முரசொலி தலையங்கம்

“மக்கள் இருந்தால்தான் மற்ற பிரச்சினைகள்... கவனம் செலுத்த வேண்டியது இதில்தான்” : முரசொலி தலையங்கம்

பருவநிலை மாற்றம் குறித்து அக்கறையோடு செயல்படுவதன் மூலமாக நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க வேண்டும் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

“மக்கள் இருந்தால்தான் மற்ற பிரச்சினைகள்... கவனம் செலுத்த வேண்டியது இதில்தான்” : முரசொலி தலையங்கம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (நவ., 2, 2021) தலையங்கம் வருமாறு:

உலகத்துக்கே மிகமுக்கியமான மாநாடு ஒன்று ஸ்காட்லாந்தில் தொடங்கி இருக்கிறது. அதுதான் பருவநிலை மாற்ற மாநாடு ஆகும்! ஏன் இதனை மிக முக்கியமான மாநாடு என்று சொல்கிறோம் என்றால் பருவ நிலை மாற்றத்தால் பாதிப்படையும் இந்திய மாவட்டங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது நம்முடைய சென்னை மாநகரம்.

இந்திய அளவில் தீவிர பருவ நிகழ்வுகளால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டங்களில் 7ஆவது இடத்தில் சென்னை இருப்பதாக @CEEWIndia ஆய்வில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் இது உலகப் பிரச்சினைகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

ஐக்கியநாடுகள் சபையின் சார்பில் பருவநிலை மாற்ற மாநாடு நேற்றைய தினம் ஸ்காட்லாந்தில் தொடங்கி உள்ளது. நவம்பர் மாதம் 12 ஆம் தேதி வரைக்கும் இது நடக்க இருக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கும், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைத் தடுக்கவும் தாங்கள் எடுத்துவரும் மாற்றங்களை அனைத்து நாட்டுத் தலைவர்களும் இந்த மாநாட்டில் சொல்ல இருக்கிறார்கள்.

இம்மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்கிறார். இந்தியாவின் செயல் திட்டங்கள் குறித்து இதில் பேச இருக்கிறார். “சூரிய மின்உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி போன்ற மரபு சாரா எரி சக்தித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் இந்தியா முன்னணி நாடாக இருக்கிறது” என்று தனது அறிக்கையில் மோடி சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக அம்மாநாட்டில் அவர் விரிவாகப் பேசக் கூடும்.

120 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். நாடுகளின் தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கெடுக்க இருக்கிறார்கள். கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது தான் இம்மாநாட்டின் மிகமுக்கியமான நோக்கமாக இருக்கப்போகிறது.

“கார்பன் உமிழ்வை வரும் 2030க்குள், 2010ன் அளவுகளிலிருந்து 45சதவிகிதம் குறைப்பதற்கான முடிவை அரசுகள் எடுக்குமா என்பதுதான் கேள்வி. கார்பன் சமநிலை முக்கியம்தான். ஆனால் இன்னும் 8 ஆண்டுகளுக்குள் 45 சதவிகிதத்தை குறைக்கும் அறிவிப்புதான் மிகமிக முக்கியமானது” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மக்கள் இருந்தால்தான் மற்ற பிரச்சினைகள்... கவனம் செலுத்த வேண்டியது இதில்தான்” : முரசொலி தலையங்கம்
PRINT-130

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள, மட்டுப்படுத்த, மனித சமூகமாக நம்மை தகவமைத்துக் கொள்ள இறுதி வாய்ப்பாக அமையவுள்ளது பன்னாட்டுதலைவர்களின் உச்சிமாநாடு. இது ஏதோ பருவநிலை மாற்றப் பிரச்சினை மட்டுமல்ல; இதுதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரச்சினையாக மாறப் போகிறது. காலநிலை மாற்றத்தால் 25 ட்ரில்லியன் டாலர்கள் உலக பொருளாதாரத்தில் குறையப்போகிறது என்று கணித்துள்ளார்கள். தென்கிழக்கு ஆசியாவில் 28 சதவிகிதம் வரை பொருளாதாரத்தில் இழப்பு ஏற்படும் என்று சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். வெப்பநிலை அதிகரிப்பதால் தொழிலாளர்களின் வேலைத்திறன் குறையும் என்று கணித்துள்ளார்கள்.

