முரசொலி தலையங்கம்

”அரசியல் நெறிமுறைகளின் இலக்கணமாக உயர்ந்து,எழுந்து, நிமிர்ந்து நிற்கிறார்” -முதல்வருக்கு முரசொலி புகழாரம்!

’அரசியலுக்கும் இலக்கணம் ஆனார்’ என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

”அரசியல் நெறிமுறைகளின் இலக்கணமாக உயர்ந்து,எழுந்து, நிமிர்ந்து நிற்கிறார்” -முதல்வருக்கு முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அரசியலுக்கும் இலக்கணம் ஆனார்!

"தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் - கழகத் தலைமை அறிவித்ததை மீறி, போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்!" - என்று அறிக்கை விட்டதன் மூலமாக அரசியலுக்கும் இலக்கணமாக எழுந்து நிற்கிறார் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

‘திராவிட மாடல்’ ஆட்சியின் மூலமாக ஆட்சியியலுக்கு இலக்கணமாக உயர்ந்து நிற்கும் அவர், கூட்டணிக் கட்சித் தலைவர்களை அரவணைத்துச் செல்வதில் அவர் காட்டி வரும் செயல்கள் என்பது, அரசியல் அறநெறிமுறையியலுக்கான இலக்கணமாக உயர்ந்து நிற்கிறது.

கூட்டணிகளை உருவாக்குதல் என்பது எளிது. ஆனால் அதனை தொடர்ச்சியாக தக்க வைத்துச் செல்லுதல் மிகமிக அரிது. கடினம் ஆகும். பல நேரங்களில் கூட்டணிகள் என்பவை, அந்தத் தேர்தலுடன் முடிந்துவிடும். தொடராது. ஆனால் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய கூட்டணி என்பது, பல தேர்தலுக்கும் தொடரும் கூட்டணியாக அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி, நகர்ப்புறத் தேர்தலில் வெற்றி - என வெற்றி மீது வெற்றியாக அமைந்து வருகிறது. இந்த வெற்றிகளின் கூட்டணியாக அது அமைந்துள்ளது.

மதச்சார்பற்ற கூட்டணியின் வெற்றிக்கு அடிப்படை என்பதே, இந்தக் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமைதான் என்பதை தலைவர் அவர்கள் சொல்ல எப்போதும் தயங்கியது இல்லை. சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக்காக சேலம் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கு ராகுல் காந்தி அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது அவரை மேடையில் வைத்துக் கொண்டு பேசிய கழகத் தலைவர் அவர்கள், "தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி பெற நாங்கள் அமைத்த கூட்டணிதான் காரணம். இதே போன்ற கூட்டணியை அகில இந்திய அளவில் நீங்கள் உருவாக்குங்கள்" என்று பகிரங்கமாகக் குறிப்பிட்டார்கள்.

இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தது. 90 சதவிகிதத்துக்கும் அதிகமான இடங்களை கழகக் கூட்டணி பெற்றது. அப்போதும் கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை குறித்தே கழகத் தலைவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். "தேர்தல் கூட்டணியாக மட்டுமில்லாமல், கொள்கைக் கூட்டணியாக, அதையும் தாண்டிய பாசக் கூட்டணியாக இது அமைந்ததால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது" என்று கூறினார்கள். வெற்றியின் முகட்டில் நின்று கொண்டு இதைச் சொன்னது தான் மிகமிக முக்கியமானது ஆகும்.

அதேபோல் மறைமுகத் தேர்தலுக்கான பங்கீடு கூட்டணிக் கட்சிகளோடு சுமூகமாக நடைபெற தலைவர் அவர்கள் உத்தர விட்டார்கள். தோழமைக் கட்சிகள் அனைத்தும் மனமகிழ்ச்சி அடையும் வகையில் அப்பங்கீடும் முடிந்தது. ஆனால் சில இடங்களில் அரசியல் போட்டிகளின் காரணமாக தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழகத்தவர் சிலரே போட்டி யிட்டு, வெற்றி பெற்றார்கள். இதனைக் கேள்விப்பட்டு முதலில் துடிதுடித்துப் போனவர் கழகத் தலைவர் அவர்கள்தான். தோழமைக் கட்சித் தலைவர்களை விட, அதிகமான பதற்றத்தை தி.மு.க. தலைவர் அவர்கள் அடைந்தார்கள். அது அவர் விடுத்த அறிக்கையின் ஒவ்வொரு சொல்லாகவும் வெளிப்பட்டது.

* தேர்தலில் கிடைத்த வெற்றியால் அடைந்த மகிழ்ச்சியைச் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது.

* வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்னதில், ‘கட்டுப்பாடு'தான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்க விட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்.

* மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

* எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

* கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள்.

* உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள்.

- இதுதான் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட அறிக்கை யின் உள்ளடக்கம். இதுதான் கழகத்தின் உயிரடக்கமாக அமைந் துள்ளது. இந்த அறிக்கையை தோழமைக் கட்சியின் தலைவர்கள் அனைவரும் மனப்பூர்வமாக வரவேற்றுள்ளார்கள். பாராட்டி இருக்கிறார்கள். ‘இதுவல்லவா தோழமை உணர்வு’ என்று உச்சிமுகர்ந்துள்ளார்கள்.

‘இவரல்லவா தலைவர்’ என்று உலகம் போற்ற அரசியல் நெறிமுறைகளின் இலக்கணமாக உயர்ந்து, எழுந்து, நிமிர்ந்து நிற்கிறார் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்- இந்த நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

banner

Related Stories

Related Stories