முரசொலி தலையங்கம்

“தமிழ்மண்ணில் கலைஞர் பேசிய கருத்துக்களையே விரிவாகப்பேசியுள்ளார் வெங்கையா நாயுடு”: ‘முரசொலி’ ஏடு புகழாரம்!

தலைவர் கலைஞர் சிலையைத் திறந்து வைக்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைக்கப்பட்டபோது, பல்வேறு அரசியல் முடிச்சுகளைப் போட்டு பலரும் அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தார்கள்.

“தமிழ்மண்ணில் கலைஞர் பேசிய கருத்துக்களையே விரிவாகப்பேசியுள்ளார் வெங்கையா நாயுடு”: ‘முரசொலி’ ஏடு புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என வாழ்ந்த முத்தமிழறிஞர் - தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நெடுஉயர் திருவுருவச் சிலையை பேரறிஞர் அண்ணா சாலையில் - தந்தை பெரியாருக்கும் - பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுக்கும் நடுவில் நிறுவி இருக்கிறார் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

இந்தப் பெருமைமிகு விழாவை இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்களை வைத்து திறந்தும் வைத்துவிட்டார். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் திருவுருவப் படத்தை இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். சிலையை, குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள். எத்தனையோ பிரதமர்களை - குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் என்பதால்தான் இப்படி பெரிய பதவிகளில் இருப்பவர்கள் தானே விரும்பி - இந்த விழாக்களில் பங்கெடுக்கிறார்கள்.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் சிலையைத் திறந்து வைக்க குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் அழைக்கப்பட்டபோது, பல்வேறு அரசியல் முடிச்சுகளைப் போட்டு பலரும் அதற்கு விளக்கம் அளித்துக் கொண்டு இருந்தார்கள். அவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குமான நட்பு 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் நட்பு என்பதை அவர்கள் அறியவில்லை.

1999 ஆம் ஆண்டு இந்திய அரசியலில் - அதிலும் குறிப்பாக ஒன்றிய ஆட்சியில் ஒரு நிலையற்ற தன்மை உருவான போது மரியாதைக்குரிய அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அப்போது ஒன்றிய ஆட்சியாளர்களுக்கும் நமக்குமான நெருக்கம் உருவாகக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவர்தான் இன்றைய குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள். அன்றைய தினம் உருவான தேசிய ஜனநாயக் கூட்டணியை உருவாக்கி ஒருவிதமான நெருக்கத்தை உருவாக்கக் காரணமாக அமைந்தவர்களுள் அவரும் ஒருவர்.

2001 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் மிகக்கொடூரமான முறையில் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டார். அப்போது ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தாலும் துணிச்சலாக அறிக்கை வெளியிட்டார்கள். இவை அனைத்துக்கும் மேலாக எங்கு எந்தப் பொறுப்பில் இருந்தாலும் தனது கருத்தை வெளிப்படையாகச் சொல்லக்கூடிய துணிச்சலைப் பெற்றவர் அவர்.

கடந்த ஜனவரி மாதம் ஒரு விழாவில் பேசும் போது - “பிற மதங்கள் குறித்த வெறுப்புப் பேச்சுக்களும் பதிவுகளும் நமது கலாச்சாரம், பாரம்பரியம், அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் மற்றும் நெறிமுறைகளுக்கு எதிரானவை. மதச்சார்பின்மை ஒவ்வோர் இந்தியனின் ரத்தத்திலும் உள்ளது” என்று சொன்னவர் குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள்.

“நாட்டில் ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தை அல்லது நம்பிக்கையை பின்பற்றும் உரிமை உள்ளது. அதே நேரம் மற்ற மதங்கள் குறித்த வெறுப்புப் பேச்சுகள், பதிவுகளை வெளியிடக் கூடாது. இவை நமது இந்திய நெறிமுறைகளுக்கு எதிரானது. அந்த வகையில் இந்தியாவின் மதிப்பீடுகளை வலுப்படுத்த நாம் முன்வர வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தியவர் அவர்.

