முரசொலி தலையங்கம்

‘முதல்வரின் புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல்.. ஐயோ பாவம் புலம்பத்தொடங்கி இருக்கிறார் பழனிசாமி’ : முரசொலி!

துபாய் சென்று வென்று வந்துள்ள முதலமைச்சரின் புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘காந்தாரி அடிவயிற்றில் அம்மிக் குழவியால் அடித்துக் கொண்டதைப் போல’ - ஐயோ பாவம் பழனிசாமி புலம்பத்தொடங்கி இருக்கிறார்

‘முதல்வரின் புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல்.. ஐயோ பாவம் புலம்பத்தொடங்கி இருக்கிறார் பழனிசாமி’ : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏதோ பொற்கால ஆட்சியைக் கொடுத்து விட்டுப் போனதைப் போல பழனிசாமி அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், குற்றங்கள் பெருகிவிட்டதாகவும் அவர் அறிக்கை விடுத்துள்ளார்.

துபாய் சென்று வென்று வந்துள்ள முதலமைச்சரின் புகழைத் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘காந்தாரி அடிவயிற்றில் அம்மிக் குழவியால் அடித்துக் கொண்டதைப் போல’ - ஐயோ பாவம் பழனிசாமி புலம்பத்தொடங்கி இருக்கிறார்.

தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு குறித்து அவர் அறிக்கைவிட்ட அன்றைய தினமே, டெல்லியில் இருந்து ஒரு செய்தி வந்தது. “அ.தி.மு.க. ஆட்சியில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு” என்பதை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு விளக்கம் அளித்து அதற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டு காலத்தில் சிறார்களுக்கு எதிராக 6 ஆயிரத்து 944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சியில், சிறார்களுக்கு எதிராக 6 ஆயிரத்து 944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டில் ஆயிரத்து 881 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 216 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 847 சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும், உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2018 முதல் 2020 வரை 18 ஆயிரத்து 727 போக்சோ வழக்குகளும், மகாராஷ்ட்ராவில் 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை 3 ஆண்டுகளில் சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பாக 17 ஆயிரத்து 834 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக, இந்தியாவில் 2018 முதல் 2020 வரை 3 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 17 ஆயிரத்து 89 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக, உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி மிக மோசமான ஆட்சியைக் கொடுத்த பழனிசாமி, பழசை மறந்துவிட்டு அறிக்கைகள் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

சட்டமன்றத்தில் இத்தகைய குற்றச்சாட்டு வைக்கப்பட்ட போது, “கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம் நடக்கிறது என்று பத்திரிக்கைச் செய்திகளை வைத்துச் சொல்லி இருக்கிறார். எங்காவது குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்களா என்பதை அவர் சொல்லட்டும். எங்காவது குற்றவாளிகள் தப்பினார்கள் என்று இருந்தால் சொல்லட்டும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பழனிசாமியால் பதில் சொல்ல முடியவில்லை.

அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது. அதன் மீது பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தார்கள். அப்படி புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டார்கள். தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் ஒருசிலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களும் போலீஸை மிரட்டினார்கள். சம்பந்தப்பட்ட ஒருவர், கலெக்டர் அலுவலக வாசலுக்கு வந்து பேட்டி கொடுத்தார். இன்னொருவர் முதலமைச்சர் பெயரைச் சொல்லி தனது செல்வாக்கை மீடியாவிடம் காட்டினார். இன்னொருவர் தனக்கும், அமைச்சருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகக் காட்டிக் கொண்டார்.

சி.பி.ஐ.க்கு வழக்கு ஒப்படைக்கப்படும் வரை குற்றவாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முயற்சித்தது. ஆனால் இப்போது விருதுநகரில் ஒரு சம்பவம் நடந்ததுமே, அன்றைய தினமே குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். இதுதான் அ.தி.மு.க. ஆட்சிக்கும் தி.மு.க. ஆட்சிக்குமான வேறுபாடு.

‘தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ என்கிறார் பழனிசாமி. அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்கே பாதுகாப்பு இல்லை. ‘அவர் எப்படி இறந்தார்?’ என்பதே தெரியாது.

அவரது கொடநாடு பங்களாவில் கொலை நடந்தது. கொள்ளை நடந்தது. ஜெயலலிதாவை, ஜெயலலிதாவின் வீட்டையே பாதுகாக்கத் துப்பு இல்லாத ஆட்சி தான் அ.தி.மு.க. ஆட்சி. இந்த இரண்டிலும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்பதை தி.மு.க. ஆட்சி தான் கண்டுபிடித்துக்கொண்டு இருக்கிறது. திருச்சி ராமஜெயம் கொலை ஒன்று போதாதா அ.தி.மு.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்குக்கு? இதை எல்லாம் பழனிசாமி மறக்கலாம். மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

“காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும் துறையாக மட்டும் அனைவரும் நினைக்கிறார்கள். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காத வகையில் சூழ்நிலையை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதனை நிறைவேற்றிக் காட்டுவோம்.

குற்றங்கள் குறைய வேண்டும் என்பதை விட - குற்றமே நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக அது மாற வேண்டும். கொலை - திருட்டு - பாலியல் - போதை மருந்துகள் - வன்முறைச் சம்பவங்கள் ஆகியவை தான் மிகப்பெரிய குற்றங்கள். இவை எந்தச் சூழலிலும் நடைபெறாத ஒரு காலத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் உள்துறையானது உண்மையாகச் செயல்பட உறுதி ஏற்கிறது” என்று முதலமைச்சர் அவர்கள் உறுதி எடுத்துச் செயல்படுகிறார்கள். எனவே தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி சரியாக முறையாக நடக்கும். பழனிசாமிகள் பதற வேண்டியது இல்லை.

banner

Related Stories

Related Stories