முரசொலி தலையங்கம்

"இந்திக்கு முன் இந்தியர்களை மண்டியிட வைக்கும் சதி": அமித்ஷாவின் பேச்சுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!

இந்தியின் காலடியில் இந்தியர்களை ஒட்டுமொத்தமாக மண்டியிட வைக்கும் சதி இருக்கிறது.

"இந்திக்கு முன் இந்தியர்களை  மண்டியிட வைக்கும் சதி": அமித்ஷாவின் பேச்சுக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், மொழித்துறை வல்லுநராகி சில முத்துக்களை உதிர்த்துள்ளார். அத்திப்பழத்தைப் பிட்டுப் பார்த்தால் அத்தனையும் சொத்தை என்பதைப் போல இருக்கிறது அவரது வாதங்கள்!

‘என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்' என்று அமித்ஷா சொல்லி இருக்கிறார். தாயை விட, தாதியை வணங்குகிறேன் என்பதைப் போல இருக்கிறது உள்துறை அமைச்சரின் பேச்சு. அவர் சாதாரண அமித்ஷாவாக இருந்தால் இதனை மதிக்கத் தேவையில்லை. ஆனால் இந்தியாவின் உயர் அமைச்சர்களில் ஒருவராக இருந்து கொண்டு இத்தகைய அபத்தமான கருத்தை ஊர் உலகத்துக்கு அவர் சொல்லியிருக்கத்தேவையில்லை. இந்தி பேசும் மாநில மக்களிடம் தனக்கும் தன் கட்சிக்குமான செல்வாக்கைத் தக்க வைக்கும் அரசியல் தந்திரமாக அமித்ஷா இத்தகைய புண்மொழிகளை உதிர்த்திருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

இப்படி அவர் பேசிய மாநிலம் உத்தரப்பிரதேசம் வாரணாசியில் நடந்துள்ளது. அகில இந்திய ஆட்சி மொழி மாநாடு. அதில் பேசி இருக்கிறார் அமித்ஷா. “நான் ஒரு குஜராத்தி. ஆனால் என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன்” என்று சொல்லி இருக்கிறார் அவர். தாய்மொழியை விட அவர் இந்தியை அதிகமாக நேசிப்பதற்கு அரசியல் நீங்கலாக வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? இருக்க முடியுமா? இந்தியின் வளத்தைச் சொல்லி, அதன் இலக்கியப் பெருமையைச் சொல்லி, ‘எனது தாய்மொழியைப் போல இந்தியையும் மதிக்கிறேன்' என்று சொல்லி இருந்தால் கூட வாதத்துக்கு ஏற்கலாம். ஆனால் இது பக்கா அரசியல்வாதமாக அல்லவா இருக்கிறது!

ஆங்கிலத்தை அந்நியமொழி என்று சொல்லி ஒதுக்கும் அமித்ஷா, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இந்தியைத் தாய்மொழி ஆக்குவதற்குத் துடிக்கிறார். இது தாய்மொழிகள் மீது நடத்தப்படும் பண்பாட்டுத் தாக்குதல். வெளிப்புற ஆபத்துகளைவிடக் கொடுமையானதும், கொடூரமானதும் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 14 தேசிய மொழிகளில் இந்தியும் ஒரு தேசிய மொழி. அந்தப் பதினான்கு தேசிய மொழிகளில் 380 வகைத் தாய்மொழிகள் அடங்கி இருக்கின்றன. அந்தப் பதினான்கு மொழிகளில் குஜராத்தியும் ஒன்று. இந்தியும் ஒன்று. குஜராத்தியில் இருந்து இந்திக்கு கூடுவிட்டு கூடு பாய்கிறார் அமித்ஷா.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும், இந்தியைப் பேச மட்டுமே தெரிந்தவர்களும் சேர்ந்து இந்தி மக்களாக மாறித் தொகுப்பாகக் காட்சி அளிக்கிறார்களே தவிர, இந்தியாவில் பெரும்பான்மையினர் பேசும் மொழி அல்ல இது!

இந்தியைப் பற்றி 100 ஆண்டுகளுக்கு முன்னால் தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகள் எழுதிவிட்டார்.

“இந்தி மொழியானது வடநாட்டவ ரெல்லாராலும் பொது மொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளில் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதேயல்லாமல், அஃதெங்கும் ஒரே வகையாகப் பேசப்படவில்லை.

அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற்கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்து கொள்ள மாட்டாதவராயிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை ‘மேல் நாட்டு இந்தி' , ‘கீழ்நாட்டு இந்தி', ‘பிகாரி' என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும் அப்பெரும் பிரிவுகளினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர்.

கங்கையாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களில் பேசப்படுவது பாங்காரு எனவும், வடமதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பேசப்படுவது ‘பிரஜ்பாஷா' எனவும், கங்கைக்கும், யமுனையாற்றுக்கும் இடையேயுள்ள நாடுகளின் தெற்கில் பேசப்படுவது ‘கனோஜ்' எனவும், பந்தல் கண்டிலம் நருமதையாற்றையடுத்த

இடங்களிலும் பேசப்படுவது, ‘பந்தலி' எனவும், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது ‘உருது' எனவும் வழங்கப்படுகின்றன.

இவ்வாறு இந்தியாவின் வடமேற்கு பகுதிகளில் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் ‘மேல் நாட்டு இந்தி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவனவாகும்.

‘கீழ் நாட்டு இந்தி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: ‘அவதி’,‘பகேலி', ‘சத்தீஸ்கரி' என்னும் மொழிகளாகும். இம்மூன்று மொழிகளுள்ளும் ‘அவதி' என்பதே முதன்மையுடைய தாய் அயோத்திய நாட்டின் கண் வழங்குகின்றது.

‘பிகாரி' என்னும் பெரும் பிரிவில் அடங்குவன: ‘மைதிலி' ‘போஜ்புரி’, ‘மகதி', என்னும் மொழிகளாகும். இம் மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கையாற்றின் வடக்கே மிதிலை நாட்டில் வழங்கும் ‘மைதிலி' என்னும் மொழியேயாகும். இப்போது இந்தி மொழி நூல்கள் என்று வழங்கப்படுவன வெல்லாம் இந்த ‘மைதிலி' மொழியிலேதான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்தி மொழியின் பிரிவுகளாக ஆங்காங்கு வடநாட்டின்கண் பேசப்படும் சிறுசிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்தி மொழியின் பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல

நாடுகளில் உள்ளாரும், நாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவரெல்லார்க்குந் தெரிந்த பொதுமொழி என்றுரைப் பாருரை எங்ஙனம் பொருந்தும்” - என்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவு படுத்தி இருக்கிறார்.

இந்தியை ஆட்சி மொழி ஆக்க வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட விவாத அவையில் இந்தியின் ஆதரவாளர்கள் முழங்கிய போது டி.டி.கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய கேள்விதான் இன்று அமித்ஷாவைப் பார்த்துக் கேட்கும் கேள்வியாக உள்ளது. “உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மாண்புமிகு எனது நண்பர்கள், இந்தி ஆதிக்கத்தை திணிக்கும் முயற்சிகள் எந்த வகையிலும் நமக்கு உதவி செய்யப் போவது இல்லை. முழு இந்தியா வேண்டுமா? அல்லது இந்தி - இந்தியா மட்டும்தான் வேண்டுமா? அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும்” என்று அவர் சொன்னார்.

“இந்தி பேசாத மக்களின் அனுமதியைப் பெறாமல் ஆங்கிலத்தை அகற்ற மாட்டோம்'' என்று பிரதமர் நேரு அவர்கள் அளித்த வாக்குறுதி இன்றும் கல்வெட்டாக இருக்கிறது.

திருச்சி தேசியக் கல்லூரிக்கு வந்த காந்தியடிகளுக்கு சமஸ்கிருதத்தில் வரவேற்பு இதழ் தரப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந் தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டு, கைதூக்கச் சொன்னார் காந்தி. சிலர்தான் தூக்கினார்கள். ‘பெரும்பான்மையினருக்கு தெரியாத ஒரு மொழியில் எதற்காக வரவேற்பிதழ் தருகிறீர்கள்? உங்கள் தாய்மொழியான தமிழில்தான் தந்திருக்க வேண்டும்' என்றார் மகாத்மா.

தாய்மொழியை விட, இன்னொரு மொழியை நேசிக்கிறேன் என்பதற்குப் பின்னால், இந்தியின் காலடியில் இந்தியர்களை ஒட்டுமொத்தமாக மண்டியிட வைக்கும் சதி இருக்கிறது. இதனை தமிழ் மட்டுமல்ல; இந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளாத யாரும் ஏற்க மாட்டார்கள்!

banner

Related Stories

Related Stories