முரசொலி தலையங்கம்

இந்தியப் பொருளாதாரத்தை மோசமாக வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கு?: முரசொலி

இந்தியப் பொருளாதாரத்தை இவ்வளவு மோசமாக வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் கேட்பது சரியானதுதானே!

இந்தியப் பொருளாதாரத்தை  மோசமாக வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கு?: முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 23, 2022) தலையங்கம் வருமாறு:

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து பா.ஜ.க.வின் கத்துக்குட்டிகள் அள்ளிவிடும் புள்ளி விபரங்களுக்குப் பின்னால் இருப்பது பொய் மட்டும்தான், உண்மை இல்லை!

ஆதாரமற்ற புள்ளி விபரங்களை அடுக்கடுக்காகச் சொல்லி - இந்தியாவை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்று இருப்பதாக அவர்கள் சொல்லி வருகிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் ஒருவரான சுப்பிரமணியம் சுவாமியே இதனை தவறு என்று கிண்டல் செய்து வருகிறார். ‘இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்கும் செல்லவில்லை, தேக்க நிலைக்கும் செல்லவில்லை, அப்படி ஒரு கேள்வியே எழவில்லை’ என்று ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருந்தார். இதற்கு சுப்பிரமணியம் சுவாமி சிறப்பான பதில் ஒன்றைச் சொல்லி இருந்தார்.

‘‘நிர்மலா சீதாராமன் சொல்வது சரிதான். ஏனென்றால் இந்தியப் பொருளாதாரம் கடந்த ஆண்டே மந்த நிலைக்குச் சென்று விட்டது. இதனால் ‘இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லுமா?’ என்ற கேள்வியே எழாது” என்கிறார் சுவாமி.

அதுதான் மந்த நிலையில் தானே இருக்கிறது, எனவே மந்த நிலைமைக்கு போகுமா என்ற கேள்வியே எழவில்லை என்பது சுவாமியின் பதில். பா.ஜ.க.வின் சித்தாந்த எதிரியல்ல, சுவாமி. நண்பர். அதனை அடியொற்றி வருபவர்தான் சுவாமி. அவராலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை. ‘’ 5 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி. வளர்ச்சி குறித்து செம்மறி ஆடுகளைப் போலத் துள்ளிக்குதித்த பின்பு இப்போது ‘மந்தநிலை இல்லை’ என்று சொல்லும் நிலையில்தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றும் சுவாமி சொல்லி இருக்கிறார்.

இந்தியப் பொருளாதாரத்தை  மோசமாக வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கு?: முரசொலி

உடனே சுவாமிக்கு இவர்கள் ஏதாவது உள்நோக்கம் கற்பிப்பார்கள். ஆனால் இதையேதான் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவர்களும் வேறு சொற்களில் சொல்லி இருக்கிறார். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுக் கூட்டம் கடந்த வாரம் நடந்துள்ளது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ் வெளிப்படையாக சில தகவல்களைச் சொல்லி இருக்கிறார்.

‘’ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 5.40 சதவிகிதமாக இருக்கும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொல்லி இருக்கிறார். பணவீக்கமானது ஜூலை - – செப்டம்பர் என்ற காலாண்டில் 7.1 சதவிகிதம் வரை போகும் என்றும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார். பின்னர் குறைந்தாலும் சராசரியாக பணவீக்கம் என்பது 6.7 சதவிகிதமாக இருக்கும் என்பது அவரது கணிப்பு. ‘‘நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைவதையும், மந்த நிலை அபாயம் தொடர்வது குறித்தும் சர்வதேச நாணய நிதியம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் உயர் பணவீக்கத்தில் இருக்கிறது.

நாட்டில் இருந்து கடந்த சில மாதங்களில் மட்டும் 1 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் வெளியேறி உள்ளது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

இந்தியப் பொருளாதாரத்தை  மோசமாக வைத்திருப்பவர்கள் தமிழ்நாட்டிற்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கு?: முரசொலி

‘’கிராமப்புற தேவைகள் கவலையான போக்கைக் காட்டுகிறது. அரசியல் அபாயங்கள் போன்ற உலகளவில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளால் இந்தியப் பொருளாதாரம் சரிவை எதிர்கொள்கிறது. வங்கி அமைப்பில் பணப்புழக்கம் குறைந்துவிட்டது. விலைவாசி உயர்வு சற்று சரியத் தொடங்கினாலும் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையில் தான் உள்ளது” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

இதற்கு நிதி அமைச்சரோ, பா.ஜ.க.வினரோ என்ன பதில் சொல்லப் போகிறார்கள். சக்திகாந்த தாஸ், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் என்ற மிக உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்தான் சொல்கிறார்.

இதற்கு முன்னால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் ரகுராம் ராஜன் அவர்கள். அவரும் இதே கருத்தைத்தான் சில நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தார். ‘‘இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சியில் செல்கிறது. ஆனால் இந்த வளர்ச்சி எத்தகையது என்பதுதான் முக்கியமானது. இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பகுதி வேலையில்லா வளர்ச்சி ஆகும். அதாவது வேலைவாய்ப்புகளை உருவாக்காத வளர்ச்சி ஆகும். எல்லோரும் ஒரு மென்பொருள் புரோகிராமர் அல்லது ஆலோசகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் அனைவருக்கும் நிலையான கண்ணியமான வேலைவாய்ப்புகள் அவசியம். நாட்டின் வளர்ச்சி என்பது பரந்த மக்கள் தொகையைக் கணக்கில் கொண்டால் அதிகப்படியான வளர்ச்சியைப் பதிவு செய்திருக்க வேண்டும்” என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவின் கடனை அடைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். ரூ.52 லட்சம் கோடியாக இருந்த கடன் ரூ.152 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். 55 ரூபாயாக இருந்த பெட் ரோல் இப்போது 100 ரூபாயைத் தாண்டி போய்க் கொண்டு இருக்கிறது. 400 ரூபாயாக இருந்த சிலிண்டர் 1100 ரூபாயைத் தாண்டிக் கொண்டு இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை உயர்த்துவோம் என்றார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் போது டாலருக்கு 60 ரூபாயாக இருந்த மதிப்பு, இப்போது 76 ரூபாய் என உயர்ந்து ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது. இதுதான் பா.ஜ.க.வின் வளர்ச்சி சதவிகிதம் ஆகும். ஆனால் பேச்சைப் பார்த்தால், வாய்கிழியப் பேசுவார்கள்.

இந்தியப் பொருளாதாரத்தை இவ்வளவு மோசமாக வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசுக்கு யோசனை சொல்ல என்ன தகுதி இருக்கிறது? என்று நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன் கேட்பது சரியானதுதானே!

banner

Related Stories

Related Stories