முரசொலி தலையங்கம்

“கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே காலம் நகர்கிறது” : கலைஞரின் மூத்த பிள்ளையாம் ‘முரசொலி’ ஏடு உருக்கம் !

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தும் நிறைந்தும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது ஆகஸ்ட் 7 ஆம் நாள் நினைவுக்கு வருகிறதே தவிர மற்ற நாட்களில் எல்லாம் அவர் இருக்கிறார்.

“கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே காலம் நகர்கிறது” : கலைஞரின் மூத்த பிள்ளையாம் ‘முரசொலி’ ஏடு உருக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே!

பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது, தந்தை பெரியார் சொன்னது இதுதான்: 'அண்ணா மறையவில்லை. அவர் வாழ்கிறார் என்பதைப் போலவே காரியங்கள் நடப்பதுதான் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி' என்று! தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்தும் நிறைந்தும் நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது ஆகஸ்ட் 7 ஆம் நாள் நினைவுக்கு வருகிறதே தவிர மற்ற நாட்களில் எல்லாம் அவர் இருக்கிறார்.

எங்கும் நிறைந்திருக்கிறார் என்ற நினைவே இருக்கிறது. என்ன காரணம்? அவர் இடத்தை எல்லா வகையிலும் இட்டு நிரப்பக்கூடியவராக தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். பேரறிஞர் அண்ணாவின் இழப்பு தெரியாத வகையில் கலைஞர் அவர்கள் கொண்டு செலுத்தியதும் கலைஞரின் நிறைவு தோன்றாத வகையில் முதலமைச்சர் அவர்கள் செயல்பட்டு வருவதும்தான் இதற்குக் காரணம்.

கலைஞர் என்பவர் 1924 ஆம் ஆண்டு பிறந்து 2018 ஆம் ஆண்டில் நிறைவுற்றவர் என்பதல்ல அவரது வரலாறு. எண்ணிக்கையால் தீர்மானிக்கப்பட்டதல்ல அவரது வாழ்க்கை, எண்ணங்களால் தீர்மானிக்கப்பட்டது அவரது வாழ்க்கை . அவரை தந்தை பெரியாரும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவும் கணித்ததைப் போல யாரும் கணித்தது இல்லை .

"நண்பர் கருணாநிதி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள அறிவாளிகளில் முன்வரிசையிலுள்ள அறிவாளி ஆவார். தி.மு.கழகம் இந்த அளவு பரவுவதற்கு அவரது முயற்சியும் அறிவும்தான் காரணம்" என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார். கலைஞர் அவர்கள் அமைச்சராக இருக்கிறார். திட்டக்குடி வட்ட அலுவலகத்தில் கலைஞரின் படத்தை (12.6.1967) திறந்து வைக்கிறார் பெரியார். அப்போதுதான் இப்படிச் சொல்கிறார்.

கலைஞர் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்று முதலமைச்சராக அண்ணா அவர்கள் இருக்கும் போதே சொன்னவர் பெரியார். தன்னைப் போலவே கலைஞருக்கு எதிரிகள் அதிகமாகி வருவதையும் கணித்துச் சொன்னவர் பெரியார்.

* அரசியல் உலகில் அவருக்கு எதிரிகள் அதிகமாகி வருகிறார்கள். அதற்கு காரணம், அவரது ஆட்சி நீண்ட நாளைக்கு நிலைத்துவிடுமோ என்கிற பொறாமையும் வேதனையும்தான். ஆனால் அவர் யாருடைய எதிர்ப்புக்கும் பயப்படாமல் எப்படிப்பட்ட தொல்லைக்கும் சளைக்காமல் துணிந்து காரிய மாற்றி வருகிறார்.

பொதுவாக சமுதாயத் துறையில் சீர்திருத்தத் தொண்டு ஆற்றினால் யாருக்கும் சுயநலக்காரருடைய, பழமைவாதிகளுடைய எதிர்ப்பு ஏற்பட்டுத்தான் தீரும். கலைஞர் அவர்களின் புரட்சிகரமான தொண்டுக்கு எதிர்ப்பும், தொல்லையும் ஏற்படுவது அதிசயமல்ல" என்றவர் பெரியார். கலைஞரின் திறமை, அவர்தம் உழைப்பு. அவர் முன்னெடுத்த கொள்கை, அதனை அமல்படுத்த தீட்டிய திட்டங்கள் ஆகிய அனைத்தையும் பெரியார் பாராட்டிப் போற்றினார்.

