முரசொலி தலையங்கம்

"இளைஞர்கள் மனதில் வெற்றி சூத்திரத்தை விதைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்": முரசொலி தலையங்கம்!

நெப்போலியன் ஹில்லின் வெற்றிச் சூத்திரத்தை தமிழ்நாட்டு இளைஞர்கள் மனதில் விதைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

"இளைஞர்கள்
மனதில்  வெற்றி சூத்திரத்தை விதைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்": முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (மார்ச்.3 2022) தலையங்கம் வருமாறு:

தமிழ்நாட்டு இளைய சமுதாயத்தின் மனித வளத்தை - மன வளத்தை - அறிவு வளத்தை - ஆற்றல் வளத்தை வளர்த்தெடுக்கும் உன்னதமான திட்டம் ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். அவரது பிறந்தநாளான மார்ச் 1 ஆம் நாளன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்க நாளை தனது வாழ்விலோர் பொன்னாள் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக மக்களால் முதல் அமைச்சர் ஆக்கப்பட்ட நான் -அனைத்து மாணவச் செல்வங்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய திட்டம்தான் இந்தத் திட்டம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் அனைவரும் அனைத்து விதமான தகுதியையும் பெற்று முன்னேறி - அனைவரும் அனைத்திலும் முதலாவதாக வந்தார்கள் என்பதை உருவாக்கும் திட்டம்தான் இந்தத் திட்டம். அனைத்து இளைஞர்களையும் கல்வியில் - ஆராய்ச்சியில் சிந்தனையில் - செயலில் - திறமையில் - சிறந்தவர்களாக மாற்றவே இந்தத் திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்”என்றும் சொல்லி இருக்கிறார் முதலமைச்சர்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 2 கோடியே 31 லட்சம் இளைஞர்கள் 18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டோர் என்கிறது ஒரு புள்ளிவிபரம். அதாவது 33 சதவிகிதம் பேர் இந்த வகையில் வருவார்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 9.50 லட்சம். 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 8.50 லட்சம் பேர். இவர்கள் அனைவரையும் சேர்த்துத்தான் தமிழ்நாட்டின் இளைய சக்தி என்கிறோம். இந்த இளைய சக்தியை வளர்த்தெடுக்கும் திட்டத்தைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் உயர் கல்வி நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30க்கும் மேற்பட்டவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்று அண்மைக்கால புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கலை மற்றும் அறிவியல் நிறுவனங்கள் 887, பொறியியல் கல்லூரிகள் 587, தொழில் முறை பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் 579, பட்டப்படிப்பு நிலையங்கள் 495 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேனிலை மாணவ மாணவியர் - கல்லூரி மாணவ, மாணவியர் - ஆகிய அனைவரது திறனையும் மேம்படுத்த நினைக்கிறார் முதலமைச்சர். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், பிற்படுத்தப்பட்டோர் நலன், சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றில் இதுபோன்றதிறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் ஒருமுகப் படுத்தத் திட்டமிட்டிருக்கிறார் முதலமைச்சர்.

தமிழகக் கல்விச் சூழலில் உள்ள குறைபாடுகள் - மாணவர்கள் மத்தியில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றை மனதில் கொண்டு இந்தத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் தொழில் முனைப்புத் திறனை உருவாக்குதல், புதிய தயாரிப்புகளை உருவாக்குதல், வேலை வாய்ப்புத் திறனை உருவாக்குதல், அதற்கான பயிற்சிகள் வழங்குதல் ஆகியவை செயல்படுத்தப்பட உள்ளன.

மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும் அறிவுத் திறன் மேம்பாடு செய்யப்பட உள்ளது. மாணவர்கள் - ஆசிரியர்கள் - கல்லூரி நிறுவனங்கள் - தொழில் நிறுவனங்கள் - அரசு ஆகிய ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவதைப் போன்ற திட்டத்தை தனது நேரடி மேற்பார்வையில் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒரு மாணவனுக்குத் தேவையான - ஒரு இளைஞனுக்குத் தேவையான - அனைத்துப் பயிற்சிகளையும் அரசே வழங்க இருக்கிறது. அந்த மாணவனை - இளைஞனை ‘நான் முதல்வன்’ என்று சொல்ல வைக்கப் போகிறார் தமிழ்நாட்டின் நல் முதலமைச்சரான மு.க. ஸ்டாலின் அவர்கள்.

“படிப்பு என்பது பட்டம் சார்ந்தது மட்டுமல்ல - திறமை சார்ந்ததாக மாற வேண்டும். வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாற வேண்டும். நீங்கள் அடையும் உயரம் சலுகை சார்ந்ததாக மட்டுமல்ல, திறமை சார்ந்ததாக மாற வேண்டும்.

அத்தகைய திறமையை உங்களுக்கு உருவாக்க - உங்களுக்காக ஒருவன் இருக்கிறான் - அதுதான் இந்த நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதைஇன்று முதல் நினைவில் வையுங்கள்” என்று அவர் சொல்லிய சொல் இந்த நாட்டு இளைய சமுதாயத்துக்கு நம்பிக்கை தரும் வார்த்தையாக அமைந்துள்ளது.

இன்றைய காலக்கட்டத்துக்கு மட்டுமல்ல, எதிர்காலத் தலைமுறையையும் மேம்படுத்தும் திட்டமாக இது அமையப் போகிறது. “இந்தத் திட்டம் என்பது தலைமுறை தலைமுறைக்குப் பயன்படும் திட்டம் ஆகும்.” என்றும் அவர் சொல்லி இருக்கிறார். “கால் நூற்றாண்டு - அரை நூற்றாண்டு கழித்தும் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி - மு.க.ஸ்டாலின் என்ற ஒரு முதலமைச்சர் உருவாக்கிய ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தின் மூலமாக நான் முன்னேறி னேன் என்று ஒருவர் சொன்னால் அதைவிட எனக்குப் பெருமை இருக்க முடியாது” என்று அவர் சொன்ன சொல் என்பது தலைமுறைகளுக்கு வழி காட்டும் சொற்கள் ஆகும்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளரான நெப்போலியன் ஹில், ‘தி லா ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை எழுதினார். இந்தப் புத்தகம் 1928 ஆம் ஆண்டு வெளியானது. இன்று வரையிலும் தன்னம்பிக்கை புத்தகங்களின்வரிசையில் பெரும் விற்பனையாகி வரும் புத்தகங்களில் அதுவும் ஒன்று.‘அடைய முடியும் என்ற நம்பிக்கை தோன்றிவிட்டால் எதையும் அடைய முடியும்' என்பதுதான் அவரது ஒற்றை வரி. வெற்றி பெற்ற அனைவரையும் சந்தித்து வெற்றிச் சூத்திரத்தை அவர் எழுதினார். இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகளுக்கு ஆலோசகராக இருந்தவர் இவர். அவரது புத்தகம் படித்து முன்னேறியவர் தொகை அதிகம்.

நெப்போலியன் ஹில்லின் வெற்றிச் சூத்திரத்தை தமிழ்நாட்டு இளைஞர்கள்மனதில் விதைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். இதுவும் நூற்றாண்டுகளைக் கடந்தும் நிலைத்த பயனை, நீடித்த பயனைத் தரும்.

banner

Related Stories

Related Stories