முரசொலி தலையங்கம்

“கோதாவில் வாய்க்கு வந்ததைப்பேசி வருகிறார் அண்ணாமலை.. யாகாவாராயினும் நா காக்க” : ‘முரசொலி’ எச்சரிக்கை!

மாநிலத் தலைவராக இருக்கிறோம் என்ற கோதாவில் வாய்க்கு வந்ததைப்பேசி வருகிறார் அண்ணாமலை. இது பா.ஜ.க.வின் பாணியாக மாறிக் கொண்டு இருக்கிறது என முரசொலி தலையங்கம் தெரிவித்துள்ளார்.

“கோதாவில் வாய்க்கு வந்ததைப்பேசி வருகிறார் அண்ணாமலை.. யாகாவாராயினும் நா காக்க” : ‘முரசொலி’ எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இசுலாமிய இறைத்தூதர் நபிகள் பெருமான் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பா.ஜ.க.வின் தேசியச் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவும், டெல்லி பா.ஜ.க. ஊடகப்பிரிவுத் தலைவர் நவீன் ஜிண்டாலும் சொல்லி இருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது. இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கட்சிப் பொறுப்பில் இருந்து பா.ஜ.க. விடுவித்தது. இது மட்டுமே இப்பிரச்சினைக்கான தீர்வாக இருக்க முடியாது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இது பற்றி செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘மத ஆளுமைகள் குறித்த கருத்துக்கள் தனிநபர்களால் வெளியிடப்பட்டவை ஆகும். அவை எந்த வகையிலும் இந்த அரசின் கருத்தை எதிரொலிக்காது. சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, உரிய அமைப்புகள் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளன. அனைத்து மதங்களுக்கும் இந்தியா மதிப்பளித்து வருகிறது. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாரையும் அரசு இழிவுபடுத்த அனுமதிக்காது” என்று சொல்லி இருக்கிறார்.

பா.ஜ.க. தேசியச் செயலாளர் அருண்சிங் வெளியிட்ட அறிக்கையில், “எந்த மதத்தினரையும் இழிவுபடுத்துவதை பா.ஜ.க. கடுமையாகக் கண்டிக்கிறது. பா.ஜ.க. எந்த ஒரு பிரிவினரையோ அல்லது மதத்தையோ அவமதிக்கும் அல்லது இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்துக்கும் எதிரானது. பா.ஜ.க. அத்தகைய நபர்களையோ அல்லது தத்துவத்தையோ ஊக்குவிப்பதில்லை. இந்தியாவின் ஆயிரக்கணக்கான வரலாற்றில் ஒவ்வொரு மதமும் மலர்ந்து செழித்திருக்கிறது. பா.ஜ.க. அனைத்து மதங்களையும் மதிக்கிறது” என்று விளக்கம் அளித்துள்ளார். பா.ஜ.க. இப்படி விளக்கம் அளிக்க நேர்ந்தது ஏன்?

இத்தகைய கருத்துக்களைச் சொன்னவர்கள், ஆளும் பா.ஜ.க.வைச்சேர்ந்தவர்களாக இருப்பதால்தான் இந்தப் பிரச்சினையே இவ்வளவு பெரிதாக ஆனது. அந்த துணிச்சலில்தான் இவர்கள் இத்தகைய கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள். இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக உலகின் பல நாடுகள் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளன. எகிப்து, சவூதி அரேபியா, ஏமன், அரபு நாடுகள், பக்ரைன், குவைத் இதற்கு வெளிப்படையான கண்டனத்தை பதிவு செய்துள்ளன. இந்தியப்பொருள்களைப் புறக்கணிப்போம் என்ற அளவுக்கு நிலைமை போய்க்கொண்டு இருக்கிறது. கத்தார் சென்றிருக்கும் இந்தியக் குடியரசுத்துணைத் தலைவருக்கான விருந்து ரத்து செய்யப்பட்டதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொருள்களுக்கு தடைவிதித்துள்ளதாகவும், இந்தியர்கள் வேலைக்குப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சொல்லப்படும் தகவல்கள் அனைத்தும் அச்சம் விளைவிப்பதாக இருக்கிறது.

பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியல் என்பது உள்நாட்டை மட்டுமல்ல; நாடுகள் கடந்தும் இந்தியர்களுக்கு அச்சம் விளைவிப்பவையாக மாறி வருகிறது. பா.ஜ.க.வின் தங்களது வகுப்புவாத வெறுப்பு அரசியலின் குரலை அடக்கிக் கொள்ள வேண்டியதைக் காலம் தனது எச்சரிக்கை உணர்வோடு உணர்த்துவ தாகவே இதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உள்நாட்டில் - இந்திய நிர்வாகத்தில் உயர் பதவியில் இருந்தவர்கள் ஏற்கனவே செய்த எச்சரிக்கைதான் இது. “நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வெறுப்புதான். வெறுப்பு அரசியலை விதைப்பதன் மூலமாக நாட்டின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது பா.ஜ.க.” என்றும்,“நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே பலிபீடத்தில் வைக்கப்பட்டுள்ளது போல் உள்ளது. அதிகரித்து வரும் வெறுப்பு அரசியலுக்கு முடிவு கட்டுங்கள்” என்றும் பிரதமர் மோடி அவர்களுக்கு 108 பேர் கையெழுத்திட்டு சில மாதங்களுக்கு முன்பு அனுப்பி இருந்தார்கள். முன்னாள் நீதியரசர்கள், முன்னாள் துணை நிலை ஆளுநர்கள், முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முன்னாள் வெளியுறவுச் செயலாளர்கள் - இக்கடிதத்தில் கையெழுத்துப் போட்டுள்ளார்கள். இது ஏதோ முதல் தடவையாக இப்படி எழுதி இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. சில மாதங்களுக்கு முன்பும் இப்படி எழுதினார்கள்.

இத்தகைய பேச்சுகள் அக்கட்சியின் சாமானிய மனிதர்களால் மட்டும் பேசப்படுபவை அல்ல. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த தேர்தலை 80 சதவிகிதத்துக்கும் 20 சதவிகிதத்துக்குமான தேர்தலாக யோகி ஆதித்யநாத் சொன்னார். 20 சதவிகிதம் என்று அவர் சொன்னது இசுலாமியர்களை. ஒரு குறிப்பிட்ட சாதி மக்களை கூட்டி வைத்துக் கொண்டு, ‘நீங்கள்தான் ஒரு காலத்தில் மொகலாயர்களை வீழ்த்தியவர்கள், அதே போல இப்போதும் வீழ்த்த வேண்டும்' என்று ஒன்றிய அமைச்சர் ஒருவர் சொன்னார். இந்த வெறுப்பரசியலின் விதையில்தான் உ.பி.யின் வெற்றி சாத்தியம் ஆனதாக நினைக்கிறார்கள்.

அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராக வெறுப்பு வன்முறைகள் அதிகமாக நடக்கத் தொடங்கி இருக்கிறது. இதனைக்கட்டுப்படுத்தாமல் போனால் இது இந்தியத் தலைகுனிவாக மட்டுமல்ல, உலகத்தலைகுனிவாகவே மாறிவிடக் கூடும்.

இதே காரியத்தைத்தான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இங்கு செய்து கொண்டு இருக்கிறார். மோடியால்தான் இந்தியா வளர்ந்தது என்று அவர் சொல்லிக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. அது அவரது உரிமை. ஆனால், ‘பறையாவில் இருந்து விஸ்வகுருவாக உயர்த்தியவர்' என்று அண்ணாமலை சொல்லி இருப்பது மிகமிக மோசமான சிந்தனையாகும். ‘அண்ணாமலையை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்' என்று விடுதலைச் சிறுத்தைகள், தந்தை பெரியார் கழகம் போன்ற அமைப்புகள் புகார் கொடுத்துள்ளன.

தனிப்பட்ட முறையிலும் பலரும் அவர் மீது புகார் கொடுத்து வருகிறார்கள். அதன்பிறகும் இதனை அண்ணாமலை நீக்கவில்லை. எனது பதிவில் எந்தக் குற்றமும் இல்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். வன்கொடுமைச் சட்டப்படி அவர் கைது செய்யப்பட வேண்டிய பதிவு இது.

மாநிலத் தலைவராக இருக்கிறோம் என்ற கோதாவில் வாய்க்கு வந்ததைப்பேசி வருகிறார் அண்ணாமலை. இது பா.ஜ.க.வின் பாணியாக மாறிக் கொண்டு இருக்கிறது. யாகாவாராயினும் நா காக்க!

banner

Related Stories

Related Stories