முரசொலி தலையங்கம்

”ஆளுநரின் அதிகாரம் என்னவென்று உச்சநீதிமன்றமே பாடம் எடுத்துள்ளது”.. முரசொலி தலையங்கம்!

அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை

”ஆளுநரின் அதிகாரம்  என்னவென்று உச்சநீதிமன்றமே பாடம் எடுத்துள்ளது”.. முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜூன்.09 2022) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாடு அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பல்வேறு சட்டமசோதாக்கள் மேதகு ஆளுநர் அவர்களின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இவை அனைத்தையும் விரைந்து அனுப்பி வைக்கக்கோரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தனது அமைச்சரவைக் குழுவுடன் சென்று நேரில் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள். இவை அனைத்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் - மக்கள் பிரதிநிதிகளால் - பெரும்பான்மை உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்டவை ஆகும்.

1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)

2. தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகம் (திருத்தம்) மசோதா, 2020. (ஆய்வு அதிகாரத்தை அரசாங்கத்திற்கு வழங்குதல்)

3. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (இரண்டாவது திருத்தம்) சட்டம், 2022. சில விதிகளைத் திருத்தவும், பதவிக் காலத்தைக் குறைக்கவும்)

4. தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2022. (உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

5. சென்னைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022. (பல்கலைக் கழகத்தின் துணை வேந்தரை நியமிப்பதற்கும், நிதிச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகச் சேர்ப்பதற்கும்)

6. தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழக மசோதா, 2022, (சென்னைக்கு அருகில் தனி சித்த பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - இந்திய மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் ).

7. தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் (இரண்டாம் திருத்தம்) மசோதா, 2022. (மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஓசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு)

8. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2022 , (பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

9. தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா, 2022. ( ஆங்கிலோ இந்திய சமூகம்)

10. தமிழ்ப் பல்கலைக்கழக (திருத்த மசோதா, 2022.

11. தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா, 2022.

12. தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை (திருத்தம்) மசோதா, 2022 (துணை வேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்)

13. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, 2022

14. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) மசோதா, 2022

15. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது திருத்தம்) மசோதா, 2022

16. தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் (நான்காவது திருத்தம்) மசோதா, 2022

17. தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னைப் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் (திருத்தம்) மசோதா, 2022.

18. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (திருத்த) மசோதா, 2022 (பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல்).

19. தமிழ்நாடு ரத்துச் சட்டம், 2022 (காலாவதியான மற்றும் தேவையற்ற சட்டங்களை ரத்து செய்ய).

20. தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தில் திருத்தம். (தங்கள் நெருங்கிய உறவினர்களின் மரணத்தில் கலந்து கொள்வதற்காக அவர்களைத் தற்காலிகமாக விடுவிப்பது தொடர்பாக மாவட்ட அளவில் உள்ள ஒரு அதிகாரிக்கு அரசாங்கத்தின் அதிகாரத்தை வழங்குதல்)

21. தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா, 2022 (உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல்)

- ஆகியவைதான் நிலுவையில் உள்ளவை ஆகும். இதற்கான ஒப்புதலை மேதகு ஆளுநர் அவர்கள் வழங்க வேண்டும். இதில் அவருக்கு மாறுபட்ட முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் இல்லை என்பது சட்டரீதியானதுதான்.

மத்திய - மாநில உறவுகள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் பரிந்துரையில் இது விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“பொதுப்பட்டியலில்” (Concurrent List) உள்ள பொருள் குறித்து மாநில சட்ட மன்றத்திற்கு உள்ள சட்டமியற்றும் அதிகாரத்தைப் பாதுகாக்கவே அரசியல் சட்டத்தில் 254(1) என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டத்துடன் முரண்படும் ஒரு சட்டத்தை மாநிலச் சட்டமன்றம் நிறைவேற்றினால் - அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கக்கோரி ஆளுநருக்கு மாநில அமைச்சரவை அறிவுறுத்தலாம்.

மாநில அமைச்சரவை அப்படி அறிவுறுத்தினால் - ஆளுநர் அதன்படி உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும். (Governor Should do Forthwith). அரசியல் சட்டப்பிரிவு 254(1)-ன் கீழ் மாநில சட்டமன்றம் சட்டம் நிறை வேற்றினால் - அரசியல் சட்டப்பிரிவு 200- ன் கீழ் அதற்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தை ஆளுநர் அமைச்சரவை முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு தன் கொள்கைக்கு மாறாக உள்ளது என்று நிராகரிக்காமல் - அமைச்சரவை என்ன அறிவுரை வழங்குகிறதோ அதன்படிதான் நடக்க வேண்டும். இதனைத்தான் உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளும் சொல்கிறது. சமீபத்தில் வெளியான பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பும் அதனைத்தான் சொல்கிறது.

“the governor is but a shorthand expression for the state government as observed by this court'- என்று முன்பு சொல்லப்பட்ட ஒரு தீர்ப்பின் வரிகளை நீதிபதிகள் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். “கவர்னர் என்பது மாநில அரசின் சுருக்கெழுத்து மட்டுமே” என்று நீதிபதிகள் கூறி இருக்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் மட்டும்தான். இதில் முடிவெடுக்காமல் தாமதித்தால் அதில் நீதித்துறை தலையிடும் என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள். “அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக முடிவெடுக்க ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை” என்பதை ஆணித்தரமாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசால் அனுப்பி வைக்கப்பட்டதில் பரிசீலிக்க எதுவுமில்லை. மேதகு ஆளுநர் மனம் வைத்து ஒப்புதல் அளிக்க வேண்டும்! அவ்வளவுதான்!

banner

Related Stories

Related Stories