முரசொலி தலையங்கம்

காவிரி விவகாரம் : இத்தனை ஆண்டுகளாக அணைகளை யார் பாதுகாத்தது? : ஒன்றிய அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

நமது மாநில எல்லைக்குள் உள்ள அணைகளை நாமே காப்போம்!

காவிரி விவகாரம் : இத்தனை ஆண்டுகளாக அணைகளை யார்  பாதுகாத்தது? : ஒன்றிய அரசுக்கு முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.12 2022) தலையங்கம் வருமாறு:

எலாவற்றையும் ‘யாரிடமும் கேட்காமல் எடுத்துக் கொள்வது என்பது ஒன்றிய பா.ஜ.க. அரசின் வழக்கம். அதில் ஒன்று நீர் உரிமை ஆகும். அணைகள் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒன்றை நிறைவேற்றி, அனைத்து அணைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளத் துடிக்கிறார்கள். இதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் வாதாடிய திராவிட முன்னேற்றக் கழகம், இப்போது நீதிமன்றத்திலும் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

ஒன்றிய அரசின் அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்து தி.மு.க. எம்.பி.,எஸ்.இராமலிங்கம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, ஒன்றிய அரசும் பதிலைத் தாக்கல் செய்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை மக்களவையில் நிறைவேற்றியது. நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. “2021 ஆம் ஆண்டின் அணைகள் பாதுகாப்புச் சட்டம்” என்று இதற்குப் பெயர்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. உறுப்பினர் எஸ்.இராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனுவில், “மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்புதொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை” என்று தெரிவித்திருந்தார். “இந்தச் சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்புக் குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடுமுழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது” என்று குற்றம் சாட்டினார். மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்தார்.

தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலுஅடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். ஒன்றிய அரசு பதில் தர வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள்.

இப்போது ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் 5,334 பெரிய அணைகள் இருப்பதாகவும், இதில் 227 அணைகள் பழமையானவை என்றும், தற்போது 411 அணைகள் புதிதாகக் கட்டப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. “அணைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, அபாயகர விபத்துகளைத் தவிர்க்கும் நோக்குடனேயே இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று ஒன்றிய அரசு வாதங்களை வைத்துள்ளது.

ஏன், அதை மாநில அரசுகளால் செய்ய முடியாதா? அணைகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் மாநில அரசுகளின் கடமையல்லவா? மாநில அரசுகளின் உரிமை அல்லவா? அதனை இத்தனை ஆண்டு காலம் அந்த மாநிலங்கள்தானே செய்து வருகின்றன? இப்போது மட்டும் ஏன் புதிதாக இந்த மாறுதலைச் செய்ய வேண்டும் என்பதே நமது கேள்வி ஆகும்.

“பெரும்பாலான அணைகள் இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதால் அணைகள் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்துக்கு மட்டுமின்றி மற்ற மாநிலங்களுக்கும் முக்கியமானது” என்று ஒன்றிய அரசு பதில் கூறியுள்ளது. இரு மாநிலங்களுக்கும் இடையிலான உரிமை என்பது உண்மைதான். அதில் நியாயமான - சரியான உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்குத்தானே இருக்கிறது! அந்தக் கடமையை அவர்கள் சரியாகச் செய்கிறார்களா? என்பது தான் நமது கேள்வி.

காவிரியில் - கர்நாடகம் என்பது பா.ஜ.க.வின் மாநிலம் என்பதால் அவர்கள் செய்யும் எதையும் கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசு இருக்கிறதே! இதனை எந்தச்சட்டத்தின் மூலமாகக் கேள்வி கேட்பது? தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிமை உண்டு என்ற சட்டம் இருக்கும் காலத்திலேயே இவ்வளவு சறுக்கலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது என்றால் - ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு அணைகள் போய்விட்ட பிறகு - குறைந்தபட்சம் கேள்வி கேட்கும் உரிமையைக் கூட தமிழகம் இழக்க வேண்டி வருமே? அதனால்தான் இந்தச் சட்டம் தாக்கல் ஆனபோதே தி.மு.க. கடுமையாக எதிர்த்தது.

மாநிலங்களவை தி.மு.க. குழுத்தலைவர் திருச்சி சிவா பேசும்போது, “அணை பாதுகாப்பு மசோதாவில் கண்காணிப்பு, சோதனை, செயல்முறை, பராமரிப்பு ஆகியவை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசு கொண்டு வரும் பெரும்பாலான மசோதாக்கள் மாநில உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்த மசோதா மாநிலங்களின் உரிமைகளையும் பறிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களின் அதிகாரங்களை அத்துமீறிப் பறிக்க முடியாது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், “இந்த அணை பாதுகாப்பு மசோதா இந்திய அரசியலமைப்பை மீறும் செயல். மாநிலங்களிடம் இருந்து எவ்வித ஒப்புதலையும் பெறாமல் ஒன்றிய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது”என்றும் அவர் விமர்சித்தார். இத்தகைய எதிர்ப்புகளையும் மீறித்தான் இந்தச் சட்டம் நிறைவேறியது. நாடாளுமன்றத்தால் தடுக்க முடியாததை நீதிமன்றத்தாலாவது தடுக்க முயற்சிக்கிறது தி.மு.க. ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “இந்தச் சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது. இரு அமைப்புகளிலும் மாநில அரசின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்” என்றும் சொல்லப்பட்டுள்ளது. இது கண்துடைப்பே தவிர, வேறல்ல.

மாநில வாரியாக அமைக்கப்படும் அணை பாதுகாப்புக் குழுவிலும் ஒன்றிய அரசின் சார்பில் இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரையும் நியமிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின், நீர்வள ஆணையம் (central water commision) மற்றும் மத்திய மின்சார ஆணையம் (central electral authority ஆகியோரிடத்தில்தான் இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர்தான் தேசிய அணைப் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கப் போகிறார்.முழுக்க முழுக்க ஒன்றியத்தை ஆளும் அரசின் - கட்சியின் அரசியல் விருப்பங்களுக்கு ஏற்பத்தான் இந்தச் சட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும்.

ஒன்றியத்துக்கு வேண்டிய மாநிலம் என்றால் கேள்வி கேட்க மாட்டார்கள். வேண்டாத மாநிலம் என்றால் விழுந்து விழுந்து கேள்வி கேட்பார்கள். இவற்றைத்தான் நடைமுறையில் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இப்போதாவது மாநிலத்தின் உரிமையை நிலைநாட்ட முயற்சிகள் செய்யலாம். அனைத்தும் ஒன்றியத்துக்குப் போய் விட்டால் அவர்கள் நினைத்தால் மட்டும்தான் காரியம் நடக்கும்.

நமது மாநில எல்லைக்குள் உள்ள அணைகளை நாமே காப்போம்!

banner

Related Stories

Related Stories