முரசொலி தலையங்கம்

”இந்தியாவை வழிநடத்தும் பிரகடன உரையாக அமைந்த முதலமைச்சரின் சிபிஎம் மாநாட்டு பேச்சு”: முரசொலி தலையங்கம்!

ஒரு சிலரிடம் அதிகாரத்தை குவிக்க அதன் அப்பாவித் தொண்டர்கள் தன்னை அறியாமல் பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதன் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

”இந்தியாவை வழிநடத்தும் பிரகடன உரையாக அமைந்த முதலமைச்சரின் சிபிஎம் மாநாட்டு பேச்சு”: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஏப்ரல்.10 2022) தலையங்கம் வருமாறு:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் கண்ணூரில் நடந்த 23 ஆவது அகில இந்திய மாநாடு இந்தியாவுக்கே வழிகாட்டும் மாநாடாக நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை இந்தியாவின் எதிர்காலத்துக்கு வழிகாட்டும் உரையாக அமைந்துள்ளது.

‘ஒன்றிய - மாநில உறவுகள்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை உரையாற்ற வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்து இருந்தது. ‘உறவுகள்’ என்பதை விட அந்த விவகாரத்தில் ‘கசப்புகள்’தான் அதிகம். அதற்காக கசப்புகளையே பேசிக் கொண்டு இருக்க முடியாது என்பதால் கசப்புகளை லேசாகத் தொட்டுக்காட்டிவிட்டு, அடுத்த கட்டமாக என்ன செய்தாக வேண்டும் என்பதை மிக விளக்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

அவர் பேசி முடித்ததும், அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. ‘ரெட் சல்யூட்’, ‘ரெட் சல்யூட்’ என்று அந்த அரங்கமே முழங்கியது. இந்தியாவைவழிநடத்தும் பிரகடன உரையாக அது அமைந்திருந்ததுதான் இத்தகைய வரவேற்புக்கு மிக முக்கியமான காரணம்.

“நான் ஏதோ தமிழ்நாட்டைக் காப்பதற்காக மட்டுமோ - பினராயி விஜயன் அவர்கள் கேரளாவைக் காப்பாற்றுவதற்கு மட்டுமோ - இந்த முழக்கத்தை முன்வைக்கவில்லை. இந்தியாவைக் காப்பாற்ற வேண்டு மானால் - முதலில் மாநிலங்கள் காப்பாற்றப்பட வேண்டும். மாநிலங்கள்காப்பாற்றப்பட்டால்தான் இந்திய நாடு காப்பாற்றப்படும். வீடுகள் இருந்தால்தான் அது தெரு. தெருக்கள் சேர்ந்தால்தான் அது ஊர். ஊர்கள் சேர்ந்தால்தான் அது மாநிலம். மாநிலங்கள் இணைந்தால்தான் அது நாடு” என்பதை முதலில் விளக்கிச் சொல்லிய முதலமைச்சர் அவர்கள்,

“கூட்டாட்சியைச் சிதைக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மாநிலங்களை ஒருங்கிணைத்து குழு அமைத்து நாம் போராட வேண்டும்.தென்மாநில முதலமைச்சர்களின் குழு அமைக்கப்பட வேண்டும். அதன்பிறகு ஒட்டுமொத்தமாக மற்ற மாநில முதலமைச்சர்கள் கொண்ட குழுவையும் தனியாக அமைக்க வேண்டும். மாநிலங்கள் அதிக அதிகாரம் கொண்டவையாக ஆக்கப்பட இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும். அதற்கு அரசியல் எல்லைகளைக் கடந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.” என்று சொல்லி முடித்திருப்பது முக்கியமானது.

“Let us fight for state auntonomy! Let us create a truly federal india !” - என்பதே கண்ணூர்பிரகடனம் ஆகும். இந்த முழக்கத்துக்கு அடித்தளம் அமைத்ததன் மூலமாகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வரலாற்றுக் கடமையை மிகச் சரியாக நிறைவேற்றி இருக்கிறது.

“மேல் அதிகாரம் அனைத்தும் டெல்லியில் குவிந்திருப்பதை மாறிடத்தான் மாநில சுயாட்சித் தத்துவம் பிறந்திருக்கிறது. மாநிலசுயாட்சி என்பது தேவையின் அடிப்படையில் எழுந்த அரசியல் கோரிக்கையே தவிர அரசியல் கட்சிக் கோரிக்கை அல்ல” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டார்கள். அந்த வகையில் திராவிட முன்னேற்றக் கழகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும், இதே எண்ணம் கொண்ட கட்சிகளும் தங்களது அரசியல் கட்சிக் கோரிக்கைகளாக அல்ல, அரசியல் கோரிக்கைகளாகவே எழுப்புகிறோம்.

“வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட் சியின் அடிப்படை”என்று கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவருமான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் அவர்கள் குறிப்பிட்டார்கள். “மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தருவதால் மத்திய அரசு பலவீனப்படாது” என்பதை அவர் விரிவாக எழுதி இருக்கிறார்.

1974 ஆம் ஆண்டு சென்னை சட்ட மன்றத்தில் முதல்வர் கலைஞர்அவர்கள் ஆற்றிய பேருரை என்பது இந்த தத்துவத்தின் பொன்னேடாகஇன்றும் சட்டமன்றத்தில் இருக்கிறது. மாநில சுயாட்சியை உருவாக்குவதற்காக இராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து அதற்கு சட்டபூர்வமான வடிவம் கொடுத்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.

ஈ.எம்.எஸ். வழியில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மாநாடு போடுகிறார். பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில்அதில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மாநில சுயாட்சிக் குரலை ஒலித்துவிட்டு வந்திருக்கிறார்.

“ஒரே நாடு - ஒரே தேர்தல் - ஒரே உணவு - ஒரே தேர்வு - ஒரே கல்வி- ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே பண்பாடு - ஒரே கலாச்சாரம் - என்றுஎல்லாவற்றையும் ஒரே - ஒரே - ஒரே என்று கோரஸ் பாடுகிறார்கள்.இப்படியே போனால் ஒரே கட்சி என்று ஆகிவிடும். ஒரே கட்சியானால் -ஒரே ஆள் என்று ஆகிவிடும். இதை விட ஆபத்தானது வேறு இருக்கமுடியாது. ஒரே கட்சி என்று ஆகும் வரை பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி அடையலாம். ஒரே ஆள் என்று ஆகும்போது நம்மோடு சேர் ந்து பா.ஜ.க.

வினரும் எதிர்க்கத்தான் வேண்டும்.இத்தகைய எதேச்சாதி காரத்துக்கு எதிரான குரல்தான் ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ என்பது ஆகும்.” என்பதுதான் மிகமிக முக்கியமான பிரகடனம்.

பா.ஜ.க. உருவாக்க நினைக்கும் ஒற்றைத் தன்மை என்பது பா.ஜ.க.வில் இருக்கும் ஓரிருவருக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்குமே தவிர, காலப்போக்கில் அக்கட்சித் தொண்டர்களுக்கும், மற்ற முன்னணி யினருக்கும் எதிரானதாகத்தான் அமையும் என்பதுதான் முதலமைச்சர் உரையின் நுட்பமான பகுதிகள். ஒரு சிலரிடம் அதிகாரத்தை குவிக்க அதன் அப்பாவித் தொண்டர்கள் தன்னை அறியாமல் பலியாகிக் கொண்டுஇருக்கிறார்கள் என்பதன் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

கண் மூடிக் கிடப்பவர்கள் கண்களைத் திறக்க வைக்குமா கண்ணூர்?

banner

Related Stories

Related Stories