முரசொலி தலையங்கம்

சமூகநீதியைச் சிதைத்துவிட்டு தற்போது சமூக நீதியைப் பற்றி பேசுவதா?: பா.ஜ.கவுக்கு முரசொலி சரமாரி கேள்வி!

சமூகநீதியைச் சிதைத்தவர்கள்தான் இன்று சமூகநீதியைப் பெற்றுத் தந்ததாக பீற்றிக் கொள்கிறார்கள்.

சமூகநீதியைச்  சிதைத்துவிட்டு தற்போது சமூக நீதியைப் பற்றி பேசுவதா?: பா.ஜ.கவுக்கு முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (ஜன.11, 2022) தலையங்கம் வருமாறு:

பா.ஜ.க. அரசின் முடிவை அங்கீகரித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி என்றும், உண்மையான சமூகநீதிக் காவலர் நரேந்திர மோடி தான் என்று ம்தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இவர்களை எல்லாம் சமூக நீதியைப் பற்றிப் பேச வைத்ததுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி ஆகும்.

இதர பிற்படுத்தப்பட்டவர்க்கு 27 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன் வரலாறு எதுவும் தெரியாமல் அண்ணாமலை போன்றவர்கள் அறிக்கை விடுத்து வருகிறார்கள்.

* மருத்துவக் கல்வி பட்ட மேற்படிப்பில் தான் முதன்முதலாக ‘நீட்’தேர்வு வந்தது. அதன் மூலமாக மாநில அரசின் வசம் இருந்த இடங்கள்ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அகில இந்தியத் தொகுப்புஇடங்களில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. இதன் மூலமாக சமூகநீதி சிதைந்தது. இதற்குக் காரணம் பா.ஜ.க.!

* மருத்துவக் கல்வியில் ‘நீட்’ நுழைந்தது. அதன் மூலமாக மாநில அரசின் வசம் இருந்த இடங்கள் ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது. அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டவருக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்டது. இதன்மூலமாக சமூகநீதி சிதைக்கப்பட்டது. இதற்குக் காரணம் பா.ஜ.க.!

இப்படி 2017 ஆம் ஆண்டு முதல் சமூகநீதியைச் சிதைத்தவர்கள்தான் இன்று சமூகநீதியைப் பெற்றுத் தந்ததாக பீற்றிக் கொள்கிறார்கள். இவர் களுக்கு உண்மையில் இந்த அக்கறை இருந்திருக்குமானால் இரண்டு ஆண்டுக்கு முன்னதாகவே 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கி இருக்கலாம்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய தொகுப்பு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 27.7.2020 அன்று தீர்ப்பு அளித்தது. இதனை அமல்படுத்துங்கள் என்று சொன்னபோது, அன்றைய பழனிசாமி அரசு இது குறித்த விபரங்களை அனுப்பவில்லை என்று சொன்னது பா.ஜ.க.

அரசு. 27 சதவிகிதமோ, 50 சதவிகிதமோ எந்த அடிப்படையிலும் இடஒதுக்கீடு கிடையாது என்று பா.ஜ.க. அரசு உச்சநீதிமன்றத்தில் சொன்னது. இதில் ஒன்றிய அரசின் இரட்டை வேடத்தை தி.மு.க. சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் 21.10.2020 அன்று எழுத்துப்பூர்வமான மனுவில் அம்பலப்படுத்தி இருந்தார்.

தி.மு.க. தலைமையில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் இது குறித்த விரிவான கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது. (31.5.2020) மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீட்டின் அளவிலேயே பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீடாக இருந்தாலும், பட்டியலின இடஒதுக்கீடாக இருந்தாலும் அமைய வேண்டும் என்பதே அக்கூட்டத் தீர்மானத்தின் இறுதி முடிவு ஆகும்.

கடந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி ‘நீட்’ தேர்வு தொடர்பான அறிவிப்பை ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். இதனால், பல மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்து வந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து விவாதித்து வந்தனர்.கடைசியாக கடந்த புதன்கிழமை கூட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்புக்கு மறுநாளான இன்று மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டது.

இவர்கள் ஏதோ மனப்பூர்வமாக இந்த 27 சதவிகிதத்தை வழங்கினார்கள் என்பதைப் போல அண்ணாமலை அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக் கீட்டை வழங்குவதற்காக, இந்த 27 சதவிகிதத்தையும் கொடுக்க முன்வந்துள்ளார்கள் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாதது அல்ல.

2019 இல் உயர்ஜாதியில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மோடி அரசு முடிவு செய்தது. அவசர அவசரமாக 5 நாள்களில் 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், அடுத்த 5 நாள்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றார்கள். பொருளாதார அளவுகோல்படி ஆண்டுக்கு 8 லட்சம் வருவாய் உள்ளவர்கள் ‘‘ஏழைகள் - பொருளாதாரத்தில் நலிந்தவர்கள்’’ என்று ஒரு சில நாள்களிலேயே வரையறுத்து விட்டார்கள். மாதம் 60 ஆயிரம் ஊதியம் பெறுபவர் எப்படி ஏழையாக இருப்பார்? அதனைத் தான் இன்று உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த 10 சதவிகித இடஒதுக்கீட்டில் காட்டிய ஆர்வத்தில் துளிகூட 27 சதவிகித இடஒதுக் கீட்டில் காட்டப்பட்டதா?

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான (ஓ.பி.சி.) 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை தர முடியாது என்று மறுத்தே வந்ததோடு, உச்சநீதிமன்றத்தில் வழக்கும் போட்டது. உச்சநீதிமன்ற அமர்வு கேட்ட பல கேள்விகளுக்கும்கூட சரியான பதில் தர ஒன்றிய அரசால் முடியவில்லை என்பதே உண்மை. சென்னை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார் தி.மு.க. வழக்கறிஞர் வில்சன். இந்த நிலையில் வேறு வழியில்லாமல் 27 சதவிகிதத்துக்கு தலையாட்டியதுதான் பா.ஜ.க. அரசு.

இதனைச் செயல்படுத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றத்தில் எடுத்த சட்டப்போராட்டங்கள் நீதிமன்ற ஆவணங்களாகவே உள்ளன. 2020 மே 28 முதல் உள்ள ஆவணங்களைப் படிப்பதன் மூலமாக சமூகநீதியில் உண்மையான செயல்பாட்டாளர்கள் யார் என்பதை அண்ணாமலைகள் உணரலாம்!

banner

Related Stories

Related Stories