முரசொலி தலையங்கம்

3 முறை போர்.. விளைவுகளை காலம் கடந்து உணர்ந்த பிரதமர்: இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

காலம் கடந்தாவது உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்.

3 முறை போர்.. விளைவுகளை காலம் கடந்து உணர்ந்த பிரதமர்: இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (21-01-2023)

இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

காலம் கடந்தாவது உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப். ‘இந்தியா மீது மூன்று முறை போர் தொடுத்து பாடம் கற்றுக் கொண்டோம்’ என்று அவர் சொல்லி இருப்பது உண்மையான மனவருத்தமாக இருக்குமானால் பாராட்டலாம். இந்தியாவுடன் நடத்திய போரால் மட்டுமல்ல, பயங்கரவாதம் மற்றும் வகுப்புவாதக் கொள்கைகளாலும் அனைத்துவிதமான நெருக்கடி களையும் சந்தித்து வரும் பாகிஸ்தான் நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் இதுபோன்று தனது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்வதைக் கவனமாக கவனிக்க வேண்டும்.

தற்போது பாகிஸ்தான் பிரதமராக இருப்பவர் ஷபாஸ் ஷெரீப். இவர் துபாயைச் சேர்ந்த அல் அரேபியா செய்தித் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் பாகிஸ்தான் நாடு மனமாற்றம் அடைந்து வருவது தெரிகிறது.

‘’நான் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களுக்கு ஒரு அழைப்பு விடுக்கிறேன். நாம் ஒன்றாக அமர்வோம். உண்மையான ஈடுபாட்டுடன் பேசுவோம். முக்கியப் பிரச்சினைகளில் தீர்வு காண்போம்” என்று சொல்லி இருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர். அனைத்தையும் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்பதுதான் பாகிஸ்தான் நிலைப்பாடாக மாறி இருக்கிறது.

3 முறை போர்.. விளைவுகளை காலம் கடந்து உணர்ந்த பிரதமர்: இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

போர் என்ற நிலைப்பாட்டில் இருந்து அந்த நாடு முற்றிலும் மாறி இருப்பதையும் அவரது பேட்டி உணர்த்துகிறது. ‘‘நாம் அமைதியாக வாழ்ந்து முன்னேற்றம் காண்பதா அல்லது ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டு நேரத்தையும் வளங்களையும் வீணடிப்பதா என்பது நமது கைகளில்தான் உள்ளது. நாங்கள் இந்தியாவுடன் மூன்று முறை போரிட்டு இருக்கிறோம். இந்த போர்கள் துன்பத்தையும், வறுமையையும், வேலை யில்லாத் திண்டாட்டத்தையும்தான் கொண்டு வந்துள்ளன. நாங்கள் பாடம் கற்றுக் கொண்டு இருக்கிறோம்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ‘‘எங்களது உண்மையான பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டு நாங்கள் இந்தியாவுடன் சமாதானமாக வாழ விரும்புகிறோம். வெடிகுண்டுகளிலும், வெடி பொருள்களிலும் எங்களது பொருளாதார வளங்களை வீணடிக்க விரும்பவில்லை. இதுதான் இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு நாங்கள் விடுக்க விரும்புகிற செய்தி” என்று அவர் சொல்லி இருக்கிறார்.

திருந்திய பாகிஸ்தான் நாட்டின் திருந்திய பிரதமராக அவரது பேட்டியானது அமைந்துள்ளது. இந்த நிலைப்பாட்டில் பாகிஸ்தான் உறுதியாக இருக்க வேண்டும்.

* 1947 -– இந்திய எல்லைப் பகுதிக்குள் பாகிஸ்தான் படைகள் ஊடுருவியது. இது அவர்களுக்கு தோல்வியில் முடிந்தது. 1947 அக்டோபர் 22 தொடங்கி 1948 டிசம்பர் 31 வரை இந்தப் போர் நடந்தது.

3 முறை போர்.. விளைவுகளை காலம் கடந்து உணர்ந்த பிரதமர்: இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

* 1965 –- ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடந்தது. ஜிப்ரால்டர் நடவடிக்கை என்ற பெயரால் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தானியப் படைகள் நுழைந்தன. இரண்டு தரப்பிலும் பலரும் பலியானார்கள். இதன் பிறகுதான் தாஷ்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தானது.

