முரசொலி தலையங்கம்

“இந்தி மொழி பரவுமானால் பண்பாடு - கலாச்சாரம் அழிந்துவிடும்” : மொழிப்போர் தியாகிகள் நாளில் முதல்வர் சூளுரை!

இந்தித்திணிப்பை எதிர்க்கிறேன் என்றால் இந்தி மொழி இங்கு பரவுமானால், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும். அதனால் தான் எதிர்க்கிறேன்.

“இந்தி மொழி பரவுமானால் பண்பாடு - கலாச்சாரம் அழிந்துவிடும்” : மொழிப்போர் தியாகிகள் நாளில் முதல்வர் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சனவரி 25 - மொழிகாக்க தனது தேகத்தில் தீ வைத்து இறந்த தமிழ்த்தியாகிகளின் நாளாகும்! இவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க மொழிப்போர் சூளுரை ஒன்றை அறிவித்திருக்கிறார்கள்.

1938 ஆம் ஆண்டு தந்தை பெரியாரும் - 1963 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவும் - 1965 ஆம் ஆண்டு தமிழினத் தலைவர் கலைஞரும் - ஏற்றுக் கொண்ட சூளுரையின் தொடர்ச்சியாகும்!

“நாம் நமது தமிழினத்தின் மீது மாறாத பற்றுக்கொண்டவர்கள். தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் - தமிழர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் - அதற்காக அனைத்து தியாகத்துக்கும் தயாராக இருப்பவர்கள். நாம் அரசியல் இயக்கமாகச் செயல்படுவதும் - தேர்தல் அரசியலில் பங்கெடுப்பதும் - இத்தகைய நோக்கங்களுக்காகத்தான். நான் முதலமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவோ - சிலர் அமைச்சர் ஆக வேண்டும் என்பதற்காகவோ அல்ல. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இருக்கும் காலம் என்பது - அன்னைத் தமிழ் ஆட்சியில் இருக்கும் காலமாக அமைய வேண்டும்.

அனைத்துத் தமிழர்களும் மேன்மையுறும் காலமாக அமைய வேண்டும். எந்த நோக்கத்துக்காக திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதோ - அந்த நோக்கத்திலிருந்து இம்மியளவும் மாறாமல் கழகம் செயல்படும். கழகத் தோழர்களும் - தொண்டர்களும் செயல்பட வேண்டும்.” என்பதுதான் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துள்ள மொழிப் போர் சூளுரையாகும்!

தமிழ்நாட்டில் தமிழுக்காக நடந்த மாபெரும் தமிழ்த்தேசியப் போராட்டம்தான் 1938 இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் ஆகும். “இது மொழிகாக்கும் போராட்டம் மட்டும் அல்ல, தேசம் காக்கும் போராட்டம், இனம் காக்கும் போராட்டம்” என்று தந்தை பெரியார் அவர்கள் அன்று சொன்னார்கள்.

“இந்தியைத் திணிப்பதால் தமிழ் அழிந்துவிடும் என்று நான் கவலைப்படவில்லை. இந்தியைத் திணிப்பதால் மட்டுமல்ல, எந்த மொழியைத்திணிப்பதாலும் தமிழ் அழிந்துவிடாது. அப்படியானால் நான் ஏன் இந்தித்திணிப்பை எதிர்க்கிறேன் என்றால் இந்தி மொழி இங்கு பரவுமானால், தமிழரின் பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும். அதனால் தான் எதிர்க்கிறேன்” என்று அப்போது தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள்.

1938 ஆம் ஆண்டு நடந்தது, பள்ளிகளில் இந்தியைப் படிப்பதற்கு கட்டாயப்படுத்தியதை எதிர்த்த போராட்டம் ஆகும். அன்று அதற்கு தலையாட்டி இருந்தால், இன்று தமிழகமும் இன்னொரு பீகாராகத்தான் இருந்திருக்கும். அவர்கள் வேலை தேடி தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்குவதைப் போல தமிழர்கள் போய் இறங்கிக் கொண்டு இருப்பார்கள்.

