முரசொலி தலையங்கம்

’லீ குவான் யூக்கு சிலை’.. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: முரசொலி!

உலக நிர்வாக நெறிமுறைகளின் தந்தையாகத் திகழும் லீ குவான் யூ புகழ் வாழ்க!

’லீ குவான் யூக்கு சிலை’.. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (27-05-2023)

லீ குவான் யூ புகழ் வாழ்க!

தமிழ், தமிழ்நாட்டின் மேன்மைக்காக உழைத்த தமிழர்களுக்கு சிறப்புச் செய்வதைப் போலவே - இதே நோக்கம் கொண்டு செயல்பட்ட தமிழரல்லாதவர்களையும் சிறப்புச் செய்து வருகிறார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள். பூஜ்யமாக இருந்த சிங்கப்பூரை ராஜ்யமாக ஆக்கியவர் என்று போற்றப்படுபவர் லீ குவான் யூ அவர்கள். அதேநேரத்தில் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கி தமிழ் மொழியின் மேன்மைக்கும் அடித்தளம் இட்டவர் அவர்.

தொழில் வளர்ச்சிக்கான தனது பயணத்தை சிங்கப்பூரில் மேற்கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், லீ குவான் யூ-க்கு தமிழ்நாட்டில் சிலையும், அவர் பெயரால் நூலகமும் அமையும் என்று செய்த அறிவிப்பைக் கேட்டதும், அரங்கம் அதிர தமிழர்கள் அனைவரும் கைதட்டியபடியே இருந்தார்கள்.

‘‘சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ அவர்களால்தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ அவர்கள்.

சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ அவர்கள் பேரறிஞர் அண்ணாவை, தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். தனது அலுவலகத்துக்கு அண்ணா அவர்களை அழைத்து விருந்து கொடுத்தார். அதனால்தான் லீ குவான் யூ இறந்த போது ‘சிங்கப்பூரின் நாயகன்’ என்று போற்றினார் தலைவர் கலைஞர் அவர்கள். அத்தகைய லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்துள்ளோம். எனவே லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

’லீ குவான் யூக்கு சிலை’.. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: முரசொலி!

சிங்கப்பூரின் பிரதமராக இருந்தவருக்கு இன்னொரு நாட்டில் சிலை அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகக் கூட இருக்கக் கூடும். அத்தகைய பெருமைக்குரியவர் தான் லீ குவான் யூ அவர்கள்.

சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரே இந்திய மொழி தமிழ் மொழிதான். தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட மூன்று நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. ( இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய மூன்றும் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கும் நாடுகள்) சிங்கப்பூர் கல்வி அமைச்சின் இருமொழித் திட்டத்தின்படி தமிழ் இரண்டாம் மொழிப்பாடமாக அனைத்துப் பள்ளிகளிலும் இருக்கிறது. தொடக்க காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் கற்பிக்க ஆசிரியர்களை அழைத்துச் சென்றார்கள். இப்போது அங்குள்ள தேசிய ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலேயே கற்பிக்கப்பட்டு தமிழ் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகமும் தமிழ் ஆராய்ச்சிக் கழகமும் இணைந்து இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை தமிழில் வழங்குகிறது.

அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழைப் பார்க்கலாம். அறிவிப்புகளில் தமிழைக் கேட்கலாம். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம். அரசு அலுவலகக் கோப்புகளில் தமிழைக் காணலாம். விமானச் சேவைகளில் தமிழ் முக்கிய இடம் பெற்றுள்ளது. தமிழ் நிகழ்ச்சிகளை சிங்கப்பூர் அரசே நிகழ்த்துகிறது. தமிழ் இதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் அதிகம் உள்ளன. சிங்கப்பூர் நாணயத்திலும் தமிழ் உள்ளது. நூலகத்தில் தனித்தனிப் பிரிவுகளில் தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படி எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என இருக்கும் நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. இதனைக் கட்டமைத்தவர் லீ குவான் யூ அவர்கள்.

