அதே நாளில் தான் 2000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. மக்கள் 2000 ரூபாய் நோட்டுக்கான தடையைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்பதை மறந்துவிட்டார்கள். சபாஷ்!

இந்திய நாட்டின் குடியரசுத் தலைவர் ஒரு பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒரு பெண் என்பதால் அவரை வைத்து புதிய கட்டடத்தை திறக்கக் கூடாது என்று முடிவெடுக்கிறது சனாதன மூளைகள். அந்த விவாதத்தை மறக்க வைக்கிறது செங்கோல் பெருமைகள். ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்கிறது சிலம்பு. அறியாது பிழை செய்த பாண்டியன் தன் உயிரைக் கொடுத்து நீதியை நிலைநாட்டிய காலம் இருந்தது. ‘வல்வினை வளைத்த கோலை மன்னவன்செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோல் ஆக்கியது’ என்கிறார் இளங்கோவடிகள். வீண் புகாரை வென்று பூம்புகார் கண்டது அந்தக் காலம். புகார்களை மறைக்க செங்கோல்கள் தூக்குவது இந்தக் காலம். ‘கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும்’ விரைவில் அமையுமின்!

banner

Related Stories

Related Stories