முரசொலி தலையங்கம்

“சிதம்பரம் நடராசர் கோவில்; விசாரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது.. ரகசியம் ஏதுமில்லை” : ‘முரசொலி’ விளக்கம்!

சிதம்பரம் நடராசர் திருக்கோவில் தொடர்பாக புகார் எழுமானால் அது குறித்து விசாரிக்கும் உரிமை அரசுக்கு சட்டரீதியாகவும் - நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் இருக்கிறது

“சிதம்பரம் நடராசர் கோவில்; விசாரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது.. ரகசியம் ஏதுமில்லை” : ‘முரசொலி’ விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிதம்பரம் நடராசர் திருக்கோவில் தொடர்பாக இருவேறுபட்ட கருத்துகள் பொதுவெளியில் பரவி வருகின்றன. ‘சிதம்பரம் நடராசர் திருக்கோவில், தீட்சிதர்களுக்குத்தான் சொந்தமானது’ என்பது ஒருதரப்பு வாதமாகவும் - ‘நடராசர் கோவில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல; அவர்களிடம் இருந்து எடுக்க வேண்டும்’ என்று இன்னொரு தரப்பு வாதமாகவும் பொதுவெளியில் விவாதப்பொருளாக நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, “தவறு எந்தக் கோவிலில் நடந்தாலும் - அது சம்பந்தமாக புகார் வந்தால் அங்கு இந்து சமய அறநிலையத் துறை தலையிடும்'' என்று சொல்லிவிட்டார். அந்த அடிப்படையில் அறநிலையத் துறை அதிகாரிகள் சிதம்பரம் கோவிலில் தங்களது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்கள். இதற்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்புத் தரவில்லை.

தமிழக அரசும் இதில் மென்மையான அணுகுமுறையைக் கையாள்கிறது என்ற விமர்சனமும் வருகிறது. தமிழக அரசு தனது கடமையைச் சட்டரீதியாகவே, சரிவரச் செய்கிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று எதையும் செய்யவில்லை. செய்துவிடவும் முடியாது. இது கோவில் விவகாரம் மட்டுமல்ல; உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலானது என்பதால் அவசரப்படவும் முடியாது. தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டத்தின் பிரிவு 1(3)ன் படி, இந்தச் சட்டத்தின் பிரிவுகள் அனைத்தும், அனைத்து பொது திருக்கோயில்களுக்கும் பொருந்தும். அதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொது திருக்கோயில்களும் இந்தச் சட்டத்தின்படி நிர்வகிக்கப்பட வேண்டும்.

சட்டப்பிரிவு 23 இன்படி ஒவ்வொரு திருக்கோவிலும் முறையாக நிர்வகிக்கப்படுவதை உறுதிசெய்திடும் வகையில் உத்தரவு பிறப்பிக்க ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சட்டப்பிரிவு 33இன்படி திருக்கோயில்களுக்குச் சொந்தமான அசையும் மற்றும் அசையாச் சொத்துகள், கணக்குகள் மற்றும் இதர ஆவணங்களை ஆய்வு செய்திட ஆணையர் அல்லது அவரால் நியமனம் செய்யப்பட்ட அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பிரிவு 27 இன்படி திருக்கோயில் அறங்காவலர்கள் உரிய அலுவலர்களால் சட்டப்படி பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்றக் கடமைப்பட்டவர் ஆவர். சட்டப்பிரிவு 28 இன்படி அறங்காவலர்கள் திருக்கோயில்கள் மற்றும் அதன் சொத்துகளை சட்ட விதிகளின்படியும், வழக்கத்தின்படியும் நிர்வகிக்க வேண்டும். “சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் பொதுக்கோயில்'' என சென்னை உயர்நீதிமன்றத்தால் 17.03.1890 (AS No.103 மற்றும் 159/ 1888) மற்றும் 03.04.1939 (AS No.306/1936) நாளிட்ட தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கோயிலுக்கு 1933ஆம் ஆண்டில் நிர்வாகத்திட்டம் அறநிலைய வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டு, உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட வழக்குகளில் நிர்வாகத் திட்டம் ஏற்படுத்திட வாரியத்திற்கு அதிகாரம் இல்லையென தீட்சிதர்களால் தொடரப்பட்ட வழக்கில் 03.04.1939 உத்தரவில் பொதுக்கோயில் என்பதால் அறநிலைய வாரியத்திற்கு அதிகாரம் உண்டு எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து சமய அறநிலையச் சட்டத்தின் கீழ் கொண்டு வருவதை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தள்ளுபடி செய்தது. அதுவரை உண்டியலே இல்லாத கோவிலில் முதன்முதலாக உண்டியல் வைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பின் மீதான மேல்முறையீட்டு மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டார்கள்.