அவர் குடியரசுத் துணைத் தலைவராக ஆனபோது, ‘இனி நான் கட்சி சார்பற்றவன், அரசியலமைப்புச் சட்டத்தை மட்டுமே பின்பற்றுவேன்’ என்று நெஞ்சுயர்த்திச் சொன்னவர் அவர். அதேபோல் நடந்தும் காட்டிய ஒரு மாபெரும் ஆளுமையாக அவர் இருப்பதால்தான் அவரை அழைத்து சிலையைத் திறக்க வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அந்த அடிப்படையில் அழைக்கப்பட்ட குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரை என்பது இன்றைய இந்திய அரசியலுக்கு மிகமிக முக்கியமான அறிவுரைகளைக் கொண்டதாக அடங்கி இருந்தது. இந்த நாட்டில் வெறுப்பரசியலை விதைப்பதற்கு பா.ஜ.க. போன்ற அடிப்படைவாத அமைப்புகள் முனைந்து வரக்கூடிய சூழலில் அரசியல் கட்சிகள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை குடியரசுத் துணைத் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

‘பொதுவாழ்வில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒருவரை மற்றவர் மதிக்கும் பண்பை அரசியல்வாதிகள் பெற்றிருக்க வேண்டும்’ என்று கட்டளையிட்டுள்ளார். மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் சூழல் என்பது பா.ஜ.க. ஆட்சி காலத்தில் அதிகமாகி வருகிறது. இவை அனைத்துக்கும் பதில் சொல்வதைப் போலவும் அவர் தனது கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

“மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் நாடு வளர்ந்துவிடும். மாநிலங்களின் ஒட்டு மொத்த வளர்ச்சி இல்லாமல் நாடு வளர்ந்திட முடியாது. எனவே மத்திய - மாநில அரசுகள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும். அரசியல் நிலைப்பாடுகளை மறந்து குழுவாகச் செயல்பட வேண்டும்” என்ற கூட்டாட்சித் தத்துவத்தின் குரலை ஓங்கி ஒலித்தார்.

“1947 ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பல்வேறு முதலமைச்சர்கள் ஆண்டுள்ளார்கள். அவர்கள், தங்களது எண்ணங்களுக்கு ஏற்ப தங்களது மாநிலங்களை வளர்த்துள்ளார்கள். திட்டங்களை தீட்டி உள்ளார்கள். இது போன்ற தொடர்ச்சியான திட்டப்பணிகளால்தான் நாடு முன்னேறியது” என்றும் அவர் விளக்கினார்.

ஒவ்வொரு மாநிலத்தையும் ஆண்ட பல்வேறு முதலமைச் சர்கள் தங்கள் தங்கள் மாநிலத்தை வளர்த்ததால் - ஒட்டுமொத்தமாக இந்தியாவே வளர்ந்தது என்பதை கம்பீரமாக சுட்டிக் காட்டினார். தாய்மொழியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் விரிவாகப் பேசிய அவர், ‘எந்த மொழியையும் எதிர்க்கவும் வேண்டாம், எந்த மொழியையும் திணிக்கவும் வேண்டாம்’ என்றும் சொன்னார். திணிப்பதால்தான் எதிர்க்க வேண்டி உள்ளது என்பதே நடைமுறை உண்மையாக இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியப் பண்பாடு என்பதை அவர் வலியுறுத்தினார்.

‘தனக்கு ஏற்பு இல்லாத கருத்துக்கள் இருந்தாலும் அதையும் கனிவுடன் கேட்பதே ஜனநாயகம்’ என்றார். ‘அரசியல் மூலமாகக் கிடைத்த அதிகாரத்தை மக்கள் சேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்றும் சொன்னார். காலம் காலமாக திராவிட முன்னேற்றக் கழகமும் - தலைவர் கலைஞரும் எதையெல்லாம் இந்த தமிழ்மண்ணில் விதைத்து வந்தார்களோ அதை எல்லாம்தான் விரிவாகப் பேசினார் வெங்கையா நாயுடு அவர்கள். அதுவும் குடியரசுத் துணைத் தலைவராக இருந்து பேசினார்கள். அதுவும், இந்தக் காலக்கட்டத்தில் பேசினார்கள். அதுவும், பிரதமர் வந்து சென்ற இரண்டு நாட்களில் பேசினார்கள். அதுவும் கலைஞரின் சிலையைத் திறந்து வைத்துப் பேசினார்கள்.

தலைவர் கலைஞர் காலங்களைக் கடந்தும் காலங்களைத் தீர்மானிப்பவர் என்பதை குடியரசுத் துணைத் தலைவரின் உரையும் நிரூபிக்கிறது!

banner

Related Stories

Related Stories