முரசொலி தலையங்கம்

“செஸ் ஒலிம்பியாட் திருவிழா - உலக சாதனைப் புத்தகத்தில் ‘தமிழ்நாடு’ இடம் பிடிக்கும்” : முரசொலி புகழாரம்!

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கும் செஸ் போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனால் தமிழகமும் சென்னையும், மாமல்லபுரமும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது.

“செஸ் ஒலிம்பியாட் திருவிழா - உலக சாதனைப் புத்தகத்தில் ‘தமிழ்நாடு’ இடம் பிடிக்கும்” : முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘தம்பிக்கு' என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. ‘தம்பி’யை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்துவிட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினையில் ‘தம்பி’ இடம் பெற்று உலகச் சொல்லாக அது மாறி இருக்கிறது. தொழில்துறையில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கலாம். ஆனால் விளையாட்டுத் துறையிலும் இவ்வளவு குறுகிய காலத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியுமா? முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

சதுரங்க விளையாட்டு என்பது ‘மூளை சார்ந்த போர்க்கலை’யாகச் சொல்லப்படுவது ஆகும். மூளைக்கு முழுமையான வேலை உள்ள விளையாட்டு இது. ‘நான் வெற்றி பெற வேண்டும்’ என்பது மட்டுமல்ல, ‘எதிராளி தோற்கடிக்கப்பட வேண்டும்’ என்பதற்குமான விளையாட்டு இது. ஓர் அரசன், ஓர் அரசி, இரு மந்திரிகள், இரு குதிரைகள், இரு கோட்டைகள். எட்டுச் சிப்பாய்கள் என கருப்பு வெள்ளை ராணுவ மைதானமாகவே அது கருதப்படும். விளையாடுவது என்பதைவிட, வியூகம் வகுப்பதே இதில் மிகமிக முக்கியமானது ஆகும். வியூகமும் உத்திகளுமே இதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

எதிரியின் காய்களை தடுப்பதும், நம் காய்களை முன்னேற்றிக்கொண்டு நிறுத்துவதுமான உத்தி இதன் அடிப்படையாகும். மனித இனத்தின் விளையாட்டு என்று சொல்லத்தக்க வகையில் உலகம் முழுவதும் பரவி இருக்கும் விளையாட்டு இது. இதன் தொடக்கம் என்பது இந்தியாதான். ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் இருந்த சதுரங்க விளையாட்டில் இருந்து வளர்ச்சி பெற்றதுதான் இந்த செஸ் ஆகும். இங்கிருந்து தான் மேற்கு ஐரோப்பாவுக்குச் சென்றது. அங்கிருந்து உலகம் முழுக்கப்பரவியது. இத்தகைய உலகப்புகழ் பெற்ற விளையாட்டுப் போட்டியை நடத்தும் இடமாக தமிழகத்தை உயர்த்திக் காட்டியது மாபெரும் சாதனையாகும்.

200 நாடுகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள செஸ் ஒலிம்பியாட் திருவிழா, முதல்முறையாக சென்னை மாநகரில் நடைபெற இருக்கிறது. கொரோனா காரணமாக 2021-ஆம் ஆண்டு இணைய வழியில் நடந்த போட்டியில் இந்தியாவும் - ரஷ்யாவும் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2022-ஆம் ஆண்டுக்கான போட்டியை போர் காரணமாக ரஷ்யாவில் நடத்தும் முடிவை கைவிடுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்தது. எனவே இந்தப் போட்டியைத் தங்கள் நாடுகளில் நடத்த பல நாடுகள் முயற்சித்தன. அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இந்தியாவில் செஸ் ஒலிம்பியாட்டை நடத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. வெற்றி பெற்றது இந்தியா. அதுவும் டெல்லியிலா, அல்லது சென்னையிலா என்ற அடுத்த போட்டி ஏற்பட்டது. அதில் சென்னை வென்றிருக்கிறது. அதாவது தமிழ்நாடு வென்றிருக்கிறது.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட், 1927ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு முறை கூட இந்தியாவில் நடத்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. தற்போது 2022ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் வென்றதன் மூலம் சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என 2500 பேர் உலகம் முழுவதிலும் இருந்து வர இருக்கிறார்கள். சென்னையில் போட்டி நடைபெறுவதால் இந்தியாவின் சார்பில் பல அணிகள் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. இது இன்னொரு முக்கியப் பயன் ஆகும்.

“செஸ் ஒலிம்பியாட் திருவிழாவால் சென்னை சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் மேலும் அதிகரிப்பதற்கும் பயிற்சி மையங்கள் போன்றவை அதிக அளவில் திறக்கப்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் உருவாகி இருக்கின்றன. மறுபுறம் 200 நாடுகளின் வீரர்கள் சென்னைக்கு வர உள்ளதன் மூலம் உலக அளவில் தமிழ்நாடும், சென்னையும் கவனம் பெறும். அதனால் சர்வதேச அளவிலான தொழில் முயற்சிகள் சென்னைக்கும், தமிழ்நாட்டுக்கும் கிடைக்கும்” என்று ஊடகங்கள் எழுதி வருகின்றன.

“உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான நாடுகள் பங்கேற்கும் செஸ் போட்டி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதனால் தமிழகமும் சென்னையும், மாமல்லபுரமும் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் ஏந்தப்படும் தீபம் - வெவ்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு - இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு - இறுதியாக சென்னைக்கு வந்து சேரும் என்று அறிவித்துள்ளார்கள். இதுவும் உலகக் கவனத்தை ஈர்க்கும். தமிழ்நாடு கவனம் பெறும்” என்கிறார்கள்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். சென்னை மாநகராட்சிக் கட்டடத்தின் முகப்பில் இதனைப் பொறித்து முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்கள். வண்ண விளக்குகளில் இந்த சின்னம் மின்னியது. சதுரங்க விளையாட்டில் இருக்கும் நைட் போலவே ஒரு குதிரை வடிவமைக்கப்பட்டு அது வணக்கம் சொல்லும் வகையில், காணப்பட்டது. தமிழ் முறைப்படி அது வேட்டி - சட்டை அணிந்து இருந்தது. அதற்கு ‘தம்பி' என்ற பெயரை முதலமைச்சர் அவர்கள் சூட்டி இருக்கிறார்கள்.

இன்னும் ஐம்பது நாட்கள் இருக்கிறது என்பதற்கான கவுண்ட்டவுன் தொடக்கத்தையும் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் தொடக்கி வைத்துள்ளார் முதலமைச்சர். அனைத்துத்துறையும் வளர வேண்டும் என்பதே திராவிட மாடல் என்று சொல்லி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். விளையாட்டுத் துறை என்பது இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவில் உயர்ந்து வரப்போவதன் அடையாளம் இது.

‘வணக்கம்’ என்ற சொல் எப்படி உலகளாவிய சொல்லாக மாறி இருக்கிறதோ அதுபோலவே ‘தம்பி’ என்ற சொல்லும் மாறுவதற்கான தொடக்கம்தான் இது.

banner

Related Stories

Related Stories