முரசொலி தலையங்கம்

”மேட்டூரிலும் சாதனை.. இதுவே நல்லாட்சியின் அறிகுறி” - தி.மு.க அரசுக்கு முரசொலி தலையங்கம் புகழாரம்!

டெல்டாவின் கடைமடை வரை தண்ணீர் செல்லவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பணிகளை முன்னதாகவே தொடங்குவதற்கும், செயல்படுவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது.

”மேட்டூரிலும் சாதனை.. இதுவே நல்லாட்சியின் அறிகுறி” - தி.மு.க அரசுக்கு முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மே மாதமே தண்ணீர் திறந்து விடப்பட்ட வரலாற்று சாதனை குறித்து முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதன் விவரம் பின்வருமாறு:

”மேட்டூர் அணையே சாதனை என்றால், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதிலும் சாதனையைப் படைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விடுதலை பெற்ற இந்தியாவில் - 1947ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக மேட்டூர் அணை மே மாதத்தில் (மே 24) திறந்து விடப்பட்டுள்ளது. இது வரலாற்றில் பதியத்க்கது ஆகும். ஜூன்12ஆம் நாள் திறப்பது தான் வழக்கமானது. அதே நாளில் திறப்பதுகூட இயலாத காரியமாக இருக்கும். மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அணையில் இருந்து ஜூன் 12ஆம் நாள் தண்ணீர் திறந்துவிடுவது என்பது 18 ஆண்டுகள் மட்டுமே நடந்துள்ளது. ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடுவது என்பது 10 ஆண்டுகள் மட்டுமே நடந்துள்ளது.

இந்த பத்தில் ஒன்பது ஆண்டுகள் - சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகத் தான் நடந்துள்ளது. 1936, 1937, 1938, 1940, 1942, 1943, 1945, 1946, 1947ஆகிய ஆண்டுகளில் ஜூன் 12ஆம் தேதிக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு முன்னதாக திறந்துவிடப் பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 12 ஆம் நாளுக்கு முன்னதாக தண்ணீர் திறந்து விடப்படுவது இது 11ஆவது முறையாகும். ஆனாலும் மே மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய மகத்தான சாதனை நடந்துள்ளது. அதேபோல் விடுதலை இந்தியாவில் ஜுன் 12 ஆம் தேதி மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து திறந்து விடப்படுவதும் இப்போதுதான். இவை அனைத்தும் நன்மையின் அறிகுறிகளாக - நல்லாட்சியின் அறிகுறிகளாக அமைந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் இருக்கும் சாதனைகளின் அறிகுறிகளில் ஒன்று இந்த மேட்டூர் அணை ஆகும். 1934ஆம் ஆண்டு இதுகட்டி முடிக்கப்பட்டது. கட்டுவதற்கு ஒன்பது ஆண்டுகள் ஆனது. பத்தாயிரம் பேர் இதன் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள். சேலம் மாவட்டத்தின் மேட்டூர் பகுதியில் இவ்வணை நேயம்பாடி, செட்டிபட்டி, தாளவாடி, பழைய நாயம்பாடி, பண்ணவாடி, கோட்டையூர் உள்ளிட்ட 33க்கும் மேற்பட்ட கிராமங்கள் இணைத்து கட்டப்பட்ட அணையாகும். பிரமாண்டம் என்றால் இது மாபெரும் பிரமாண்டம் ஆகும். அணையின் அதிகபட்ச உயரம் என்பது 214 அடி. அகலம் 171 அடி ஆகும். அதிகபட்ச தண்ணீர் சேமிப்பு உயரம் என்பது 120 அடி ஆகும். அத்தகைய உயரக் கம்பீரம் கொண்டது மேட்டூர்.