பெருந்தலைவர் காமராசரை அவர் முதலமைச்சராக இருந்த போது பெரியார் எந்த வகையில் பாராட்டினாரோ அதைப்போல இன்னும் சொன்னால் அதை விட அதிகமாகப் பாராட்டினார் பெரியார்.

அய்யாவின் பாராட்டுக்குச் சளைத்தது அல்ல. அண்ணாவின் பாராட்டு, அண்ணாவுக்கு எத்தனையோ தம்பிமார்கள் உண்டு. அவர்கள் அனைவரையும் சமதளத்தில் வைத்துக் காக்க வேண்டிய கடமை அண்ணாவுக்கு உண்டு. என்றாலும் கலைஞரை அண்ணா அவர்கள் எப்போதும் தன் உயரத்துக்குத் தூக்கி வைத்திருந்தார் என்பதையே வரலாறு பதிவு செய்துள்ளது.

"கழக வரலாற்றிலேயே கலைஞர் கருணாநிதியின் தொண்டு நல்ல இடத்தைப் பெற்றுள்ளது. அவர் ஆற்றிவரும் பணியின் காரணத்தினால்தான் இந்தியாவிலேயே தி.மு.கழகம் ஒரு கேள்விக்குறியாக வியந்து பார்க்கும் அளவுக்கு இருக்கிறது.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே இப்படிப்பட்ட ஜனநாயகக் கட்சி வேறு இல்லை என்ற நிலை இருக்கிறதென்றால், அதற்குக் கருணாநிதியின் தொண்டும் காரணமாகும்" என்றார் பேரறிஞர். பல்லாயிரக்கணக்கான திறமைமிகு தம்பிமார்களை அருகில் வைத்து அரவணைத்த அண்ணாதான் சொன்னார், "உடலில் இருக்கும் கண்ணைப் போல' என்றார் கலைஞரை. 'தனித்தனி சிறப்புகள் உள்ளவர் உண்டு, அத்தகைய சிறப்புகளை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவர் கலைஞர்' என்றார் அண்ணா .

பெரியார் பாராட்டினார், அண்ணா பாராட்டினார் என்பது சம்பிரதாயம் அல்ல. அவர்கள் புலவர்கள் அல்ல. கலைஞரைப் புகழ்வதால் பயனடைந்தவர்கள் அல்ல. அதை மீறிய பாராட்டைப் பெற்றவர் கலைஞர் என்றால், அத்தகைய கலைஞரின் பாராட்டைப் பெற்றவர் இன்றைய தலைவர் இன்றைய முதல்வர் அவர்கள். 'ஓய்வறியாதவன்' என்று தன்னைத்தானே அழைத்துக் கொண்ட கலைஞர் அவர்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை 'உழைப்பு' என்றே உருவகப்படுத்தினார்.

தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான கலைஞர் அவர்கள், 'எனக்குப் பின்னால் யார் என்று கேட்பீர்களேயானால் இந்த மேடையில் இருக்கும் தம்பி ஸ்டாலின் என்று அடையாளம் காட்டினார்.

கலைஞரைப் போல துறையை நடத்தவேண்டும் என்று அனைவரும் தவித்துக் கொண்டு இருந்தபோது, நானே உள்ளாட்சித் துறை அமைச்சராகி விடலாமா என்று யோசிக்கிறேன்' என்று அவரையே சொல்ல வைக்கும் அளவுக்கு செயல்பட்டுக் காட்டினார். அதனால் தான் இன்றும் கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே செயல்பட்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஹரிநாராயண்டாகுர் என்கிற ஆய்வாளர் இந்தியில் எழுதிய கட்டுரையில், "ராம்மனோகர் லோகியாவுக்குப் பிறகு தெற்கில் கலைஞர் கருணாநிதியும், வடக்கில் கர்பூரிதாகூரும் சமுதாய நலன் சார்ந்தவர்களாக இருந்தார்கள்" என்று குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் இந்தியாவில் சமுதாய நலன் சார்ந்த ஒரே ஆட்சியாக 'திராவிடமாடல்' ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கி வருகிறார்கள். கலைஞர் தனது வாழ்நாளில் அடையாத பெருமையை இப்போது நீத்தமும் அடைந்து வருகிறார். அத்தகைய பெரும்புகழை நீத்தமும் பெற்றுத்தந்து வருகிறார் முதலமைச்சர் அவர்கள். கலைஞரின் மிக உயர்ந்த படைப்பு என்பது அவரது இரத்தப் படைப்பே. கலைஞர் இருக்கிறார் என்பதைப் போலவே காலம் நகர்ந்து செல்கிறது!

banner

Related Stories

Related Stories