முரசொலி தலையங்கம்

"பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

1928 ஆம் ஆண்டு தனது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் என்று பெயர் மாற்றிக் கொண்டார் பகத்சிங்.

"பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-09-2022)

பிரதமர் சொல்லும் பகத்சிங் கொள்கை என்ன?

முதலில் சர்தார் படேல். அடுத்ததாக நேதாஜி. இப்போது, பகத்சிங்!

பா.ஜ.க. தலைமையானது கபளீகரம் செய்து கொள்ளும் இந்திய ஆளுமைகளின் பட்டியல் இது. ‘புரட்சியாளர்கள் மறைந்த பிறகு அவரது எதிரிகளால் அவர்கள் கபளீகரம் செய்யப்படுவார்கள்’ என்றார் லெனின். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயர் சூட்டப்படும் என்று அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். வரவேற்க வேண்டியதே!

“நாம் நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் இலட்சியங்களைப் பின்பற்றி அவர்கள் கனவு கண்ட இந்தியாவை உருவாக்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் பிரதமர். பிரதமர் சொல்லும் பகத்சிங் கொள்கைகள் என்ன என்பதை நினைவூட்டிக் கொள்வதே அவருக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும். செப்டம்பர் 28 ஆம் நாளான இது, பகத்சிங் பிறந்த தினமும் ஆகும்!

“பாலுக்கு அழும் குழந்தை, கல்விக்கு ஏங்கும் மாணவன், வேலை தேடும் இளைஞன்... இவைகள் இல்லாத இந்தியாவே சுதந்திர இந்தியா” என்றார் பகத்சிங்.

"பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

அதற்காகவே தனது நண்பர்களுடன் இணைந்து ‘இந்திய குடியரசுச் சங்கம்’ உருவாக்கியவர் பகத்சிங். அதன்பிறகு நவஜவான் பாரத் சபை என்ற அமைப்பையும் உருவாக்கினார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் சுதந்திரக் குடியரசை நிறுவுவதுதான் இந்த அமைப்பின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது. மதவாத போக்குகளற்ற தொழில் மற்றும் சமூக இயக்கங்களை ஆதரிப்பதை இந்த இயக்கம் தனது பாதையாக வடிவமைத்துக் கொண்டது. தொழிலாளர்கள், விவசாயிகளைத் திரட்டுவதன் மூலமாக சுதந்திரத்தை அடைய முடியும் என நினைத்தார். தனது இறுதி இலக்கு சோசலிசம்தான் என்று அறிவித்தார். அதனால் 1928 ஆம் ஆண்டு தனது அமைப்பின் பெயரை இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசு சங்கம் என்று பெயர் மாற்றிக் கொண்டார் பகத்சிங்.

“தொழிலாளி வர்க்கம் அந்நிய மூலதனத்தின் தாக்குதல்,- இந்திய மூலதனத்தின் தாக்குதல் என்ற இரண்டையும் எதிர்கொள்கிறது. சோசலிசம்தான் முழு சுதந்திரத்தையும் வழங்கும்” என்றார் பகத்சிங். “புரட்சியாளன் என்றால் புதிய சமூகத்தைப் படைக்க மக்களுடன் பணியாற்றுபவன் என்று பொருள்” என்றவர் அவர்.

நாடு முழுவதும் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சியை ஒடுக்க பொதுப் பாதுகாப்புச் சட்டம், தொழில் தகராறு சட்டம் போன்றவற்றைக் கொண்டு வந்தது ஆங்கில அரசு. மீரட் சதி வழக்கு என்ற பெயரால் 31 கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். இதற்கு எதிர்வினையாகவே 1929 ஏப்ரல் 28 அன்று நாடாளுமன்றத்தில் குண்டு வீசினார் பகத்சிங். ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றுதான் அவர் முழங்கினார்.

"பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

நாடாளுமன்றத்தின் மீது குண்டு வீசிய பகத்சிங், “இந்தியாவின் கோடானு கோடி மக்களின் வியர்வை பணத்தை செலவு செய்து ஆடம்பரமாகவும், பகட்டாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தப் பாராளுமன்றம் போலித்தனமும், பாசாங்கும் நிறைந்த உழைக்கும் மக்களுக்கு கேடுகள் விளைவிக்கக் கூடாது” என்று சொன்னார்.