வெப்பநிலை அதிக மானால் உற்பத்தியே குறைந்து போகும் என்கிறார்கள். இப்படி அனைத்தையும் பாதிக்கும் பிரச்சினையாக பருவநிலை மாற்றம் அமையப் போகிறது. அதனால்தான் போப் உருக்கமான வேண்டுகோளை வைத்துள்ளார்.

“இந்தப் பூமியின் கூக்குரலும் ஏழைகளின் கூக்குரலும் பருவ நிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுக்கு கேட்க வேண்டும்” என்று சொல்லி இருக்கிறார் போப். அதனடிப்படையில் பார்த்தால் அனைவரும் பேச வேண்டிய, கவனம் செலுத்த வேண்டிய விவகாரங்களில் ஒன்றாக பருவநிலை மாற்றம் அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினை குறித்துவிரிவாகப் பேசி இருந்தார்கள்.

“இன்று காலநிலை மாறுபாடு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிவருகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. வெப்பச் சலனம் அதிகமாகி வருகிறது. வடமாநிலங்கள் சிலவற்றில், பல நேரங்களில் வெப்ப அலை அடிக்கத் தொடங்கி இருக்கிறது. உலகின் ஒரு சில பகுதிகள் ‘வெட் பல்ப்டெம்பரேச்சர்' தன்மையை எட்டிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உடல் தன்னைத்தானே குளிர்விக்கும் தன்மையை இதனால் இழக்கும். இது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் சொல்லத்தொடங்கி இருக்கிறார்கள்.

சீரான பருவம் என்பது குறைந்து வருகிறது. மழைக்காலம் என்பது கூட வரையறுக்க முடியாததாக இருக்கிறது. மழையே பெய்யாமல் போய்விடுகிறது. அப்படியே பெய்தால் அதிக வெள்ளமாக ஆகிவிடுகிறது. வறட்சிக்கும், வெள்ளத்துக்கும் மத்தியில் காலச்சூழல் போக்குக்காட்டுகிறது. மின்னலின் தீவிரத்தன்மை அதிகரிக்கிறது. மின்னல் தாக்கத்தால் இறந்தவர் எண்ணிக்கை கூடி வருகிறது. புயல்களின் எண்ணிக்கையும், தீவிரத்தன்மையும் அதிகமாகி வருகிறது.

இந்தியாவின் மிக நீளமான இரண்டாவது கடற்கரையை வைத்துள்ளது நமது மாநிலம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்த சூழலை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்ட முதலமைச்சர் அவர்கள், “கால நிலை மாற்றம் என்பது மானுடத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக தமிழ்நாடு அரசு கருதுகிறது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஆராய்ந்து மேற்கொள்வோம்.

இயற்கையை சீரழித்துவிடாமல், சீர் செய்யும் கடமை நமக்கு உள்ளது. இதற்கான ஆலோசனைகளை சூழலியல் அறிஞர்கள் அனைவரும் அரசுக்குத் தாருங்கள் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். திறந்த மனத்தோடு அதனை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது என்ற உறுதியையும் அளிக்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

பருவநிலை மாற்றம் குறித்து அக்கறையோடு செயல்படுவதன் மூலமாக நாட்டையும், நாட்டு மக்களையும் காக்க வேண்டும். அதற்கு இந்த உலகளாவியமாநாடு அடித்தளம் அமைக்க வேண்டும்; வழிகாட்ட வேண்டும். இது ஏதோ அறிவியல் பிரச்சினை, சுற்றுச் சூழல் பிரச்சினை, என்.ஜி.ஓ. பிரச்சினைஎன்று ஒதுங்கிப் போகாமல் மக்கள் பிரச்சினையாகப் பார்க்க வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம். மக்கள் இருந்தால்தான் மற்ற பிரச்சினைகள் என்பதை மனதில் வைத்து அனைவரும் செயல்பட்டாக வேண்டும்!

banner

Related Stories

Related Stories