முரசொலி தலையங்கம்

"ஒன்றிய அரசை காவு வாங்கும் பெகாசஸ் பூதம்": முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!

அமுக்கப்பட்ட பெகாசஸ் பூதம் மீண்டும் எழுந்து நடமாடத் தொடங்கி இருக்கிறது.

"ஒன்றிய அரசை காவு வாங்கும் பெகாசஸ் பூதம்": முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (பிப்.02 2022) தலையங்கம் வருமாறு:

அமுக்கப்பட்ட பெகாசஸ் பூதம் மீண்டும் எழுந்து நடமாடத் தொடங்கி இருக்கிறது. இப்போது இந்த பூதத்தைப் பார்த்து இந்தியா மட்டுமல்ல, இஸ்ரேலும் பயம் கொள்ளத் தொடங்கி இருக்கிறது.

மென்பொருள் விற்பனையில் முறைகேடு, அரங்கேறியதாகக் கூறப்படுவதை மறுத்த என்.எஸ்.ஓ. நிறுவனம், “ஜனநாயகம் இல்லாத நாடுகளுக்கு அந்த மென்பொருளை விற்பனை செய்வதால் எழுந்த விமர்சனங்களைப் பொருட்படுத்த

தேவையில்லை” என்று விளக்கமளித்துள்ளது. இது யார் மீதான விமர்சனம்? இந்தியா மீதான விமர்சனமா? பா.ஜ.க. மீதான விமர்சனமா?

எது ஜனநாயகம்? அடுத்தவர் பேச்சுக்களை மொத்தமாக ஒட்டுக் கேட்பது தான் ஜனநாயகமா? அதை விமர்சிப்பதற்கு ஜனநாயக உரிமை இல்லையா? யாரோடு, எத்தகைய தன்மை கொண்டவர்களோடு இவர்கள் ஒப்பந்தம் போட்டு தொழில் பார்த்துள்ளார்கள் என்பதை நினைத்தால் அது இந்தியாவுக்கே தலைகுனிவாக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத் தொடர் ஒத்தி வைக் கப்பட்டால் போதும், பெகாசஸ் அமுக்கப்படும் என்று பா.ஜ.க.வினர் எதிர்பார்த் தார்கள். ஆனால் அது தொடர்கதையாகத் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ‘நியூயார்க் டைம்ஸ்' இதன் மர்மத்தை அம்பலப்படுத்தியே வருகிறது.

பெகாசஸ் மென்பொருள் மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள், ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்த புகாரை உறுதிப்படுத்தி இருக்கிறது அந்த இதழ்.

“கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடி, இஸ்ரேலுக்குச் சென்றபோது, அந்நாட்டு பிரதமரை நெதன்யாகுவைச் சந்தித்தார். கடற்கரையில் ஒன்றாக நடந்து பேசிய போதே, பெகாசஸ் மென்பொருள், இந்தியாவுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது” என்று ‘நியூயார்க் டைம்ஸ்' தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள அதிநவீன ஆயுதங்கள்மற்றும் உளவு சாதனங்களை, வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்ட போதே, பெகாசஸ் மென்பொருளையும் விற்பனை செய்ய மறைமுக ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கைமாறாக, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டதாகவும், அப்போது, ஜ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த தாகவும் ‘நியூயார்க் டைம்ஸ்' சுட்டிக்காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, புதிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. “நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்ட பெகாசஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்'' என்றும், “பிரதமர் உள்பட சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பெகாசஸ் ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வின் தனிப்பட்ட அரசியல் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்திய நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாத எந்த ஒப்பந்தத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்க வில்லை என தெரிவித்துள்ள வழக்கறிஞர் சர்மா, இவ்வாறு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பது நம்பிக்கை மீறல், கிரிமினல் குற்றம் என்றும் சாடியுள்ளார்.

பெகாசஸ் தொடர்பாக ஒன்றிய அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம்கொண்டு வர வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடிதம் எழுதியுள்ளார். அதில் பெகாசஸ் ஒப்பந்தத்திற்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் இஸ்ரேலிடம் இதற்கான செயலியை வாங்க வில்லை எனவும் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து தெரிவித்துவந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும், நாட்டு மக்களையும் தவறான தகவல் தந்து ஒன்றிய அரசு திசைதிருப்பி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். எனவே நாடாளுமன்றத்தில் தவறான தகவல் கொடுத்த ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டது உண்மை என சைபர் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். உச்சநீதி மன்றம் அமைத்துள்ள விசாரணை குழுவிடம் சைபர் கிரைம் நிபுணர்கள், ஆதாரங்களை அளித்துள்ளனர். மனுதார்களின் 7 ஐ-ஃபோன்கள், 6 ஆன்றாய்டு தொலைபேசிகளை இரண்டு வெவ்வேறு சைபர் நிபுணர்கள் குழுவினர் ஆய்வு செய்ததில், 2018ஆம் ஆண்டும், 2021 ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் இந்ததொலைபேசிகள் பெகாசஸ் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பெகாசஸ் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூவர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தவுடன் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும்.

இந்திய பத்திரிகையாளர்கள் அமைப்பான ‘எடிட்டர்ஸ் கில்டு’ உச்சநீதிமன்ற குழுவிடம் புதிய கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளது. “பெகாசஸ் விவகாரத்தில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ள செய்தியின் முக்கிய அம்சங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பெகாசஸ் மென்பொருளை வாங்கியது தொடர்பாக ஒன்றிய அரசின் நிதி,பாதுகாப்பு, உள்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர்கள் மற்றும் சி.ஏ.ஜி ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று‘எடிட்டர்ஸ் கில்டு’ கோரிக்கை விடுத்துள்ளது.

இப்படி நாடாளுமன்றம், பத்திரிக்கைகள், ஊடகங்கள், நீதிமன்றம், விசாரணைஆணையம் என அனைத்திலும் பெகாசஸ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் நிறைய விஷயங்களை மறைக்கிறது. அதுபற்றி வெளிப்படையாக விளக்கம் அளிக்கவில்லை. விவாதம் நடத்துவதற்குத்தயாராக இல்லை. மக்களவைக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளது. எந்ததகவலையும் முழுமையாகக் கொடுக்கவுமில்லை. சில தனிநபர்களின் மனித உரிமையில் மாபெரும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவர்களது அந்தரங்கத்தில் அத்துமீறி நுழைந்துள்ளார்கள். இதன் மூலமாக ஜனநாயக நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது. ஆட்சியின் இலக்கணத்தை மீறி இருக்கிறார்கள். அரசியல் அமைப்புச் சட்டம் மீறப்பட்டுள்ளது. எந்த சட்டத்துக்கு உண்மையாக இருப்போம் என்று பதவிப்பிரமாணம் எடுத்தார்களோ அதை மீறி இருக்கிறார்கள்.

அவர்கள் ரகசியமாக உற்பத்தி செய்த பூதம் அவர்களையே காவு வாங்கப் போகிறது.

banner

Related Stories

Related Stories