“உணவை உற்பத்தி செய்யும் விவசாயி பசியோடு இருக்கிறார். துணி நெய்து கொடுப்பவர்களின் குழந்தைகள் துணியில்லாமல் இருக்கிறார்கள். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளாக முதலாளிகள் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை வெகுகாலம் நீடிக்காது. இந்த சமூகத்தை மாற்றும் எரிமலைகள் நாங்கள்” என்று நீதிமன்றத்தில் சொன்னார் பகத்சிங்.

சிறையில் 151 புத்தகங்களை வாசித்து, ஆறு சிறிய நூல்களை வெளி யிட்டார் பகத்சிங். ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ என்பது (why am i atheist) அவரது புகழ் பெற்ற நூலாகும். பொதுவுடமைத் தலைவராக மிளிர்ந்த ஜீவா அவர்கள் மொழிபெயர்க்க, தந்தை பெரியார் அவர்கள் அதனை புத்தகமாக அச்சிட்டு வெளியிட்டார்கள்.

“நான் ஒரு யதார்த்தவாதி. என்னுள் எழும் உணர்ச்சியை பகுத்தறிவின் துணையால் அடக்கியாள முயற்சித்து வருகிறேன். இந்த முடிவை அடைவதில் நான் எப்பொழுதுமே வெற்றி பெற்று வரவில்லை. ஆனால் மனிதனுடைய கடமை இடையறாது முயற்சிப்பதே” என்ற அவர், “கற்றுணர்” என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.

“முன்னேற்றத்தை நாடும் எந்த மனிதனும் பழைய மதத்தின் ஒவ்வொரு பாகத்தையும் அலசி ஆராய்ந்து தீர வேண்டும். பழைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் போட்டிக்கு அழைத்து தீர வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். அனைத்து மதக் கருத்துகளையும் விமர்சிப்பவராக பகத்சிங் இருந்துள்ளார். இறுதி வரை நாத்திகனாகவே இருப்பேன் என்றார். அப்படியே இருந்தார்.

"பகத்சிங் கனவு கண்ட இந்தியா என்ன தெரியுமா?".. மோடிக்கு பாடம் எடுத்த முரசொலி தலையங்கம்!

தூக்கிலிடும் முன் உங்களது கடைசி ஆசை என்ன என்று பகத்சிங்கிடம் கேட்கப்பட்டது. ‘போகா கையால் ரொட்டி தயாரித்து தர வேண்டும்’ என்றார். பெண்களின் சிறையில் மலம் அள்ளுபவர் தான் இந்த போகா என்ற பெண். ‘நான் மலம் அள்ளுபவள். எனது கையால் ரொட்டி செய்து தரமாட்டேன்’ என்று பேபி சொன்னார். “எனது தாயும் மலம் அள்ளுகிறார். அதற்காக அவர் கையில் வாங்கி சாப்பிடாமல் இருந்திருக்கிறேனா? தனது பிள்ளைகளின் மலம் அள்ளுகிறவர் தாய் என்றால், ஊரார் பிள்ளைகளின் மலத்தை எல்லாம் அள்ளும் நீங்கள் தாயினும் மேலானவர்” என்றவர் பகத்சிங்.

சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. “புரட்சி என்பது ரத்தவெறி கொண்ட மோதலாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன் மூலம் அநீதியான இந்தச் சமூகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்” என்றார் பகத்சிங்.

“தனிநபர்களை ஒருவர் கொல்வது எளிது. ஆனால் அவர் கூறிய கருத்துகளை யாராலும் கொல்ல முடியாது” என்று சொன்னவர் பகத்சிங். அவர் கொள்கைகள் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றன!

“அநீதிக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்வோடு முடியப் போவதும் இல்லை” என்றும் சொன்னவர் அவர்!

1931 மார்ச் 23 அன்று பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். அவரை அழைத்துச் செல்வதற்காக சிறை அதிகாரிகள் வருகிறார்கள். புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டு இருந்தார் பகத்சிங். ‘சில நிமிடங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு புரட்சியாளனை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன்’ என்றார். அவர் வாசித்துக் கொண்டு இருந்த புத்தகத்தை எழுதியவர் லெனின். புத்தகத்தின் பெயர்: ‘அரசும் புரட்சியும்’!

banner

Related Stories

Related Stories