முரசொலி தலையங்கம்

பட்டினிச்சாவு இல்லாத, வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ‘தமிழ்நாடு’ முன்னிலை.. ‘முரசொலி’ புகழாரம்!

ஒன்றிய அரசின் சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் தமிழ்நாடு அரசு பாராட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் உணவுப் பாதுகாப்பில் இருக்கிறது என பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பட்டினிச்சாவு இல்லாத, வறுமை  குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ‘தமிழ்நாடு’ முன்னிலை.. ‘முரசொலி’ புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உணவுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. பொதுமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில், ஆண்டுதோறும் உணவுப் பாதுகாப்புக் குறியீடு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில், 2021 - 22 ஆம் ஆண்டிற்கான உணவுப் பாதுகாப்பு குறியீடு வெளியிடப்பட்டது. இதில், பெரிய மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், கோயம்புத்தூர், சென்னை, திருநெல்வேலி, ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 11 மாவட்டங்கள் சிறந்த செயல்பாட்டிற்கான விருதினையும் பெற்றன. இரண்டாவது இடத்தில் குஜராத், மூன்றாவது இடத்தில் மகாராஷ்டிரா இடம்பெற்றுள்ளது.

சிறிய மாநிலங்கள் பட்டியலில் கோவா முதலிடம் பிடித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் - ஐ.நா. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆகியவை சார்பில் 2018 முதல் உணவுப் பாதுகாப்பு தினமாக ஜூன் 7 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் தமிழ்நாடு அரசு பாராட்டப்பட்டுள்ளது. இந்திய அளவில் தமிழகம் உணவுப் பாதுகாப்பில் இருக்கிறது என பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் - என்பது மிகமிக முக்கியமான வளர்ச்சிக் குறியீடு ஆகும். சுத்தம் - சுகாதாரம் என்பதோடு மட்டுமல்ல, உயிரோடு தொடர்புடையது ஆகும். உயிரினும் மேலான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் தரும் திராவிட முன்னேற்றக் கழக அரசு, மக்களின் வாழ்க்கைக்கு அடிப்படையான உணவுப் பொருள்கள் விஷயத்திலும் அனைத்து வகையிலும் கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் இன்னமும் பட்டினிச்சாவுகள் இருக்கும் மாநிலங்கள் இருக்கின்றன. ஆனால் பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் என்பது தமிழ்நாடு ஆகும். அதற்கு மிக முக்கியமான காரணம் நம் மாநிலத்தில் இருக்கின்ற பொது விநியோகத் திட்டமும், உணவுப் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்குவதும்தான்.

பட்டினிச்சாவு இல்லாத, வறுமை  குறைந்த மாநிலங்களின் பட்டியலில் ‘தமிழ்நாடு’ முன்னிலை.. ‘முரசொலி’ புகழாரம்!

இந்தியாவின் வறுமை குறித்து தயாரிக்கப்பட்டுள்ள ‘பன்முக வறுமை குறியீடு' அறிக்கையை நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார். ஆக்ஸ்போர்ட் (Oxford) பல்கலைக் கழகத்தின் புள்ளியியல் முறையை பயன்படுத்தி, மக்களின் சுகாதாரம், கல்வி, வாழ்க்கைத்தரம் உள்ளிட்ட 12 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு இருந்தது.

பா.ஜ.க - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகார் மாநிலம் வறுமை பட்டியலில் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் 51. 91 சதவீதம் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இதேபோல், 2-ம் இடத்தில் உள்ள ஜார்கண்ட் மாநிலத்தில் 42.16 சதவீதம் மக்களும், 3-ம் இடத்தில் உள்ள பா.ஜ.க., ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 37.19 சதவீதம் மக்களும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 36.65 சதவீதம் பேரும், மேகாலயாவில் 32.67 சதவீதம் பேரும், அசாமில் 32.67 சதவீதம் பேரும் வறுமையில் உள்ளனர்.

வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. வறுமைக் குறைவான மாநிலங்களாக கேரளா முதலிடத்தையும், தமிழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னால், நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் ஆனது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியல் அது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இடம்பெற்று இருந்தது. இப்போது ஏழைகள் 4.89 சதவிகிதம் மட்டுமே உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அந்த வரிசையில் உணவுப் பாதுகாப்பில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

“கழகம் ஆட்சிக்கு வந்ததும் நாம் செய்யத் தொடங்கிய முதல் பணி என்பது கால்வாய்களை தூர்வாருவது ஆகும். கால்வாய்களை துரிதமாகத் தூர்வாரியதன் மூலமாக கடைமடை வரைக்கும் தண்ணீர் பாய்ந்தது. நடப்பு ஆண்டிலும் தூர்வாரும் பணிகளை கடந்த ஏப்ரல் மாதமே தொடங்கி துரிதமாகச் செய்தோம். 80 கோடி மதிப்பிலான பணிகள் நடந்து வருகிறது.

இதன்காரணமாக கடைமடை வரை தண்ணீர் இந்த ஆண்டும் பாயும். கடந்த ஆண்டு டெல்டா விவசாயிகளுக்கு 61 கோடி மதிப்பிலான குறுவைச் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தோம். இதன் காரணமாக 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி பரப்பு அதிகம் ஆனது. 4.90 லட்சம் ஏக்கராக நெல் சாகுபடி பரப்பு அதிகம் ஆனது. கடந்த ஆண்டு 118 லட்சம் டன் உணவு உற்பத்தி நடந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகபட்ச உணவு உற்பத்தி ஆகும்” என்று முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

உற்பத்தி அதிகம் ஆனதும், அதன் மூலமாக விலைகள் அதிகம் ஆகாமல் இருப்பதும், உணவுப் பொருள்களின் தரம் சரியாக இருப்பதும், அதனை விற்பனை செய்பவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதும் என அனைத்தும் இணைந்ததாக ஒரு மக்கள் வாழ்வு இயக்கம் தமிழகத்தில் நடைமுறையில் இருக்கிறது.

விவசாயிகள் பாதுகாப்பு - நிலங்களின் பாதுகாப்பு - விவசாயி களுக்கான சலுகைகள் - உற்பத்திக்கு சந்தை விலை - உழவர் சந்தைகள் - வறுமை ஒழிப்புத் திட்டங்கள் - நியாய விலைக் கடைகள் - விலையில்லா அரிசி - சத்துணவுத் திட்டம் - விரைவில் வரப்போகும் காலை உணவுத் திட்டம் - குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டம் - ஆகிய அனைத்தும் சேர்ந்து தமிழகத்தை வளமான - வளர்ச்சியான மாநிலமாக உயர்த்தி வருகிறது.

அனைத்து வகையிலும் தமிழகம் முதலிடத்தை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது என்பதன் அடையாளம்தான் உணவுப் பாதுகாப்பில் கிடைத்திருக்கிற விருது ஆகும்!

banner

Related Stories

Related Stories