கர்நாடகாவில் உள்ள கபினி - கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் வருகிறது. இங்கே அணை கட்டுவதற்கு பிரிட்டிஷ் அரசு 200 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சிகள் எடுத்தாலும் அது கைகூடவில்லை. ஆனால் இதற்கான முயற்சிகள் 1920களில்தான் தொடங்கியது. இத்தகைய ஒரு அணை தேவை என்பதை தஞ்சை மாவட்டத்து விவசாயிகள்தான் முதலில் முன்வைத்தார்கள். ஆனால் அப்போது மைசூர் சமஸ்தானம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுமொழியாக, ‘புயல், வெள்ள இழப்பீடாக ஆண்டுதோறும் எங்களுக்கு 30 லட்சம் ரூபாய் தரவேண்டும்’ என்று தஞ்சை விவசாயிகள் கோரிக்கை வைத்தார்கள். ஆண்டுதோறும் இப்படி பணம் கொடுப்பதற்குப் பதிலாக அணைகட்டிக் கொள்ள ஒப்புதல் தந்தது மைசூர். அப்படி கட்டப்பட்டதுதான் இந்த மேட்டூர் அணை ஆகும். விவசாயிகள் என்ன நோக்கத்துக்காக இதனைக் கட்டுவதற்கு ஆலோசனை சொன்னார்களோ, அந்த நன்மையை மிக அதிகப்படியாகவே கொடுத்து வருகிறது மேட்டூர் அணை. இந்த அணையினால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 14.05 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு பாசன வசதி பெறுகின்றது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.

விவசாயிகள் அணைக்கு நீர்வரத்து உள்ள மடைபடுகைகளிலும், நீர்ப்பிடிப்பு உள்ள பகுதிகளுக்கு அருகிலும் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். எனவே மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதை மிகப்பெரிய திருவிழாவைப் போல இந்த மாவட்டத்து மக்கள் வரவேற்பார்கள். அதிலும் முன்கூட்டியே திறந்து வைத்திருப்பது இன்னும் மகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது. டெல்டா பகுதி முழுவதும் தண்ணீர் சென்று நிலத்தடி நீரானது அதிகம் ஆவதற்கு இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. டெல்டாவின் கடைமடை வரை தண்ணீர் செல்லவும் இதனால் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சம்பா சாகுபடி பணிகளை முன்னதாகவே தொடங்குவதற்கும், செயல்படுவதற்கும் வழி ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் அடித்தளமாக தூர்வாரும் பணிகளை கடந்த ஓராண்டு காலமாக தி.மு.க. அரசு சிறப்பாகச் செய்து வருவதும் நீர் வரத்துக்கு வசதியாக அமையும். தூர்வாரும் பணிகளை முன்னதாகத் தொடங்கி முன்னதாக அரசு முடித்துள்ளது.

"காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் மே 31ஆம் தேதிக்குள் முடிக்கப்படும்’’ என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார். இந்தப் பணிகள் கடந்த ஏப்ரல் 23 ஆம்தேதி தொடங்கப்பட்டது என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ஆறுகளை முழுமையாக தூர்வாரி முடித்துவிட்டோம் என்றும் சொல்லி இருக்கிறார். அனைத்துப் பணிகளையும் மே 31க்குள் முடிப்போம் என்றும் அறிவித்துள்ளார் அமைச்சர் துரைமுருகன் அவர்கள். எனவே கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பாசனப் பரப்பு அதிகமாகவும், விளைச்சல் அதிகமாகவும் ஆகும் என்பதை உணர முடிகிறது. இவை நல்லாட்சியின் அடையாளங்கள் ஆகும். மேட்டூர் அணையைக் கட்டியவர் பொறியாளர் ஸ்டேன்லி. அதனால் இதனை ஸ்டேன்லி நீர்த் தேக்கம் என்றும் சொல்வார்கள். முதன் முறையாக மே மாதத்தில் மேட்டூர் அணையைத் திறந்து வைத்ததன் மூலமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் பெயரும் இத்தோடு சேர்த்துப் பேசப்படும்.” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories