முரசொலி தலையங்கம்

"பயங்கரவாதத்தால் பசி தீராது!.. பாகிஸ்தானிடம் இருந்து உலகம் பாடம் கற்க வேண்டும்": முரசொலி தலையங்கம்!

பயங்கரவாதச் சூழலில் இருந்து விடுவித்தால் மட்டுமே அந்த நாட்டுக்கும் நல்லது. மற்ற நாடுகளுக்கும் நல்லது.

"பயங்கரவாதத்தால் பசி தீராது!.. பாகிஸ்தானிடம் இருந்து உலகம் பாடம் கற்க வேண்டும்": முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல் 14,2022) தலையங்கம் வருமாறு:

பயங்கரவாதத்தால் பஞ்சம் தீராது. ஆனால் பஞ்சம் வரும்!

பயங்கரவாதத்தால் பசி தீராது. பட்டினிச் சாவுகள் தான் அதிகரிக்கும்!

பயங்கரவாதத்தால் வறுமை தீராது. ஆனால் வறுமை வரும்!

பயங்கரவாதத்தால் வளர்ச்சியை வழங்க முடியாது. ஆனால் வளர்ச்சி சிதையும்!

பயங்கரவாதத்தால் அமைதியை உருவாக்க முடியாது.ஆனால் அமைதியே காணாமல் போய்விடும்!

பயங்கரவாதம் வெல்லாது. அதனை இன்னொரு பயங்கரவாதம் வீழ்த்தும். அதனை இன்னொரு பயங்கரவாதம் சாய்க்கும்.இந்த உலகத்துக்கு பாகிஸ்தான் மூலமாகக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றி பெற்றது. அவரது ஆட்சி கவிழ்ந்தது. புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( நவாஸ்) கட்சித் தலைவர் ஷாபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். "வரலாற்றில் முதல்முறையாக ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. இதற்காக நாட்டு மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான பிவாவல் புட்டோ ஜர்தாரி சொல்லி இருக்கிறார். இவர் பெனாசீர் புட்டோவின் மகன்.

"ஏப்ரல் 10 என்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாள். இந்த நாளில் தான் 1973 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது. இதே நாளில்தான் 1986 ஆம் ஆண்டு எனது தாய் பெனாசீர், ஜியாவுல் ஹக்குக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார். இந்த 2022 என்பது நாட்டின் மீதான ஜனநாயகமற்ற சுமையாக தன்னை நிரூபித்துக் கொண்டவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட நாள். இன்று உங்களை பழைய பாகிஸ் தானுக்கு வரவேற்கிறேன்" என்று பிவாவல் புட்டோ ஜர்தாரி எழுதி இருக்கிறார்.

இம்ரான்கான்,2018 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த போதும், ‘புதிய பாகிஸ்தானை உருவாக்கப் போகிறேன்' என்று தான் சொன்னார். அது பழைய பாகிஸ்தானாகத்தான் இருந்தது. அதேபோல் இன்றும், இனியும் ஆகிவிடக் கூடாது. பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும் கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் அந்நாட்டைச் சூழ்ந்துள்ள பயங்கரவாத நோய்க்கு எதிராகச் செயல்பட்டாக வேண்டும். அதைச் செய்யாதவரையில் எத்தனை ஆட்சி மாற்றம் நடந்தாலும் அந்த நாட்டுக்குப் பயனில்லை.

மருந்துகளை மாற்றிக் கொண்டே போவதால் மட்டுமே நோய் குணமாகி விடாது என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும். குணம் மாறியாக வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக வலியுறுத்தி இருக்கின்றன. இந்திய - அமெரிக்க வெளியுறவு பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை வாஷிங்டனில் நடந்துள்ளது. அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கை மிகமிக முக்கியமானது.

"பாகிஸ்தானுக்குச் சொந்தமான எந்தவொரு பகுதியையும் பயங்கர வாதத் தாக்குதலுக்காகப் பயங்கரவாதிகள் பயன்படுத்தாமல் இருப்பதை அந்த நாட்டு அரசு உறுதி செய்ய வேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான நீடித்த, உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தான் உடனடியாக மேற் கொள்ள வேண்டும். ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலால் தடை விதிக்கப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்"" என்பது அதன் உள்ளடக்கம் ஆகும். பாகிஸ்தானில் அமைந்துள்ள புதிய அரசு, இந்தச் சிந்தனையை மையப்படுத்திச் செயல்பட வேண்டும்.

அப்படிச் செயல்படும் என்ற நம்பிக்கையை தனது வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்தி இருக்கிறார் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்."இந்தியாவுடன் அமைதியான, கூட்டுறவான உறவை பாகிஸ்தான் விரும்பு கிறது. ஜம்முகாஷ்மீர் உள்பட தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு அமைதி யான தீர்வு அவசியம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ் தானின் தியாகம் அனைவரும் அறிந்ததே. அமைதியைப் பாதுகாத்து நம் மக்களின் சமூக - பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்துவோம்"என்று புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சொன்னதைப் போல நடந்தால் மட்டுமே அந்த நாட்டுக்கு நன்மை.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர்தான் இந்த ஷாபாஸ் ஷெரீப். பாகிஸ்தான் முஸ்லீம் லீக்( நவாஸ் பிரிவு) தலைவர் இவர். மூன்று முறை அந்த நாட்டின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் அவர். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவரே, பாகிஸ்தானில் முஷாரப் தலைமையில் ராணுவ ஆட்சி உருவானபோது சவுதிக்கு தப்பி எட்டு ஆண்டுகள் அங்கு குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அதனால் ராணுவ ஆட்சியின் குணம் என்பது என்ன என்பதை அவருக்கு வேறு யாரும் சொல்லத் தேவையில்லை.

‘நவாஸ் ஷெரீப்பை விட்டு விலகி வந்தால் உங்களுக்கு பிரதமர் பதவி தருகிறேன்' என்று முஷாரப் சொன்னபோதும், ராணுவ ஆட்சியாளர்கள் பக்கம் சேராமல் இருந்தவர் ஷாபாஸ் ஷெரீப் என்றும் சொல்லப்படுகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சொல்லி, கைது செய்தார் அன்றைய பிரதமர் இம்ரான்கான். அதனை அரசியல் பழிவாங்கல் என்று சொல்லி பல மாதங்கள் சிறையில் இருந்தவர்தான் ஷாபாஸ் ஷெரீப். காரணம் எதுவாக இருந்தாலும் பல்வேறு நெருக்கடிகளை தனது வாழ்க்கையில் அனு பவித்தவர்தான் இன்று புதிய பிரதமராக வந்துள்ளார். அவர் தனது கடந்த காலப்பாடங்களின் மூலமாக பாகிஸ்தானை, பயங்கரவாதச் சூழலில் இருந்து விடுவித்தால் மட்டுமே அந்த நாட்டுக்கும் நல்லது. மற்ற நாடுகளுக்கும் நல்லது.

banner

Related Stories

Related Stories