முரசொலி தலையங்கம்

ஆட்சியில் இருக்கும் போது எதையும் கிழிக்காத பழனிசாமி.. இப்போது பேசுவது எல்லாம்? : முரசொலி தலையங்கம்!

தமிழ் நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜானகி. அவர், எம்.ஜி.ஆரின் மனைவி தானே தவிர மக்கள் சேவகர் அல்ல.

ஆட்சியில் இருக்கும் போது எதையும் கிழிக்காத பழனிசாமி.. இப்போது பேசுவது எல்லாம்? : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.20 2022) தலையங்கம் வருமாறு:

ஆட்சியில் இருக்கும் போது எதையுமே கிழிக்காத பழனிசாமி, பதவி பறிக்கப்பட்டதும் பேசும் பேச்சுகள் ‘தத்துவ முத்துகளாக' இருக்கின்றன.தான் என்ன சொல்கிறோம் என்பது அவருக்கே தெரியவில்லை.தன்னைப் புத்திசாலி யாக நினைத்துக் கொண்டு தானேஏதேதோசொல்லிக் கொண்டு இருக்கிறார். இப்படித்தான் ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார் பழனிசாமி.

“அ.தி.மு.க.வில் வாரிசு அரசியல் கிடையாது” - என்று திருவாய் மலர்ந்துள்ளார் பழனிசாமி. அவருக்கு அ.தி.மு.க.-வைப் பற்றியே தெரிய வில்லை என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.

எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி அ.தி.மு.க. முதலமைச்சராக இருக்கும் போது தான் எம்.ஜி. ஆர். அவர்கள் மறைந்தார்கள். அவரை அடுத்து தமிழ் நாட்டின் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜானகி. அவர், எம்.ஜி.ஆரின் மனைவி தானே தவிர மக்கள் சேவகர் அல்ல. அதற்கு முந்தைய நாள் வரைக்கும் அவருக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கட்சிக் கூட்டங்களில் கூட அவர் பேசியது இல்லை. எந்தப் பொறுப்பிலும் இருந்ததும் இல்லை. எம்.ஜி.ஆரின் மனைவி என்ற ஒரே வாரிசுத் தகுதியுடன் தான் ஜானகி அவர்கள், அன்றைய தினம் முதலமைச்சராக ஆக்கப்பட்டார். இது வாரிசு அரசியல் இல்லையா?

ஜானகிக்கும், ஜெயலலிதாவுக்கும் போட்டி ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். அவர்கள் இறந்தபோது, ‘உடன்கட்டை ஏறிவிடலாமா என்று யோசித்தேன்' என்று சொன்னவர் ஜெயலலிதா. அதாவது தனக்கும் - எம்.ஜி.ஆருக்குமான நெருக்கத்தைத் தான் அப்படி சுட்டிக் காட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருடன் 29க்கும் மேற்பட்ட படங்களில் உடன் நடித்தவர் ஜெயலலிதா. தன்னோடு நடித்த பலரையும் வெவ்வேறு காலக்கட்டத்தில் அரசியலுக்குள் கொண்டு வந்தவர் - கொண்டுவர நினைத்தவர் எம்.ஜி.ஆர். வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பதவி கொடுத்தார் எம்.ஜி.ஆர். ‘நான் அரசியலுக்கு வரவிரும்பினால் பதவி தரத் தயார்' என்று எம்.ஜி.ஆர். சொன்னதாக சரோஜா தேவி அவர்களே பலமுறை பேட்டி அளித்துள்ளார்கள். இதில் இருந்து தெரிவது எல்லாம் தன்னோடு நடித்த நடிகைகளை, தன்னோடு நடித்தவர்கள் என்ற ஒற்றைத் தகுதியுடன் அரசியலுக்குள் கொண்டு வர நினைத்தார் எம்.ஜி.ஆர். இது ‘தத்தெடுத்த வாரிசு' முறை அல்லவா?

ஜானகிக்கும், ஜெயலலிதாவுக்கும் நடந்த போட்டியில் ஜெயலலிதா வென்றார். ஜெயலலிதாவைச் சந்தித்து, ஜானகி தனதுகட்சியை இணைத்தார். வாரிசுகள் ஒன்று சேர்ந்தார்கள். அப்படிஎம்.ஜி.ஆரின் வாரிசுகளால் உருவாக்கப்பட்டதுதான் ஜெயலலிதாவின் அ.தி.மு.க.