* 1971-– கிழக்கு பாகிஸ்தானில் வங்கதேச விடுதலைப் போரின் போது பாகிஸ்தான் படைகள் சரண் அடைந்தன. இதன்பிறகு பங்களாதேஷ் -– வங்கதேசம் உருவானது. இதனைத்தான் மூன்று போர்கள் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர். 1999 ஆம் ஆண்டு நடந்த கார்கில் போரை அவர் மறந்துவிட்டார்.

லாகூரில் 1999 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இந்தியா -– பாகிஸ்தான் நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தது. உடன்பாட்டில் பாகிஸ்தான் கையெழுத்திட ஒப்புக் கொண்டு விட்டு கையெழுத்துப் போடவில்லை. மேலும், பாகிஸ்தான் படைகளை தீவிரவாதிகள் போர்வையில் இந்தியாவுக்குள் அனுப்பினார்கள். பதர் நடவடிக்கை என இது அழைக்கப்பட்டது. காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும், சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைப்பதும், காஷ்மீர் பிரச்சினையை அனைத்துக்கும் நிபந்தனையாக வைப்பதும் பாகிஸ்தானின் தந்திரமாக மாறியது. ‘எனக்கே இது தெரியாது’ என்றார் அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். ராணுவத் தளபதி பர்வேஸ் முஷ்ரப்தான் காரணம் என்று தப்பிக்கப் பார்த்தார் அவர். எதுவாக இருந்தாலும், பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்து விரட்டியது இந்திய இராணுவம். உலக நாடுகளின் கண்டனத்துக்கு பாகிஸ்தான் உள்ளானது. அதன் பிறகு இதுவரை போர் நடத்தவில்லை என்றாலும், எல்லைச் சண்டைகளும், ஊடுருவல்களும் தொடரவே செய்கின்றன. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

பாகிஸ்தான் நாட்டின் பொருளாதார நிலைமையானது மிக மோசமாக ஆனதுதான் அந்த நாட்டுப் பிரதமரை இப்படி பேச வைத்துள்ளது. பாகிஸ்தான் தொடர்பான சில வீடியோக்களை வைத்து பி.பி.சி. இணையதளம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் நிலைமையை விளக்கி உள்ளது. கோதுமை மாவுக்காகவும், ரொட்டிக்காகவும் மக்கள் சண்டையிடும் வீடியோக்கள்தான் அவை. “பாகிஸ்தானின் பொருளாதார அவல நிலை மற்றும் விலைவாசி உயர்வின் அளவை இவை காட்டுகின்றன” என்று பி.பி.சி. கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் கருவூலம் காலியாகி வருவதாகவும், பாகிஸ்தானிடம் இருக்கும் பணம் அதன் இறக்குமதிக்கு மட்டும்தான் போதுமானது என்றும் அந்த கட்டுரையாளர் சொல்லி இருக்கிறார்.

3 முறை போர்.. விளைவுகளை காலம் கடந்து உணர்ந்த பிரதமர்: இனியாவது திருந்துமா பாகிஸ்தான்?

ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 240 ரூபாய், அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துவிட்டது, வெங்காயத்தின் விலை கிலோ 240 ரூபாய் என்றும் அவர் சொல்லி இருக்கிறார். எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க அனைத்து நிறுவனங்கள், கடைகள், மால்கள் ஆகியவற்றை முன்கூட்டியே மூடவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இரவு 8.30 மணிக்கு மேல் இவற்றை திறந்து வைத்திருக்க முடியாது. இதை வைத்துப் பார்க்கும் போது இலங்கையின் நிலைமையை பாகிஸ்தான் அடையப் போவது தெரிகிறது.

சொந்த நாட்டு மக்களை உள்நாட்டுப் போர் என்ற பெயரால் அழித்தது இலங்கை அரசு. போரும், ஆயுதமும் நாற்பது ஆண்டு கால நிதி நிலவரமாக இலங்கையில் ஆனது. அதேபோல், அண்டை நாட்டின் மீது யுத்தம் என்ற பெயரால் ஆயுதங்களுக்குச் செலவு செய்வதையே வேலையாக வைத்திருந்தது பாகிஸ்தான். காலம் கழித்தாவது பாகிஸ்தான் பிரதமர் உணர்ந்திருக்கிறார். இதில் இனியாவது உறுதியாக இருந்து அமைதியை நிலைநாட்ட முயற்சிப்பார்களா என்பதைக் கவனிப்போம்!

banner

Related Stories

Related Stories