முரசொலி தலையங்கம்

“துரோகத்தால் தொடங்கி - துரோகத்தால் இயங்கும் கட்சி அதிமுக - ‘தினமலருக்கு’ ஏன் எரிகிறது?” - முரசொலி தாக்கு!

திராவிட மாடல் பாசறைக் கூட்டங்களாக - தமிழினத்தின் எதிர்காலத்துக்குத் தேவையான கொள்கைப் பாசறைக் கூட்டங்களாக நடந்து வருகின்றன.

“துரோகத்தால் தொடங்கி - துரோகத்தால் இயங்கும் கட்சி அதிமுக - ‘தினமலருக்கு’ ஏன் எரிகிறது?” - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

'திராவிட மாடல் பயிற்சிப் பாசறைகள் மாநிலம் முழுவதும் நடக்கட்டும்' என்று அறிவித்த இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்தப் பயிற்சிப் பாசறையில் உரையாற்றுவதற்காக - முதல் கட்டமாக 20 சீர்மிகுபேச்சாளர்களையும் களத்தில் இறக்கிவிட்டார். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்களைச் சந்தித்து திராவிட இயக்கத்தின் இலட்சியங்களை, வரலாற்றை, இந்த இயக்கம் தொடங்கப்பட்ட காரணங்களை விளக்கி வருகிறார்கள்.

இவை திராவிட மாடல் பாசறைக் கூட்டங்களாக - தமிழினத்தின் எதிர்காலத்துக்குத் தேவையான கொள்கைப் பாசறைக் கூட்டங்களாக நடந்து வருகின்றன.

சமூக நீதி - சுயமரியாதை - பகுத்தறிவு - பெண்ணுரிமை - சமத்துவம் - சமதர்மம் - சகோதரத்துவம் - மொழிப்பற்று - இன உரிமை - மாநில சுயாட்சி - இந்தியக் கூட்டாட்சி ஆகியவற்றை விளக்கும் கூட்டமாக அவை அமைந்து வருகின்றன.

சாதிய மேலாண்மை - மதப்பாகுபாடு - பெண்ணடிமைத்தனம் - வர்ணாசிரமம் - வர்ண வேறுபாடுகள் - ஏற்றத்தாழ்வுகள் - சர்வாதிகாரம் - எதேச்சதிகாரம் - இந்தி மயமாக்கல் - சமஸ்கிருத மயமாக்கல் - இந்தித்திணிப்பு - ஒரே நாடு - ஒரே மதம் - ஒரே தேர்தல் ஆகியவற்றை ‘விலக்கும்' கூட்டமாக அவை அமைந்து வருகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இளைஞர்களுக்கு இவற்றை உணர்த்தும் கூட்டமாக அமைந்து வருகின்றன. புதியவர்களுக்கு அறிமுகம் செய்யும் கூட்டமாக - பழையவர்களுக்கு நினைவுட்டும் கூட்டமாக இவை அமைந்து வருகின்றன. இத்தகைய பாசறைக் கூட்டங்களின் மூலமாகத்தான் இயக்கம் வளர்ந்தது. இன்னும் சொன்னால் இத்தகைய பாசறைக் கூட்டங்களில் கேட்க வருபவர்கள், கட்டணம் செலுத்தி வந்த காலம் எல்லாம் உண்டு.

இத்தகைய தலைப்புகளில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசிய உரைகள்தான் இன்று வரை காலத்தால் அழியாத உரைகளாக இருக்கிறது. அந்த உரைகள்தான் இந்த தமிழ்ச் சமுதாயத்தை விழிப்படைய வைத்தது. இன்று நாம் சொல்லும் திராவிட மண் - பெரியார் பூமியாக உருவாக்கியது.

பா.ஜ.க.வுக்குத் தலைவராக வருகிற அண்ணாமலையாக இருந்தாலும் ‘நானும் கருப்பு திராவிடன்தான்' என்று சொல்ல வேண்டிய நிலைமையை உருவாக்கி வைத்துள்ளது. அத்தகைய திராவிடப் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களை இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கையில் எடுத்து - ஊர் முழுக்க திராவிடப் பீரங்கிகளை அனுப்பி வைத்துள்ளார்கள். அது வெடித்து பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

நம்முடைய அளவுகோல் எப்போதும் உடன்பாடான சக்திகள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட ‘எதிரிகள்' என்ன சொல்கிறார்கள் என்பதை வைத்தே அமைய வேண்டும். அதுதான் நமது வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.

இதோ - திராவிடப் பயிற்சிப் பாசறைக் கூட்டங்களுக்கு எதிராக ‘தினமலர்' நாளிதழ் கொதித்துப் போய் எழுதி இருப்பதைப் பார்க்கும் போது - திராவிட முன்னேற்றக் கழகம் சரியான திசையில்தான் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை உணர்ந்து நம்மை நாமே பாராட்டிக் கொள்ள வேண்டிய தாக இருக்கிறது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர் களது அறிவிப்பு காலமறிந்து கூவிய சேவலாகவே அமைந்துள்ளது.

இந்த பாசறைக் கூட்டங்களில் அ.தி.மு.க.வை எதிர்த்துப் பேசுவது இல்லையாம், பா.ஜ.க.வை எதிர்த்தே பேசுகிறார்களாம், ஆர்.எஸ்.எஸ்.சை எதிர்த்தே பேசுகிறார்களாம், சங்பரிவார் அமைப்புகளால் தமிழினத்துக்கு ஆபத்து என்று பேசுகிறார்களாம், இந்த முகாமுக்கு வந்தவர்களுக்கு தியாகராயரைத் தெரியவில் லையாம், வந்தவர்களுக்கு அ.தி.மு.க. எதிரியா, பா.ஜ.க. எதிரியா என்ற குழப்பம் வந்ததாம், இதனால் பா.ஜ.க. வளர்ந்து விடுமாம் - 'தினமலர்' வர்ணாசிரியருக்கு அண்டம் அனைத்தும் எரிகிறது.

தி.மு.க. தனது அடிப்படைக் கொள்கைகளைப் பேசத் தொடங்கினால் யாருக்கு எரிகிறது தெரிகிறதா? ‘அ.தி.மு.க.வை பற்றி பேச வேண்டியதுதானே' என்று ‘தினமலர்' அறிவுரை சொல்கிறது. அ.தி.மு.க.வின் ஒ - து.ஓ. ஆகிய இரண்டு அணிகளும் பா.ஜ.க.வின் தொங்கு சதைகள் என்பது ஊருக்குத் தெரியாதா? ‘மோடி சொன்னதால் தான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்' என்று பன்னீரே சொல்லிவிட்டாரே!

அ.தி.மு.க. பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அ.தி.மு.க. பொதுக்குழுவே நிராகரிக்கும் அளவுக்கு 2000 அதிபுத்திசாலிகள் மட்டுமே கொண்ட கட்சி அது என்பதுதான் ஊருக்கு வெளிச்சம் ஆகிவிட்டதே. துரோகத்தால் - தொடங்கப்பட்டு - துரோகத்தால் தொடரும் கட்சி என்று யாருக்கும் தெரியாதா? இந்தக் கட்சியை வைத்துக் கொண்டு பா.ஜ.க. கொல்லைப்புற கட்சியையும் ஆட்சியையும் நடத்தி வருகிறது என்பது ஊருக்கே தெரியும்.

இங்கே உணர்த்த வேண்டியது பா.ஜ.க.வை தான். இவர்கள் திராவிட இயக்கத்தின் சித்தாந்த எதிரிகள். அவர்களை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு?

இன்றைக்கு ஒன்றியத்தை ஆண்டு கொண்டு இருக்கிறது பா.ஜ.க. அதன் மீது விமர்சனம் வைப்பது என்ன தவறு? இது ஏன் ‘தினமலருக்கு' எரிகிறது? காலம் காலமாக தாங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை அம்பலப்படுத்துகிறார்கள் என்பதால் எரிகிறதா?

போகிற போக்கில் ஒரு உண்மையை ‘தினமலர்' ஒப்புக் கொண்டதற்காக பாராட்டத் தான் வேண்டும். பா.ஜ.க. என்பது கோவையிலும் கன்னியாகுமரியிலும் தான் செல்வாக்காக இருக்கிறது என்கிறது அந்தப் பத்திரிக்கை.

ஏன் அவர்கள் வளரவில்லை, வளர முடியவில்லை, ஏன் அவர்கள் வளர முடியாது என்பதற்காக காரணங்களை எழுதி பா.ஜ.க.வுக்கு பல்லக்குத் தூக்கவும். தி.மு.க.வின் காலடியை நோண்ட வரவேண்டாம்!

banner

Related Stories

Related Stories