முரசொலி தலையங்கம்

’இலவசமல்ல, மக்கள் நலமே’.. பா.ஜ.க-வின் அரசியல் தந்திரத்தை அம்பலப்படுத்தும் முரசொலி!

மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம் இதற்குள் அடங்கி இருக்கிறது.

’இலவசமல்ல, மக்கள் நலமே’..  பா.ஜ.க-வின் அரசியல் தந்திரத்தை அம்பலப்படுத்தும் முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஆகஸ்ட் 22, 2022) தலையங்கம் வருமாறு:

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிச்சலுகைக் காட்டுவது ஏன் என்று சொல்லி பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை. வங்கிகளில் வாங்கிய பல்லாயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்வதை எதிர்த்து பா.ஜ.க. வழக்கு தாக்கல் செய்வது இல்லை. ஆனால் ஏழைகளுக்கு, விளிம்பு நிலை மக்களுக்குச் செய்யும் உதவிகளுக்கு எதிராக பா.ஜ.க. நிர்வாகி ஒரு வழக்கைப் போட்டு இந்தியாவில் அதனை அதிமுக்கியமான பிரச்சினையாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார்.

டெல்லியைச் சேர்ந்த நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி எழுதி இருக்கிறார். ‘’இலவச சைக்கிளில் வந்து, இலவச பஸ் பாஸில் பேருந்து பயணம் செய்து, இலவச மதிய உணவு சாப்பிட்டு படித்தவன் நான். இவையெல்லாம் எனக்கு இல்லாவிட்டால் படித்திருக்க சாத்தியம் குறைவு. அடுத்த வீட்டுக்கு டி.வி. பார்க்கப் போய் கூனிக்குறுகி நின்ன எனக்கு சின்ன செல்ப்கான்பிடன்ஸ் கொடுத்தது இலவச டி.வி.” என்று அவர் எழுதி இருக்கிறார். ‘இலவசமாக வழங்கப்பட்டும் எந்தப் பொருட்கள் உபயோகமாக உள்ளன?’ என்று ஒருவர் கேட்ட கேள்விக்குத்தான் நிரஞ்சன் குமார் என்ற இளைஞர் இப்படி பதில் சொல்லி இருக்கிறார். பலன்பெற்றவர்களிடம் கேட்டால் இதுபோன்ற நியாயமான உண்மையான பதில்களைச் சொல்வார்கள்.

’இலவசமல்ல, மக்கள் நலமே’..  பா.ஜ.க-வின் அரசியல் தந்திரத்தை அம்பலப்படுத்தும் முரசொலி!

கொளத்தூரில் இந்துசமய அறநிலையத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்துப் பேசும் போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும் மிகச்சரியான விளக்கத்தைத் தந்துள்ளார்கள். அக்கல்லூரி மாணவ, மாணவியருக்கு இந்த ஆண்டுக்கான கட்டணச்சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் அவர்கள், ‘’கட்டணமில்லை என்று சொல்வதன் மூலமாக இதனை யாரும் இலவசம் என்று கருதிவிடக் கூடாது. இது உதவியும் அல்ல. கல்வியானது அனைவர்க்கும் எளிய முறையில் கிடைத்து, அனைவரும் முன்னேறியாக வேண்டும் என்ற முற்போக்கு எண்ணத்துடன் - மாணவ சமுதாயத்தின் மீதான உண்மையான அக்கறையால் அரசு செய்யும் கடமையாக இதனைக் கருதுகிறோம்.

‘இலவசம் வேறு, நலத்திட்டங்கள் வேறு’ என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது தொடர்பாக நாட்டில் பெரிய விவாதமே நடந்து வருகிறது. கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது இலவசம் ஆகாது. அறிவு நலம் சார்ந்தது கல்வி. உடல் நலம் சார்ந்தது மருத்துவம். இரண்டிலும் போதுமான அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என்று இந்த அரசு நினைக்கிறது. இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு, நான் முதல்வன், பள்ளிப் பிள்ளைகளுக்கு காலை சிற்றுண்டி, மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 ஆகிய திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலத்திட்டங்களாக உருவாக்கி செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவை எல்லாம் இலவச திட்டங்கள் அல்ல, சமூக நலத் திட்டங்கள் ஆகும். ஏழை எளிய விளிம்பு நிலை மக்களுக்கு உதவிகள் செய்யும் போது மட்டும், ‘இலவசங்கள் கூடாது’ என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு வந்து விடுவார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை” என்று சொல்லி இருக்கிறார்கள்.

