முரசொலி தலையங்கம்

”பெரியண்ணன் மனோபாவத்துடன் செயல்படும் சீனா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா”: முரசொலி தலையங்கம்!

இந்திய எல்லையில் மீண்டும் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சீனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

”பெரியண்ணன் மனோபாவத்துடன் செயல்படும் சீனா.. வேடிக்கை பார்க்கும் இந்தியா”: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.15 2022) தலையங்கம் வருமாறு:

இந்திய எல்லையில் மீண்டும் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்துவதாக சீனாவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. இந்த பதற்றத்தை உருவாக்கி வைத்திருப்பதன் மூலமாக பெரியண்ணன் மனோபாவத்துடன் சீனா செயல்படுவது உலக அரங்கில் அம்பலமாகி இருக்கிறது.

எல்லைகளை அருகில் உள்ள நாடுகளை பதற்றத்துடன் வைத்திருப் பதன் மூலமாகக் காக்க முடியும் என்று சீனா நினைக்கிறது. எல்லைகளை பதற்றமாக வைத்திருப்பதன் மூலமாக, சொந்த நாட்டு மக்களுக்கு தங்களை நாட்டுப்பாதுகாவலர்களாகக் காட்டவும் சீனா போன்ற அரசதிகார நாடுகள் நினைக்கின்றன.

எப்போதுமே எல்லையில் சிக்கல் இருப்பதால், இந்தியாவுக்கு இது பழகிப் போய்விட்டது. எதிர்கொள்வதும் எளிதாகவே இருக்கிறது. ஆனால் தொடர்ச்சியான இத்தகைய செயல்கள், நம்முடைய வேறு வளர்ச்சிச் சிந்தனைக்கு தடையாக அமைகின்றன. நாம் கவனம் செலுத்த வேண்டிய மற்ற விஷயங்களில் இருந்து திசை திருப்புகின்றன. எல்லையைப் பற்றியே எப்போதும் சிந்திக்க வேண்டிய நாடுகளாக மாற்றுகின்றன.

கிழக்கு லடாக் பகுதி அசல் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருப்பது கல்வான் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு கடந்த 2020 ஆம் ஆண்டு சூன் 15 ஆம் நாள் சீனா தாக்குதலைத் தொடுத்தது. இந்தியா உடனடியாக பதில் தாக்குதல் தொடுத்தது. இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து அசல் எல்லைக் கோட்டில் அதிகமான ராணுவ வீரர்களை சீனா நிறுத்தி உள்ளது. இதனால் இந்தியாவும் அதிகமான ராணுவ வீரர்களை நிறுத்தும் அவசியத்துக்கு தள்ளப்பட்டது.

இரண்டு தரப்பிலும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்தாலும் - இரண்டு தரப்பிலும் அசல் எல்லைக் கோட்டில் அதிகளவு ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது பதற்றத்தை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இதனை ஆஸ்திரேலிய மாநாட்டில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் நான்கு நாடுகளின் மாநாடு நடந்து வருகிறது. இதற்கு ‘குவாட்’ மாநாடு என்று பெயர். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள் கலந்து கொள்ளும் மாநாடு இது.

இந்த நான்கு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்தியாவின் சார்பில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது நிருபர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெய்சங்கர், சீன விவகாரம் குறித்து விளக்கி இருக்கிறார். “அசல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் படைகளைக் குவிக்க வேண்டாம் என்பது இந்திய - சீன ஒப்பந்தம் ஆகும். அந்த ஒப்பந்தத்தை சீனா மீறியதால் தான் இப்போது இந்த நிலைமை எழுந்துள்ளது. ஒரு பெரிய நாடு எழுதி ஏற்றுக் கொண்ட உறுதி மொழிகளைப் புறக்கணிக்கிற போது அது முழு சர்வதேச சமுதாயத்துக்கும் நியாயமான அக்கறையான பிரச்சினை ஆகிறது” என்று அமைச்சர் ஜெய்சங்கர் சொல்லி இருக்கிறார். இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத்துக்கே கவலை அளிக்கும் பிரச்சினை ஆகும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

‘எல்லையில் அதிகளவு படைகளைக் குவிக்கக் கூடாது’ என்ற ஒப்பந்தத்தை சீனா மீறியதால் ஏற்பட்ட பதற்றச் சூழலைத்தான் அமைச்சர்ஜெய்சங்கர் வெளிப்படுத்தி இருக்கிறார். அமெரிக்க அதிபர் அலுவலகம் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. “தெற்கு ஆசியா மற்றும் இந்தியப் பெருங்கடலில் முதன்மை வாய்ந்த நாடு இந்தியா. எனினும் இந்தியா குறிப்பிட்ட சவால்களை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. சர்வதேச கடல் எல்லையில் அனைத்து நாடுகளுக்குமான சம உரிமையை இந்தியா மதிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சீனாவுக்கு

எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா அறிக்கை விடும் அரசியல் என்பது நாம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய அரசியலாக இருந்தாலும் - சீனாவின் செயல்பாடுகள் அகில உலகத்தை கவலை அளிக்கும் பிரச்சினையாக மாறி வருவதை சுட்டிக் காட்டியே ஆக வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்னால் ‘அணு ஆயுதப் போர் கூடாது’ என்று ஐந்து நாடுகள் கூட்டறிக்கை விட்டன. அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவைதான் அந்த ஐந்து நாடுகள். “அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு இடையிலும் - பிறநாடுகள் மீதும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது தலையாய கடமையாகக் கருத்தில்

கொள்ளப்பட்டுள்ளது. அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தைப் பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம். அணு ஆயுதங்களைப் பயன் படுத்துவது பரந்த அளவில் பின் விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, அந்த ஆயுதங்கள் இருக்கும் வரை அவற்றை தற்காப்புக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த ஆயுதங்கள் மென்மேலும் உருவாக்கப் படுவதைத் தடுக்க வேண்டும்.

அணு ஆயுத அச்சுறுத்தலைக் கவனத்தில் கொள்வது, அணு ஆயுதப் பரவலைத் தடுப்பது, ஆயுதங்கள் இருப்பைக் குறைப்பது தொடர்பாக இருதரப்பு - முத்தரப்பு ஒப்பந்தங்களை 5 நாடுகளும் பின்பற்றும். அணு ஆயுதப் போரில் வெற்றி பெற முடியாது. அந்தப் போரில் ஒரு போதும் ஈடுபடக் கூடாது” - என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் அறிக்கை விட்ட சீனா இப்போது இப்படிச் செயல்படுவது நியாயமா என்பதே நமது கேள்வி. ஒப்பந்தங்களைமீறுவதும் ஒப்பந்தங்களில் உள்ள முக்கியமான ஷரத்தா?

நம்முடைய இன்னொரு கவலை எல்லாம்.. “மன்மோகன் சிங் பலவீன மான பிரதமராக இருப்பதால்தான் உலக நாடுகள் இப்படி பிரச்சினை செய்கின்றன. இந்தியாவுக்கு முதுகெலும்புள்ள பிரதமர் கிடைத்தால்தான்உலக நாடுகள் அடங்கும்” என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. ஆட்சியிலும் அண்டை நாடுகளின் வாலாட்டுதல் நிற்கவில்லையே என்பதுதான்!

banner

Related Stories

Related Stories