அந்த ஜெயலலிதாவுக்கு உதவி செய்வதற்காக போயஸ் கார்டனுக்குள் போனவர் சசிகலா. அவரது கட்டுப்பாட்டில்தான் 1990 முதல் அந்தக் கட்ச இருந்தது. சசிகலாவின் குடும்ப வாரிசுகளின் கொலுமண்டபமாக அ.தி.மு.க. மாறியது. பழனிசாமிகள், கப்பம் கட்டியது சசிகலாவின் குடும்பத்திடம்தான். இவர்களில் யார் மந்திரி, யார் எந்திரி என்பதை தீர்மானித்தவர் சசிகலாவும் அவரது குடும்பத்தினரும்தான்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அந்தக் கட்சிக்கு கடைக்கோடித் தொண்டர் யாரும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை. புறக்கடையில் இருந்த சசிகலாதான் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றக் கட்சித் தலைவராக, எந்த சாமானியனும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதுவரை சாம்ராஜ்யத்தை மறைமுகமாக நடத்திய சசிகலாவைத்தான் முதலமைச்சராகத்

தேர்ந்தெடுக்கத் தேதி குறிக்கப்பட்டது. ஆனால் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதிசெய்யப்பட்டதால் - கோட்டைக்குப் போக நினைத்த சசிகலா - சிறைக்குப் போக வேண்டியதாயிற்று. அப்போதும் தனது வாரிசுரிமையை நிலைநாட்டிவிட்டுத் தான் போனார் சசிகலா.

கூவத்தூரில் பெரும்பான்மை அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வணக்கம் சொல்லி சட்டமன்றக் கட்சித் தலைவராக பழனிசாமி தேர்வு ஆகவில்லை. சசிகலாவின் காலை நோக்கி ஊர்ந்து போய் தனது விசுவாசத்தைக் காட்டி ‘அடிமை வாரிசாக' அறிவிக்கப்பட்டார். பண்ணையார்களின் காலில் விழுந்து நிலத்தை பினாமிக்குத்தகை ‘பெறுவதைப் போல பதவியைப் பெற்றவர் பழனிசாமி. தான் யாரால் பதவி பெற்றோம், அத்தகைய பதவியை தனக்குத் தந்தவருக்கு என்ன தகுதி இருந்தது என்பதை பழனிசாமியால் சொல்ல முடியுமா?

அதுதான் போகட்டும். இராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரனுக்காக வாக்குக் கேட்டார் பழனிசாமி. முதலமைச்சராக இருக்கும் போது வாக்குக் கேட்டார் பழனிசாமி. அந்த டிடிவி யார்? பழனிசாமியால் விளக்கிச் சொல்ல முடியுமா? அவருக்கு மறந்திருந்தால், நினைவூட்டுவது நமது கடமை. சசிகலாவின் அக்கா பெயர் வனிதா. அவர் மகன் தான் டிடிவி தினகரன்.

சசிகலா மூலமாக அ.தி.மு.க. பலன் அடைந்து விடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க. ஆடிய பரமபத விளையாட்டில் அந்தக் குடும்பத்தை எதிர்க்கும் நாடகத்தில் இப்போது தற்காலிகமாக நடித்துக் கொண்டு இருக்கிறார்பழனிசாமி. இதனை பா.ஜ.க. செய்யாமல் போயிருந்தால் சசிகலா - டிடிவி அன்கோ முன்னால் கைகட்டிச் சேவகம் செய்து கொண்டு இருப்பார் பழனிசாமி.இவர் மீதான புகார்களை வைத்து மிரட்டிக் கொண்டு இருக்கிறது டெல்லி.மிரண்டு கொண்டு இருக்கிறார் பழனிசாமி. இவர் வாரிசுகளைப் பற்றிப் பேசலாமா?

போகட்டும். அ.தி.மு.க.வின் இன்றைய ஒருங்கிணைப்பாளர் பெயர் ஓ.பன்னீர்செல்வம். இன்றைய அ.தி.மு.க.வுக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒரே ஒரு உறுப்பினர்தான் இருக்கிறார் அவர் பெயர் ரவீந்திரநாத்குமார். இவர் பன்னீர்செல்வத்தின் மகன். அதாவது வாரிசு.இதுவாவது பழனிசாமிக்கு தெரியுமா?ஒருவேளை, பன்னீர்செல்வத்துக்கு எதிராகத் தான் ‘அ.தி.மு.க.வில்வாரிசு அரசியல் கிடையாது' என்று பழனிசாமி சொல்லத் தொடங்கி இருக்கிறாரா? பொறுத்திருந்து பார்ப்போம்!

banner

Related Stories

Related Stories