’இலவசமல்ல, மக்கள் நலமே’..  பா.ஜ.க-வின் அரசியல் தந்திரத்தை அம்பலப்படுத்தும் முரசொலி!

இந்த உண்மையான அக்கறையின் வெளிப்பாடாக - இலவசத் திட்டங்கள் தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகி தொடர்ந்த வழக்கில் மாநில அரசுகளையும் எதிர்மனு தாரர்களாக சேர்க்க கோரி தி.மு.க. சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டு இருக்கிறது.

தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்துள்ள மனுவின் விரிவான விளக்கம் அமைந்துள்ளது.

தி.மு.க. ஆட்சியில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, ஏழைகளின் வீடுகளுக்கு கலர் டி.வி., பெண்கள் மேம்பாட்டுக்கு இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளதும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் வேறுபட்டு நிற்பதாகவும், அவர்களின் தேவைகள் மாறுபட்டதாக உள்ளதால், ஒரே திட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த இயலாது எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில், மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்த பொதுப்பட்டியல் அனுமதி அளித்துள்ளதாகவும், சமூக, பொருளாதார நலன், ஏற்றத் தாழ்வுகளைக் கருத்தில் கொண்டே இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழைகள் தங்களால் பூர்த்தி செய்ய முடியாத தேவைகளை இந்தத் திட்டங்கள் மூலம் அரசு வழங்கி வருவதாகவும், அவற்றை ஆடம்பரம் என்று கூற முடியாது எனவும் மனுவில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார். இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள், ஏழைக் குடும்பத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும், அதன் மூலம் குழந்தைகள் நல்ல கல்வி கற்க முடியும் எனவும், இப்படி பல வகைகளில் அதன் வீச்சு உள்ளதாகவும், குறிப்பிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி, எனவே அதனை இலவசம் என்று பொருள்படும்படி சாதாரணமாக கூறிவிட முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

‘’ஒன்றிய அரசு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பல வரிச் சலுகைகளை அளிக்கிறது. செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு திட்டத்தையும் இலவசம் என்கிற பெயரில் தடைசெய்துவிட இயலாது. அந்தத் திட்டங்களால் சமூகத்தில் கீழ்மட்டம் வரை ஏற்படும் பலன்களை கருத்தில் கொண்டுதான் நீதிமன்றம் முடிவு எடுக்க வேண்டும்” என்றும் தி.மு.க. மனுவில் கூறப்பட்டுள்ளது. இதுமிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகும்.

நீதிமன்றத்தில் தனக்குச் சாதகமான ஒரு தீர்ப்பைப் பெறுவதன் மூலமாக பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம் இதற்குள் அடங்கி இருக்கிறது.

’இலவசமல்ல, மக்கள் நலமே’..  பா.ஜ.க-வின் அரசியல் தந்திரத்தை அம்பலப்படுத்தும் முரசொலி!

அரிசியை விலையில்லாமல் கொடுத்ததால் பட்டினிச் சாவு இல்லை தமிழகத்தில். கட்டணமில்லா பேருந்து பயணத்தை பெண்களுக்கு அளித்துள்ளதால் அவர்களது சமூகப் பங்களிப்பு அதிகமாகி உள்ளது. இதன் பயன் இன்னும் சில ஆண்டுகளில் தெரியும்.

‘’திருவாரூரில் தேர் ஓடுவதற்காக சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. தேர், நான்கைந்து நாட்கள் ஓடுகிறது. மற்ற முன்னூறு நாளும் மக்களுக்குத்தான் பயன்படுகிறது” என்று பேசினார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். அந்தவகையில் அனைத்துமே மக்களை மனதில் வைத்து தீட்டப்படும் திட்டங்களே!

banner

Related Stories

Related Stories