முரசொலி தலையங்கம்

”வாய் வார்த்தையில் வண்டியை ஓட்டிட முடியாதல்லவா” : இடைத்தேர்தல் முடிவால் கதிகலங்கிப் போன பாஜக - முரசொலி

இன்றைக்கு விலையைக் குறைக்க முடிவு எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்; இடைத்தேர்தல் தோல்விகள்தான் என முரசொலி தலையங்கம் சாடியுள்ளது.

”வாய் வார்த்தையில் வண்டியை ஓட்டிட முடியாதல்லவா” : இடைத்தேர்தல் முடிவால் கதிகலங்கிப் போன பாஜக - முரசொலி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

14 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இடைத் தேர்தல் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளில் இரண்டை பா.ஜ.க. இழந்துள்ளது. இது பா.ஜ.க.வுக்கு சில அபாய எச்சரிக்கையைக் கொடுத்துள்ளது.

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், மற்றொரு தொகுதியில் பா.ஜ.க.வும் வெற்றி!

இராஜஸ்தானில் 2 சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி!

பா.ஜ.க. ஆளும் இமாச்சலப்பிரதேசத்தில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி!

மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி!

மத்தியப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில் ஒன்றில் காங்கிரசும், மற்றொன்றில் பா.ஜ.க.வும் வெற்றி!

இடைத்தேர்தல் நடைபெற்ற 3 மக்களவைத் தொகுதிகளும் பா.ஜ.க. வசம் இருந்தன, அதில் 2 தொகுதிகளை பா.ஜ.க. இழந்துள்ளது!

மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா தொகுதியை மட்டும் பா.ஜ.க. தக்கவைத்துள்ளது!

தாத்ரா-நாகர் ஹவேலி மக்களவைத் தொகுதியை பா.ஜ.க.விடமிருந்து சிவசேனா கைப்பற்றியது!

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது!

இதுதான் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் கிடைத்த வெற்றிகளின் விபரம் ஆகும்!

பொதுவாகவே இடைத்தேர்தல்களை, எடை போடும் தேர்தலாகத்தான் சொல்வார்கள். அப்படி எடை போடும் தேர்தலாகத்தான் இம்முடிவுகள் இருக்கின்றன. எடை போடப்பட்டு இருப்பது பா.ஜ.க.வை. அதன் அகில இந்திய ஆட்சியை - குறிப்பாக; பிரதமர் நரேந்திர மோடியை! பீகார், அசாம், மேற்கு வங்கம், மிசோரம், ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா உள்பட 14 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் தாத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பிரதேசம், மத்திய பிரதேசம், இமாச்சலப் பிரதேசத்தில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த முடிவுகள் பா.ஜ.க.வுக்குச் சாதகமான முடிவுகளாக இல்லை. கர்நாடகாவில் ஒரு இடத்தை மட்டுமே பிடித்துள்ளது பா.ஜ.க. ராஜஸ்தானில் எதையும் கைப்பற்றவில்லை. பா.ஜ.க. ஆளும் இமாச்சலப் பிரதேசத்திலும் எதையும் கைப்பற்றவில்லை. மேற்கு வங்கத்திலும் எதையும் கைப்பற்றவில்லை. மத்தியப் பிரதேசத்தில் ஒரே ஒரு இடத்தை மட்டுமே பிடித்துள்ளது பா.ஜ.க. மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றை மட்டுமே பிடித்துள்ளது பா.ஜ.க. அதாவது நடந்து முடிந்த இந்த இடைத்தேர்தலில் பெருவாரியான இடங்களில் பா.ஜ.க. தோல்வியுற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

ராஜஸ்தானும், இமாச்சலப் பிரதேசமும், மத்தியப் பிரதேசமும் பா.ஜ.க.வின் கோட்டையாகச் சொல்லப்படும் மாநிலங்கள். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவதாகச் சொல்லிக் கொண்ட கட்சி அது. கர்நாடகாவிலும், இமாச்சலப் பிரதேசத்திலும் அது ஆளும் கட்சியாகத்தான் இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும் மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் இருக்கிறது. அங்கு நடந்த தேர்தல்களில் காங்கிரசு கட்சி வென்றுள்ளது. பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக இருக்கும் நட்டாவின் தொகுதி மண்டி. அந்தத் தொகுதியையும் காங்கிரசு கைப்பற்றி உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்தில் பா.ஜ.க. தோல்வியை அடைந்துள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் - அதாவது 2014க்கு முன்னால் எத்தனையோ வாக்குறுதிகளை பா.ஜ.க. கொடுத்தது. அதில் எத்தனை நிறைவேற்றப்பட்டது என்பது அதன் மனசாட்சிக்குத்தான் தெரியும்.

பா.ஜ.க.வின் மூன்று முகமாகச் சொல்லப்பட்ட வாக்குறுதிகள்:

வெளிநாட்டில் உள்ள கருப்புப் பணம் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் - இதுவரை இல்லை!

விவசாயிகளின் லாபம் இரண்டு மடங்கு ஆகும் - இதுவரை இல்லை. இருந்த நிலமும் பறி போய்க் கொண்டு இருக்கிறது.

ஓராண்டில் 2 கோடிப் பேருக்கு வேலை வாய்ப்பு - அப்படி எந்தத் திட்டமும்இல்லை. வேலையில்லாதவர் எண்ணிக்கை கோடிக் கணக்காக உயர்ந்துவிட்டது.

மிகப் பிரபலமான வாக்குறுதிகள் இந்த மூன்றும். இந்த மூன்றுமே நிறைவேற்றப்படவில்லை. அதனினும் முக்கியமாக கொரோனா என்ற பேரிடர் காலத்தில் அடித்தட்டு மக்களைக் காப்பாற்றத் தவறியது பா.ஜ.க. அரசு. அந்த அடித்தட்டு மக்களுக்கு எதையும் கொடுக்கவில்லை. கேட்டால், ‘கடன் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று வங்கிகளைக் காட்டினார்கள். அதனால்தான் மக்கள், தாங்கள் யார் என்பதைக் காட்டிவிட்டார்கள். இது மாபெரும் தோல்விதான் என்று பா.ஜ.க. தலைமை உணர்ந்ததன் அடை யாளம்தான் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருப்பது.

பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5, டீசல் லிட்டருக்கு ரூ.10 குறைப்பதாக ஒன்றிய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 குறைத்து நடவடிக்கை எடுத்தபோதே, அதேபோல் ஒன்றிய பா.ஜ.க. அரசும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, ‘இதுபோன்ற விலை நிர்ணயம் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று வியாக்கியானம் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு விலையைக் குறைக்க முடிவு எடுத்திருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம்; இடைத்தேர்தல் தோல்விகள்தான். சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை வைத்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துபவர்களுக்கும், மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

ஆனால் அதற்கு வரி போடுகிறதே ஒன்றிய அரசு? அந்த வரியை ஏன் குறைக்கவில்லை என்பதுதான் கேள்வி. அடக்க விலையில் குறைத்தால் என்ன, வரியில் குறைத்தால் என்ன? விலை குறைந்தால் போதும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை தானாகச் செய்ய பா.ஜ.க. முன்வரவில்லை. அதனைச் செய்ய வைத்துள்ளன இந்த இடைத்தேர்தல் முடிவுகள். இது பா.ஜ.க.வுக்குப் பின்னடைவான முடிவுகள்தான் என்பதை பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்ததன் மூலமாக பா.ஜ.க.வே ஒப்புக் கொண்டுவிட்டது. வெறும் வாய்வார்த்தைகளில் வண்டியை ஓட்ட முடியாது என்பதை ஒன்றிய அரசுக்கு உணர்த்தி இருக்கிறது இந்த இடைத் தேர்தல் முடிவுகள்!

banner

Related Stories

Related Stories