1965 நிலைமை என்பது முற்றிலும் மாறுபட்டதாகும். 1965 சனவரி 26 முதல் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி ஆகும் என்று அன்று சொல்லப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள், 1950 ஆம் ஆண்டு - இன்றிலிருந்து 15 ஆண்டுகள் கழித்து இந்தியை ஆட்சி மொழியாக உட்காரவைக்க தகுதிப்படுத்தி இருக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். இந்தியே இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆகுமானால், இந்தி நீங்கலாக மற்ற மொழியைப் பேசும் அனைவரும் இரண்டாம் தரக் குடிமக்களாகத் தள்ளப்படுவார்கள்.

கையறு நிலையில் நிறுத்தப்படுவார்கள். அதற்காகத்தான் மொழிப் போராட்டக்களமானது 1965. நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல என்பதைத் தெளிவுபடுத்திய முதலமைச்சர் அவர்கள், இந்தித் திணிப்பின் மூலமாக இந்தி பேசாத மக்களை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றுவதைக் கடுமையாக எதிர்த்துள்ளார். அதுதான் முக்கியமானது. இந்தி ஆதிக்கத்தை காலம் காலமாக தமிழ்நாடு எதிர்த்தது. இன்று மேற்கு வங்கமும், கர்நாடகாவும் எதிர்க்கத் தொடங்கி இருக்கிறது.

இன்றைய தினம் இந்தி எதிர்ப்பு என்பது இந்தியைப் படிக்கலாமா - கூடாதா என்ற விவாதமாக இல்லை. எந்த மொழியைப் படிப்பதும் அவரவர் உரிமை, விருப்பம். ஆனால் இன்றைய மொழிப்போராட்டம் என்பது இந்தியாவை ஆள இந்திமொழிக்குத்தான் தகுதி இருக்கிறது என்ற பா.ஜ.க.வின் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம் ஆகும். ஒற்றை மதத்தை இந்தியர் அனைவருக்குமான மதமாக மாற்ற நினைக்கும் அவர்களது மதவாதத்தை எப்படி எதிர்க்கிறோமோ - அது போல ஒற்றை மொழியை இந்தியர் அனைவருக்குமான மொழியாக மாற்ற நினைக்கும் அவர்களது மொழியாதிக்கத்தை நாம் எதிர்க்கிறோம்.

இந்தி படித்தால் நல்லதுதானே? என்பது எல்லாம் சிறுபிள்ளைத் தனமானவாதம். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்பது அதைவிட வடிகட்டிய பொய்யாகும். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால் நித்தமும் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்தி பேசும் மாநிலத்தவர்கள் இங்கே வந்து ஏன் இறங்குகிறார்கள்? இந்தி ஏன் அவர்களுக்கான வேலை வாய்ப்பைத் தரவில்லை.

இந்தி பேசும் ஏழு மாநிலங்களில் கிடைக்காத வேலை, தமிழ் பேசும் தமிழ்நாட்டில் எப்படி அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களுக்குச் சோறு போடுவது பேச்சுத்தமிழ்தான். தேவநாகரி லிபி அல்ல! தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள்.

‘ஆத்மநிர்பர்’ என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, நாம் மொழிகளுடன் கூட ‘ஆத்மநிர்பர்’ ஆக இருக்க வேண்டும். நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது. பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்தியில் பேசுவதால் கவலையாக இருந்த நாட்கள் போய் விட்டன. இனி அந்தச் சூழல் இல்லை.” - என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சில மாதங்களுக்கு முன் பேசி இருக்கிறார்.

இப்படிப் பேசும் பிரதமருக்கோ, அமித்ஷாவுக்கோ இந்தி தாய் மொழி அல்ல. குஜராத்திதான் தாய் மொழி. இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் இந்தி பேசும் மாநில மக்கள் அனைவரும் தங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற அரசியல் நிர்பந்தம் காரணமாக இந்திக்கு அவர்கள் சவால் போடலாம். ஆனால் அத்தகைய சூழல் இந்தி பேசாத மக்களுக்கு இல்லை. குறிப்பாக தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை என்பதுதான் மொழிப்போர்த் தியாகிகள் நாளில் தலைவர் எடுத்த சூளுரையின் உள்ளடக்கம் ஆகும்.

banner

Related Stories

Related Stories