’லீ குவான் யூக்கு சிலை’.. தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு: முரசொலி!

சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் லீ குவான் யூ. சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர். இந்தக் கட்சி 1954 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அக்கட்சியை 1959 முதல் 1990 வரை 7 முறை வெற்றி பெற வைத்தவர் இவர். இந்தக் காலக்கட்டத்தில் இவரே பிரதமராகவும் இருந்தார். 2004–-2011 ஆகிய காலக்கட்டத்தில் Minister Mentor பதவியில் பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு மறைந்தார். சிங்கப்பூரை பொருளாதார ரீதியாகக் கட்டி எழுப்பியவர் லீ குவான் யூ என்பதை அனைவரும் அறிவார்கள். பொருளாதார மேம்பாட்டை அடைந்த நாடுகள் எத்தனையோ உண்டு. அதனால் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமே லீ குவான் யூ–-வைப் போற்றுவதில்லை.

ஒரு நாட்டின் பன்முகத்தன்மையை வளர்ப்பதன் மூலமாக மட்டுமே அந்த நாட்டை அனைத்து வகையிலும் வளர்க்க முடியும் என்று சிந்தித்து வளர்த்தவர் லீ குவான் யூ.

அவர் மறைந்த போது தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலும், தென் மாவட்டங்களிலும் படம் வைத்து அஞ்சலி செலுத்தியது எதற்காக? அவருக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் சிலையும் நூலகமும் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பது எதற்காக?

தொடக்க காலத்தில் சோசலிச, பொதுவுடைமைச் சிந்தனையாளராகவே தன்னை அவர் அடையாளப்படுத்திக் கொண்டார். தொழிற்சங்க வழக்குகளில் அதிகம் வாதாடினார். இடதுசாரி மாணவர் அமைப்புகளின் போராட்டங்களை ஆதரிப்பவராக இருந்தார். தேசிய இனங்களின் பிரச்சினையை உள்வாங்கி இருந்தார். தனது நாடு பெரும்பான்மை இனவாதத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். பல்வேறு இனம், மொழி, மத மக்கள் வாழும் நாட்டில் அனைவருக்கும் சம வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அதனால் எழும் போராட்டங்களே அந்த நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் என்று நினைத்தார். அவருக்கு அண்மை நாடான இலங்கையின் சூழலானது இதனை உணர்த்துவதாக இருந்தது. பெரும்பான்மை சிங்கள இனவாதம், அந்த நாட்டைச் சிதைத்தது போன்ற சூழல் இங்கும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியான முடிவை எடுத்தார்.

அனைத்துத் தரப்பினருக்கும் ஜனநாயக சுதந்திரத்தை வழங்குவதன் மூலமாக நாட்டைக் கட்டமைக்க முடியும் என்று மிகத் தெளிவாகக் கருதினார் லீ குவான் யூ. தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவந்ததன் மூலமாக இலங்கையில் மிகப்பெரிய கலவரங்கள் தொடங்கிய 1956 ஆம் ஆண்டுதான் லீ குவான் யூ முதன்முதலாக இலங்கைக்குச் சென்றிருந்தார். அந்தக் காட்சிகள்தான் அவரது பன்முக அரசியலை உள்வாங்கும் மனதை உருவாக்கியது.

தொடக்கத்தில் சீனமொழி நாடாக சிங்கப்பூரை ஆக்க சிலர் முயற்சிகள் மேற்கொண்டார்கள். அதனைத் தடுத்தார் லீ குவான் யூ. ஆங்கிலத்தை அலுவலக மொழியாக ஆக்கினார். அதன் மூலமாக அனைத்து மொழியினரையும் இணைத்தார். அனைவரையும் உள்ளடக்கிய வெற்றி இதன்மூலம்தான் சாத்தியமானது.

அனைத்து இன, மொழியினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் மூலமாக சிங்கப்பூரை உருவாக்கி – உலக நிர்வாக நெறிமுறைகளின் தந்தையாகத் திகழும் லீ குவான் யூ புகழ் வாழ்க!

banner

Related Stories

Related Stories