முரசொலி தலையங்கம்

"அ.தி.மு.க அரசின் SMART CITY திட்ட முறைகேட்டை அம்பலப்படுத்திய சென்னை மழை": முரசொலி சாடல்!

இன்றைய மழை வெள்ளப்பாதிப்புகளின் போது அரசே, மக்களைப் பாதுகாக்கும் படையாக மாறியதால் தன்னார்வலர் அமைப்புகளே களத்தில் தேவைப்படாத சூழலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றினார்.

"அ.தி.மு.க அரசின் SMART CITY  திட்ட முறைகேட்டை அம்பலப்படுத்திய சென்னை மழை": முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தலைநகர் காக்கும் குழு ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ளார்கள்!

“மழை, அதிகநீர் வரத்து, அதனால் ஏற்பட்ட சேதங்கள், அதைத் தடுக்க துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை தற்காலிகமானவை என யாரும் நினைத்து விடக்கூடாது. அப்படி நாங்கள் இருந்துவிடவும் மாட்டோம். ஒரு நிரந்தரத் தீர்வை உருவாக்குவதற்கான முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது என்பதை நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறிய முதலமைச்சர் அவர்கள் -

“பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழை நீர் வடிகால்கள் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்டதால் பெரும் இடங்களில் நீர் தேங்கியது. இதை மனதில் கொண்டு கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரு அறிவிப்பைச் செய்தோம். தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னைப் பெருநகர வெள்ள மேலாண்மைக்குழு ஒன்றை நியமிப்போம் என்று அறிவித்திருந்தோம், அதன் அடிப்படையில் தேசியப் பேரிடர் மேலாண்மையின் இணைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திருப்புகழ் ஐ.ஏ.எஸ். அவர்கள் தலைமையில் இந்த மேலாண்மைக் குழுவை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு எடுத்துள்ளது.

இக்குழுவில் திருநம்பி அப்பாதுரை, பேராசிரியர் ஜானகிராமன், பேராசிரியர் கபில் குப்தா, டாக்டர் பிரதிப் மோசஸ், மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. பேராசிரியர்களைக் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு விரைவில் கூடி சென்னைப் பெருநகர மாநகராட்சி, மழைநீரால் பாதிக்கப்படாத வண்ணம் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வு செய்து விரைவில் ஆலோசனை வழங்கும்.

இவர்கள் தரும் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு செயல்பட்டு பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்குவது தவிர்க்கப்படும்” என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இது ஏதோ இப்போது மழை பெய்தது, தண்ணீர் தேங்கியது, அதன் பின் உணர்ந்து அமைக்கப்பட்ட குழு என யாரும் கருத வேண்டாம். இப்படி ஒரு குழு அமைக்கப்படும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையிலும் இருக்கிறது. இதற்குத்தான் சட்டபூர்வமான வடிவம் கொடுத்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கு மாதகாலமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் தூர் வாரப்பட்டுள்ளது. 30 ஆயிரம் silt catch pits தூர்வாரப்பட்டுள்ளது. இவை ரூ.9.16 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளாகச் செயல்பட்டுத்தப்பட்டுள்ளன. அடையாறு, கூவம், பக்கிங் காம் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள், வண்டல் மண்கள்தூர்வாரி எடுக்கப்பட்டது. இதனால்தான் கடந்த காலங்களில் அதிகம் நீர் தேங்கிய மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, வடபழனி, அடையாறு, எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய பகுதிகளில் அதிகப்படியான நீர் தேங்கவில்லை. இருப்பினும் நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று முன் யோசனையுடன் முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.

இவ்வளவு திட்டமிடுதல்கள் இருந்தாலும் சில இடங்களில் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம், கடந்த பத்தாண்டு காலமாக எந்தத் திட்டமிடுதலும் அ.தி.மு.க. ஆட்சியில் இல்லை. வழக்கமாகச் செய்யவேண்டிய தூர்வாரும் பணிகளைக் கூடச் செய்யவில்லை. `ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரால் மிகப்பெரிய கொள்ளை நடந்ததே தவிர, எதுவும் செய்யப்படவில்லை.

எங்கெல்லாம் மழைநீர் வடிகால் அமைப்புகள் போடப்பட்டு இருக்க வேண்டுமோ அங்கு போடவில்லை. ஏற்கனவே இருந்த இடத்தில் இடித்து விட்டுப் போட்டுள்ளார்கள். வடிகால் அமைப்புகள் போடுவதற்கு பணம் செலவு செய்யாமல், நடைபாதைகளை அழகுபடுத்துவதற்கு அந்த நிதியைச் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டி உள்ளது அ.தி.மு.க. அரசு. ஆயிரம் கோடி செலவு செய்துள்ளோம், சென்னையில் மழை நீரே நிற்காது என்று வாய்கிழிய பழனிசாமி பேசினார். இந்த மழையானது, அவரது பை நிரம்பியதை மட்டுமே அம்பலப்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியின் கையாலாகாத் தனத்துக்கு ஒரே ஒரு உதாரணம்... 02.12.2015 அன்று எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சென்னையே மிதந்தது. 174 பேர் இறந்தார்கள், 2 ஆயிரத்து 711 கால்நடைகள் இறந்தன, ஒரு பிரதான மருத்துவமனையின் ஜெனரேட்டர் அறை, ஆக்ஸிஜன் சிலிண்டர் இருந்த அறைகளில் வெள்ள நீர் புகுந்ததால் 14 நோயாளிகள் இறந்தார்கள். சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவலத்தையும் அப்போது நாடு பார்த்தது. அன்றையமுதலமைச்சர் ஜெயலலிதாவையே அதிகாரிகளால் இரண்டு நாட்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை. சென்னை மிதந்ததற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு செயல்படவில்லை. அதனால்தான் மக்களே தங்களைக்காப்பாற்றிக் கொண்டார்கள். தன்னார்வலர்களாக மக்கள் எழுந்து செயல்பட்டு மக்களுக்கு உதவிகள் செய்தார்கள்.

இன்றைய மழை வெள்ளப்பாதிப்புகளின் போது அரசே, மக்களைப் பாதுகாக்கும் படையாக மாறியதால் தன்னார்வலர் அமைப்புகளே களத்தில் தேவைப்படாத சூழலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாற்றினார். இத்தகைய நோக்கத்தின் அதிகபட்ச செயல்பாடாகத்தான் தலைநகரை வெள்ளத்தில் இருந்து மீட்பதற்கான நிரந்தரக் குழு அமைப்பது ஆகும். இனி எல்லாம் சுகமே, நலமே என்பது போன்ற நடவடிக்கைதான் இது.

இதேபோல் கடலூர் மாவட்டத்துக்கும், டெல்டா மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களுக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படும் என்பதையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இயற்கையை இயற்கையோடு இயைந்து வெல்வோம்!

banner

Related Stories

Related Stories