சிதம்பரம் திருக்கோயிலுக்கு சட்டப்பிரிவு 45 - இன்படி செயல் அலுவலர் நியமனம் செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 06.1.2014இல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், செயல் அலுவலர் நியமனம் குறித்து, விதிகள் ஏற்படுத்தப்படாத நிலையில், செயல் அலுவலர் நியமனம் செய்ய இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து செயல் அலுவலர் நியமனத்திற்கென தனி விதிகள் ஏற்படுத்தப்பட்டு. மேற்கண்ட விதிகள் உயர்நீதிமன்றத்தாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திருக்கோவில் பொதுத் திருக்கோவில் என்பதால் சட்டப்படி நிர்வாகம் செய்யப்படுகிறதா என்பதை ஆய்வு செய்திடவும், புகார்கள் மீது விசாரணை செய்யவும் இந்து சமய அறநிலையத் துறைக்கு அதிகாரம் உள்ளது என்பதே தமிழக அரசின் வாதம் ஆகும். கடந்த மே 30ஆம் தேதி பொது தீட்சிதர்கள் சார்பில் இந்து சமய அறநிலையத் துறைக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்துசமய அறநிலையத் துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்ட பதில் தெளிவாக இருக்கிறது. “கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்கும் வகையில் கோவில் அலுவல்கள் குறித்து விசாரிக்க குழுவை அமைக்க ஆணையருக்கு அதிகாரம் உண்டு. பொது தீட்சிதர்கள் செய்ததாகக் கூறப்படும் தவறான நிர்வாகம் / நிர்வாகச் சீர்கேடு / முறைகேடுகள் குறித்து எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

சபாநாயகர் கோயிலின் மீதான அற நிலையத் துறையின் அதிகார வரம்பு உச்சநீதிமன்றத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. இந்தக் கோவில் பொதுக் கோவில் என்பதால், கமிஷனருக்கு அதிகாரம் உள்ளது” என்று சொல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஆதாரமாகக் காட்டும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில், தீட்சிதர்கள் வசம் கோவில் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. முறைகேடு குறித்து புகார் வந்தால் அதனைச் சரி செய்ய கோவில் நிர்வாகத்துக்கு தமிழக அறநிலையத்துறை பரிந்துரை செய்யலாம் எனவும் அதில் உள்ளது.

“பொதுக்கோவில் என்ற அடிப்படையில் கோவில் நிர்வாகத்தைச் சீரமைக்க, வரவு செலவுக் கணக்கை விசாரிக்க குழு அமைக்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் உண்டு. பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை எந்த வகையிலும் தலையிடவில்லை” என்றும் அரசின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. “இக்கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானதோ, அவர்களால் உருவாக்கப் பட்டதோ இல்லை என்றாலும், அவர்கள் ஒரு மத உட்பிரிவு என்பதையும், பல நூற்றாண்டுகளாக அவர்கள் தான் கோயிலை நிர்வாகம் செய்து வருகிறார்கள் என்பதையும் ஏற்கெனவே (1951-இல்) நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால், அதனை மீண்டும் விசாரிக்க முடியாது.... முடிந்து போன விவகாரங்களைக் கிளப்புவது சமூகத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து குழப்பத்தை உருவாக்கிவிடும்.... “தோற்றுப்போனவர்கள் மீண்டும் வழக்கு தொடுத்தால், நீ ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு விட்டாய் என்பதே அவர்களுக்கான பதில் என்று காத்யாயன ஸ்மிருதி கூறுகிறது.” என்று சொல்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு.

“தீட்சிதர்களின் நிர்வாகச் சீர்கேடு, நிதிக் கையாடல் குறித்த பல விவரங்கள் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டன. எனினும், அவற்றுக்குள் நாங்கள் செல்லவில்லை...... சீர்கேட்டைச் சரி செவதற்காகத்தான் நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டார் என்றால், அது சரி செய்யப்பட்டவுடனே கோயிலை தீட்சிதர்கள் வசம் ஒப்படைத்து விட்டு அதிகாரி வெளியேறியிருக்க வேண்டும்.” என்கிறது அந்தத் தீர்ப்பு.

அந்த வகையில் புகார் எழுமானால் அது குறித்து விசாரிக்கும் உரிமை அரசுக்கு சட்டரீதியாகவும் - நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் இருக்கிறது. இதில் ரகசியம் ஏதும் புதைந்திருக்கவில்லை.

banner

Related Stories

Related Stories