முரசொலி தலையங்கம்

”முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பரவத் தொடங்கியிருக்கிறது திராவிடவியல் ஆட்சிமுறை” - முரசொலி தலையங்கம்!

இந்தியா முழுமைக்குமான திராவிடவியல் கோட்பாடு வேலை செய்யத் தொடங்கியிருக்கிறது என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

”முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து பரவத் தொடங்கியிருக்கிறது திராவிடவியல் ஆட்சிமுறை” - முரசொலி தலையங்கம்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் ‘திராவிடம்' பரவி இருந்தது என்பார் திராவிட மொழிநூல் ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள். பதினைந்துக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்த பேரறிஞர் அவர். பாவாணர் அவர்கள்தான் எழுதினார்: "முழுகிப்போன குமரிக்கண்டத்தில் கி.மு. (ஏறத்தாழ) ஐம்பதினாயிரம் ஆண்டுகட்கு முன் முளைத்தெழுந்ததும், திராவிட மொழிகட்கெல்லாந் தாயுமான பழந்தமிழ் ஒரு காலத்தில் பனிமலை (இமயம்) வரை பரவியிருந்ததாலும், கி.மு.1000 ஆண்டுகட்குப் பின்னரே தெலுங்கு முதலிய திராவிட மொழிகள் அதனின்று கிளைத்ததாலும், அவற்றுள்ளும் ஒரு மொழியிலும் கி.பி. 9ஆம் நூற்றாண்டிற்கு முன் இலக்கியத் தோன்றாமையாலும், திராவிடம் என்னும் பெயர் தமிழையும், தமிழினத்தையும் தமிழ்நாட்டையுமே முதற்காலத்தில் குறித்துநின்றது." என்று எழுதினார்.

அவர் கூற்றுப்படி இந்தியா முழுமைக்குமாக ஒரு காலத்தில் பரவி இருந்தது தமிழ்த் திராவிடம். இதோ இன்றும் பரவப்போகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிடவியல்'! இந்தியாவின் பேரறிஞர் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் எழுதினார்கள். "திராவிடர் என்ற சொல், மூலச்சொல் அல்ல. தமிழ் என்ற சொல்லின் சமஸ்கிருத வடிவமே இந்தச் சொல். தமிழ் என்னும் மூலச்சொல் முதன்முதலில் சமஸ்கிருதத்தில் இடம்பெற்ற போது ‘தமிதா' என உச்சரிக்கப்பட்டது. பின்னர் அது ‘தமில்லா' ஆகி முடிவில் ‘திராவிடா' என உருத்திரிந்தது. வட இந்தியநாகர்கள் திராவிட மொழி என்று அழைக்கப்பட்ட தமிழைப் பேசுவதைக் காலப்போக்கில் விட்டுவிட்டதால் அவர்கள் நாகர்கள் என்று மட்டுமே அழைக்கப்பட்டனர். தென்னிந்திய நாகர்கள் தங்களது தாய்மொழியைத் தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருந்ததால் அவர்கள் தங்களது மொழியின் பெயராலேயே திராவிடர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்" என்று எழுதினார் அம்பேத்கர்.

திராவிடர்கள், தாசர்கள் அனைவருமே நாகர்களின் வழித்தோன்றல்கள்; தான் என்பார் அவர். அதாவது ‘திராவிடர்' இங்கு மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே இருந்தார்கள் என்பது இதன் உள்ளடக்கம் ஆகும். இதோ ‘திராவிடவியலை' இந்தியா முழுமைக்குமானதாக முன்னெடுக்கத் தொடங்கி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! ‘உங்களில் ஒருவன்' என்ற தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்கு அகில இந்தியத் தலைவர்கள் பலரையும் வரவழைத்தார். அந்தக் கூட்டத்தில் பேசும்போது, "எனது தத்துவம் என்பது திராவிட மாடல் ஆட்சி. அதாவது திராவிடவியல் ஆட்சி முறை" என்பதைத் தெளிவுபடுத்தினார் முதலமைச்சர்!

  • அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் என்னுடைய கோட்பாட்டு நெறிமுறை ஆகும்.

  • பால் பேதமற்ற - ரத்த பேதமற்ற சமூகமாக நமது சமூக மனோபாவம் மாறவேண்டும்.

  • ‘எல்லார்க்கும் எல்லாம்' என்பதே திராவிடவியல் கோட்பாடு.

  • இது சட்டத்தின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - சமூகநீதியின் ஆட்சியாக மாற்றப்பட வேண்டும்.

  • அனைத்து தேசிய இனங்களுக்கும் சரிநிகர் உரிமை தரப்பட வேண்டும்.

  • அனைத்து மாநிலங்களும் அதிக அதிகாரம் கொண்ட சுயாட்சித் தன்மைகொண்டதாக இருக்க வேண்டும்.

  • மாநிலங்களின் ஒன்றியமான இந்திய அரசானது கூட்டாட்சி முறைப்படி செயல்பட வேண்டும்.

  • மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தரத்தக்க வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும்.

  • ‘மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி' என்பது இந்தியா முழுமைக்குமான முழக்கமாக மாற்றப்பட வேண்டும்.

  • இத்தகைய திராவிடவியல் கோட்பாட்டை இந்தியா முழுமைக்கும் விதைப்பதை எனது பணியாக மேற்கொள்வேன் என்பதை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக உறுதி அளிக்கிறேன்.

  • அந்த வகையில் எனது அரசியல் வாழ்க்கையின் திருப்புமுனையாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

இதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ‘திராவிடவியல்' கோட்பாடு ஆகும். இந்த அடித்தளத்தில்தான் அவர் ஆட்சி நடத்தி வருகிறார். அத்தகைய திராவிடவியல் தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டுசேர்க்க நினைக்கிறார். சமூக நீதி - மாநில சுயாட்சி ஆகிய இரண்டையும் இன்று பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டன. அதன் அடையாளம் அகில இந்தியா முழுமைக்கும் கேட்கிறது.

இதே விழாவில் ராகுல்காந்தி ஆற்றிய உரை என்பது அதனைத்தான் காட்டுகிறது. கூட்டாட்சித் தத்துவம் குறித்தும், மாநில சுயாட்சி குறித்தும் ஒரு மாநிலக் கட்சி சொல்வதை விட ஒரு அகில இந்தியக் கட்சி சொல்வதற்கு மிகப்பெரிய வலிமை இருக்கிறது. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி சொன்னது மிகமிக வலிமையானது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்றும், மாநிலங்களில் இருந்துதான் இந்தியா வருகிறது என்றும், மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியவில்லை என்றும், இந்தியாவின் எந்த மாநிலங்களைப் பற்றியும் பிரதமர் புரிந்து கொள்ளவில்லை என்றும், குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச அதிகாரிகள் இப்போது ஜம்மு - காஷ்மீரை ஆள்வது மிகப்பெரிய அநீதியாகும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமையே நமது பலம் என்றும் ராகுல் காந்தி பேசிய பேச்சு வலிமையானது. சிறப்பானது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ‘திராவிடவியல்' கோட்பாடு வேலை செய்யத் தொடங்கியதன் வெளிப்பாடு. ‘வேற்றுமையில் ஒற்றுமை என்பதை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும்' என்றார் ராகுல் காந்தி. ‘திராவிடவியல் ஆட்சிமுறையை' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து அனைத்து மாநிலங்களும் கற்றுக் கொள்ளத் தொடங்கி இருக்கின்றன. இந்தியா முழுமைக்குமான திராவிடவியல் ஆட்சி முறை பரவட்டும்! திசைதோறும் திராவிடவியல் பரவட்டும்!

banner

Related Stories

Related Stories