முரசொலி தலையங்கம்

"கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு ஒமைக்ரானுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்":முரசொலி நம்பிக்கை!

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு, இப்போது ஒமைக்ரானை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

"கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு ஒமைக்ரானுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்":முரசொலி நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவைக் கட்டுப்படுத்தி முற்றுப் புள்ளி வைத்த பிறகு மெல்ல ஒமைக்ரான் நுழையத் தொடங்கி உள்ளது. காற்றைப் போலவே வைரஸ் தொற்றும் கண்ணுக்குத் தெரியாமல் பரவக் கூடியது என்பதால் தன்னைத் தானே காத்துக் கொள்ளுதலே அனைத்துக்கும் அடிப்படை ஆனது. கொரோனா பரவிய காலத்தில் எத்தகைய கட்டுப்பாடுகளை நமக்கு நாமே போட்டுக் கொண்டு வாழ்ந்தோமோ, அதேபோன்ற கட்டுப்பாடுகள் கொண்ட தாக வாழ்க்கையை தகவமைத்துக் கொள்ளுதல் நலம்.

கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு, இப்போது ஒமைக்ரானை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 1.15 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. தற்காலிக கொரோனா சிறப்பு மையங்களை உருவாக்கியும் வருகிறது அரசு. சுமார் 50 ஆயிரம் படுக்கைகளை உடனடியாக உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது பெரிதாக இருந்தது. அந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலைமையை உருவாக்கியது. ஆக்சிஜன் வசதி படுக்கைகளை அதிகப்படுத்தியது. இதுபோன்ற நிலைமை அடுத்து வரக் கூடாது என்பதால் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்து வைத்துள்ளது அரசு.

ஆக்சிஜன் தட்டுப்பாடு வருங்காலங்களில் ஏற்படாத வண்ணம் தமிழக அரசு, ஒன்றிய அரசு, தொண்டு நிறுவனங்கள் ஆகியவை கைகோத்துள்ளன. 222 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக தமிழகத்துக்குத் தேவையான ஆக்சிஜன் அளவுக்கு கூடுதலாகவே இருப்பு உள்ளது. நாள்தோறும் 244 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதி பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறதா, போதுமானதாக உள்ளதா என்பதை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத்தினைப் பார்வையிட்டார். தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் அமைந்துள்ள அவரசகால ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்கையும் பார்வை யிட்டார்.

தி.மு.க. ஆட்சி அமைந்ததும் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால அழைப்பு நிலையம், அவசர கால கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. ‘வார் ரூம்' என்னும் இந்த அமைப்பு முறையானது தமிழகம் முழுவதுக்கு மான தேவையை ஒரு இடத்தில் குவித்து - அனைத்தையும் முறைப் படுத்தும் சேவையாக அமைக்கப்பட்டது. அந்த ‘வார் ரூமை' முதலமைச்சர் ஆய்வு செய்திருக்கிறார். எனவே, அரசைப் பொறுத்தவரையில் எத்தகைய நிலைமையையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு 86 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியம் சொல்லி இருக்கிறார். படிப்படியாக ஒவ்வொருவராக குணமடைந்து வீடு திரும்பி வருவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள வேண்டும்.

கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். அவசிய, அவசரம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதைக் குறைக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். வீட்டையும் பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு தவணையும் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு முறை போட்டு விட்டு, இரண்டாவது முறை போடாமல் பலரும் இருக்கிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். இதுவரை முதல் தவணை 84.87 சதவிகிதத்தினர் செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டு தவணையும் சேர்த்து செலுத்தியவர்கள் 55.85 சதவிகிதத்தினர்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி செலுத்துதல் மாபெரும் இயக்கமாகவே நடந்து வருகிறது. இதுவரை மாநிலம் முழுவதும் 17 நாட்கள் முழுமையான மாபெரும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் ஒரே நாளில் அதிகபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பதே மகத்தான சாதனை ஆகும். இதுவரை தமிழகத்தில் 8.14 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த ஆட்சிக்கு வந்தபோது முதலமைச்சர் அவர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டார்கள். “மக்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்ல, அதிகப்படியான எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் மக்கள் நன்மைக்காக போடப்படுபவைதான் என்பதை மக்களே உணர்ந்து கொள்வார்கள். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் சங்கிலியை துண்டிக்காமல்கொரோனாவை ஒழிக்க முடியாது. அத்தகைய சங்கிலியை துண்டிக்கவே இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருப்பது என்பது, கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துவிடும். அதனால் அரசின் கட்டுப்பாடுகளை, அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளாக இல்லாமல் மக்கள் தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடுகளாக நினைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். அத்தகைய உணர்வோடு மக்கள் இருக்க வேண்டும்.

கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து நம்மையும் காப்போம்! நாட்டையும் காப்போம்!

banner

Related Stories

Related Stories