முரசொலி தலையங்கம்

“அண்ணா சொன்ன தெளிவுடன்.. கலைஞர் சுட்டிக் காட்டிய நெஞ்சுரத்துடன் செயல்பட்டவர் பேராசிரியர்” : முரசொலி!

திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை இது பேராசிரியர் ஆண்டு! இனமானம், மொழி உணர்வு தழைக்கப் போகும் ஆண்டு!

“அண்ணா  சொன்ன தெளிவுடன்.. கலைஞர் சுட்டிக் காட்டிய நெஞ்சுரத்துடன் செயல்பட்டவர் பேராசிரியர்” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நான் எதையும் விரும்பியது இல்லை, ஆனால் எல்லாமே எனக்கு வாய்த்திருக்கிறது” என்று பேராசிரியப் பெருந்தகை அவர்கள் ஒருமுறை சொன்னார்கள். ஆமாம்! அவர் விரும்பியது இல்லை, அவருக்கு எல்லாமே வாய்த்திருக்கிறது!

தன்னை மேடையில் வைத்துக் கொண்டு தன்னையே புகழ்ந்தால் பேராசிரியர் நெளிவார். கொஞ்சம் கூடுதலான பாராட்டாக இருந்தால் நிறுத்தச் சொல்வார். இதோ! அவரது நூற்றாண்டு விழாவை நாடு முழுவதும், இந்த ஆண்டு முழுவதும் நடத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்!

பேராசிரியர் அவர்களை, பொதுச் செயலாளராக அல்ல, தனது பெரிய தந்தையாராக மதித்துப் போற்றியவர் முதலமைச்சர் அவர்கள். தலைவர் கலைஞருக்கு முன்னதாகவே, ‘எங்களுக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் தான் இந்த இயக்கத்தின் நம்பிக்கை’ என்று சொன்னவர் பேராசிரியர் அவர்கள். அதனைச் சொல்வதற்கான தகுதியும் திறமையும் துணிச்சலும் கொண்டவராக பேராசிரியர் அவர்கள் திகழ்ந்தார்கள்.

பேரறிஞர் அண்ணாவாகவே இருந்தாலும், தனக்கு உடன்பாடு இல்லாததைச் சொன்னால், அதனை எதிர்த்து வாதிடும் வல்லமை பேராசிரியருக்கு உண்டு. அதனால்தான் அனைத்து ஆலோசனைகளையும் பேராசிரியரிடம் கலந்து பேசிச் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

இத்தகைய தகுதியும் திறமையும் பேராசிரியர் அவர்களுக்கு சிறுவயதிலேயே வந்து விட்டது. தான் கொண்ட கொள்கையில் மாறாத பற்றும், அந்தக்கொள்கைக்காக எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத தன்மையும் தான் பேராசிரியரின் பெரிய உயர்வுக்கான அடிப்படைக் காரணம்.

“மாணவனாக இருந்தபோது என்னுடைய உள்ளத்தில் தன்மான உணர்வு ஆழமாகப் பதியுமாறு உணர்வுகளை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். நான் தமிழ்ப்பற்றுள்ள மாணவன், தமிழனாக உணர்வு பெற்ற மாணவன் என்ற நன்மதிப்பைப் பெறுவதற்குக் காரணம் தந்தை பெரியார்” என்று சொன்னவர் பேராசிரியர். தந்தை பெரியாரின் மாணவராகவே - பெரியாரின் வயதையும் தாண்டி வாழ்ந்தவர் தான் பேராசிரியர்.

“அன்பழகன் பேச்சில் கனிவு இருக்கும், குழைவு இருக்காது. தெளிவு இருக்கும், பேச்சில் நெளிவு இருக்காது. எத்தனையோ தோழர்கள் இந்தச் செய்தியை என்னிடம் எப்படி எடுத்துக் கூறுவது என்று தயங்கியோ, குழம்பியோ இருப்பது உண்டு. அன்பழகன் தன்னுடைய மனதில் பட்டதை எந்த மெருகும் ஏற்றாமல் எடுத்து உரைப்பார்” என்றார் பேரறிஞர் அண்ணா. இதே அன்பழகராகவே இறுதி வரை இருந்தார் பேராசிரியர்.

“நெஞ்சத்தில் தோன்றும் கருத்துகளை அஞ்சாமல் எடுத்துரைத்து, யாரிடம் பேசுகிறாரோ - அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியே கவலைப்படாமல் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பதில் அவர் ஒரு தனித்தன்மை கொண்டவர்” என்று எழுதினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதேநெஞ்சுரத் தோடு பேராசிரியர் வலம் வந்தார்.

தந்தை பெரியாரின் கொள்கைக்கு - அண்ணா சொன்ன தெளிவுடன் - கலைஞர் சுட்டிக் காட்டிய நெஞ்சுரத்துடன் செயல்பட்ட பேராசிரியரை இன்றையஇளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமாகத் தான், ஓராண்டு முழுவதும் அவரது நூற்றாண்டு விழாவை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

“திராவிடர் இயக்கத்தின் வரலாற்றை நோக்கினால், அறிஞர் அண்ணா அவர்கள் மட்டும் நாட்டுக்காக ஓர் அரசியல் இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொள்ளாமல் இருந்திருந்தால் தமிழ்மொழி உரிமை உணர்வு வளர்ந்திருக்காது. தமிழ் மறுமலர்ச்சி பெற்றிருக்காது. இன்னும் சொன்னால் ஒரு கலைஞர் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்” என்று சொன்னவர் பேராசிரியர். அந்த இரண்டு உணர்வுக்காகத் தான் கலைஞரோடு நான் இருக்கிறேன் என்று சொன்னவர் அவர். அந்த இரண்டு கொள்கைகளைக் காக்க திராவிட முன்னேற்றக் கழகம்தான் முக்கியம் என்று சொன்னவர் அவர்.

கொள்கையின் தேவை, ஒரு தலைவரை அடையாளம் காட்டுகிறது. கொள்கையின் தேவை ஒரு இயக்கத்தை அடையாளம் காட்டுகிறது. எதற்காக அரசியல் என்பதை பேராசிரியர் அவர்கள் அடையாளப்படுத்தும் இடம் இதுதான். வழிகாட்டும் இடம் இதுதான்!

காலத்தின் இன்றைய தேவை இனமான உணர்வு. இனமான உணர்வு கொண்டு தமிழினத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பேராசிரிய நெறியை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிமொழிந்து நிற்கிறார்கள். இனமான உணர்வு என்பது அடுத்த இனத்தைப் பழிப்பது அல்ல. சொந்த இனத்தை மேம்படுத்துவது என்பதை உணர்ந்து ஆட்சி நடத்தி வருபவர், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

காலத்தின் இன்றையத் தேவை மொழிப்பற்று. தமிழ்மொழி மீது பற்றும் பாசமும் கொண்டு வருங்காலத் தலைமுறைக்கும் அந்தப் பற்றையும், பாசத்தையும் ஊட்ட வேண்டும் என்ற பேராசிரிய நெறியை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழிமொழிந்து நிற்கிறார்கள்.

தமிழ் படித்தவர்க்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவது தொடங்கி பல்வேறு தமிழ்க்காப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருபவர் நம்முடைய முதலமைச்சர். தமிழ், தமிழ் என்று பேசினால் தமிழ் வளர்ந்து விடாது என்பதை உணர்ந்து, பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழ் வளர்ச்சியை உருவாக்கி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.

அந்த இனமான உணர்வும், மொழிப்பற்று ஆகிய இரண்டின் அடையாளமாக இருக்கும் பேராசிரியர் அவர்கள், இன்றைய அடையாளச் சொல்லாக நிமிர்ந்து நிற்கிறார், எழுந்து நிற்கிறார். அவர் வாழ்ந்த காலத்தில் அடைந்த உயரத்தை விட அதிக உயரத்தை அவர்க்குத் தந்தாக வேண்டும் என்று முதலமைச்சர் நினைப்பதன் அடையாளம்தான் இத்தகைய அறிவிப்பு. நம்மைப் பொறுத்தவரை, தமிழினத்தைப் பொறுத்தவரை, திராவிட இயக்கத்தைப் பொறுத்தவரை இது பேராசிரியர் ஆண்டு! இனமானம் மொழி உணர்வு தழைக்கப் போகும் ஆண்டு!

banner

Related Stories

Related Stories