முரசொலி தலையங்கம்

“மினி காமெடி கிளினிக்.. அம்மா பெயர் போய்விட்டதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி”: முரசொலி சாடல்!

தனது சுயநலத்துக்காக ஜெயலலிதா பெயரையே மறைத்த பழனிசாமி தான், இப்போது அம்மா பெயர் போய்விட்டதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

“மினி காமெடி கிளினிக்.. அம்மா பெயர் போய்விட்டதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி”: முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சட்டப்பேரவைக் கட்டிடத்தை மருத்துவமனையாக ஆக்கினார் ஜெயலலிதா!

சுடுகாட்டின் காரிய மண்டபத்தை மினி கிளினிக் ஆக்கினார்பழனிசாமி!

இதுதான் அ.தி.மு.க. ஆட்சி செய்யும் லட்சணம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறியாதது அல்ல!

கடந்த பத்தாண்டு காலமாக அனைத்துத் துறைகளையும் சீரழித்த ஆட்சிதான் கடந்த அ.தி.மு.க. ஆட்சி. ஆட்சி முடியும் தருவாயில் அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்தது போல அம்மா மினி கிளினிக்குகளை பழனிசாமி செய்தார். அதனைத் தன்னுடைய பெரிய சாதனையாகச் சொல்லிக் கொண்டார்.

“மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும்” என்று அப்போது பழனிசாமி அறிவித்தார். இந்த அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும் என்றும் அறிவித்தார்.

இந்த கிளினிக்குகளில் சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், காலை 9 மணி முதல் 11 வரையும், மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் மினி கிளினிக்குகள் செயல்படும் எனவும் தெரிவித்தார்.

இத்திட்டத்தை, சென்னையில், இராயபுரம், வியாசர்பாடி, மயிலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 மினி கிளினிக்குகள் செயல்பட உள்ளதாகவும், 1,400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 மினி கிளினிக்குகள் நகர்ப்புறங்களிலும் அமையப் போவதாகச் சொன்னார். மற்றும் 200 நகரும் மினி கிளினிக்குகளும் அமைக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் சொன்னார்.

இப்படிச் சொன்னாரே தவிர, அவை முறையான கிளினிக்குகளாக அமையவில்லை. பெரிய மருத்துவமனையாக இருந்தாலும் - சிறிய மருத்துவமனையாக இருந்தாலும் ; முதலில் அவை மருத்துவமனைக்கான தன்மையோடு அமைய வேண்டும். ஆனால் அவசர அவசரமாக இதனை உருவாக்கினார்கள். உரிய இடத்தில் இவை அமையவில்லை, உரிய மருத்துவர்கள் வேலைக்கு எடுக்கப்படவில்லை. தேவையான அளவு செவிலியர்கள் பணிக்கு எடுக்கப்படவில்லை. கிடைத்த இடத்தில் கிளினிக்குகளை அமைத்தார்கள். புதிதாக பச்சை பெயிண்ட் அடித்தார்கள். அருகில் இருந்த மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர்களை, செவிலியர்களை அழைத்து வந்து இதில் பணியமர்த்தினார்கள். உரிய மருந்துகளும் இல்லை, மருத்துவப் பொருள்களும் இல்லை. இதுதான் மினி கிளினிக்குகளின் உண்மையான நிலைமை.

இதைவிட மக்களை பட்டப் பகலில் ஏமாற்ற முடியாது. இதனை மருத்துவமனையாக பழனிசாமி சொல்லிக் கொள்ளலாம். மற்றவர்கள் சொல்ல முடியாது. சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். சேலம் மாவட்டம், நவப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் செயல்பட்டுவந்த அம்மா மினி கிளினிக்கின் பெயர்ப் பலகையை நீக்கி விட்டு `முதல்வரின் மினி கிளினிக்' என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டதாக முதலில் பழனிசாமியும் பன்னீர் செல்வமும் புகார் சொன்னார்கள்.

அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரை தி.மு.க. அரசு, பணிநீக்கம் செய்யவிருப்பதாக பன்னீர்செல்வமே ஒரு பொய் வதந்தியைக் கிளப்பினார். மினி கிளினிக்குகளுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் என தனியாக எடுக்கவே இல்லை. இல்லாத மருத்துவர்களை எப்படிப் பணி நீக்கம் செய்ய முடியும்?

இந்த நிலையில் மினி கிளினிக்குகள் பற்றியும்; மக்களுக்குத் தாங்கள் வழங்கிய சேவையை தி.மு.க. அரசு தடுத்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீலிக் கண்ணீர் வடித்துள்ளார். அவர் ஆரம்பித்த மினி கிளினிக்குகளின் உண்மையான நிலைமை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அளித்துள்ள விளக்கம் பழனிசாமியின் நிர்வாகத் திறனற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. போலியான, ஏமாற்றுத் திட்டம் தான் அது என்பதை அடையாளம் காட்டி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பாரதி நகர் சுடுகாட்டின் ஒரு பகுதி அம்மா கிளினிக்காக மாற்றப்பட்டுள்ளது என்பதையும், விருகம்பாக்கத்தில் சுடுகாட்டுக்காரிய மண்டபத்தில் அம்மா கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொல்லி இருக்கிறார். பழனிசாமி வெளியிட்ட அரசாணையிலேயே இந்த மினி கிளினிக்குகள் ஓராண்டுதான் இருக்கும் என்றும், தேவையைப் பொறுத்தே இது செயல்படும் என்று தான் உள்ளது என்பதையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் சுட்டிக்காட்டினார். “என்னோடு வந்தால் துறைமுகத்தில் உள்ள மினி கிளினிக் எப்படி இருக்கிறது என்று காட்டத் தயார்” என்றார் அமைச்சர் சேகர் பாபு. ‘இந்தச் சவாலை அ.தி.மு.க. ஏற்கத் தயாரா?’ என்று கேள்வி எழுப்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இப்படித்தான், ஆட்சி முடியும் போது இன்னொரு அறிவிப்பையும் பழனிசாமி அறிவித்தார். ‘1100 என்ற எண்ணுக்குப் போன் செய்தால் உங்கள் குறை அனைத்தும் தீரும்’ என்றும் பழனிசாமி சொன்னார். 1100 எண்ணுக்குப் போன் செய்வது என்ற திட்டம் ஏற்கனவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான்.

‘மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள்' என்று சொல்லி ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற திட்டத்தை 19.1.2016 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். ‘உடனுக்குடன் உங்கள் குறைகள் தீரும்’ என்று ஜெயலலிதா வாக்குறுதி கொடுத்தார். அதனை நான்கு ஆண்டு காலம் செயல்படுத்தாத பழனிசாமி, அதே திட்டத்தை தனது திட்டம் போல தொடங்கினார். ஜெயலலிதா பெயரை அவரே மறைத்தார்.

இப்படி தனது சுயநலத்துக்காக ஜெயலலிதா பெயரையே மறைத்த பழனிசாமி தான், இப்போது அம்மா பெயர் போய்விட்டதே என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories