முரசொலி தலையங்கம்

“போலிப் பெருமையாக உயிர்காக்கும் தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் மோடி அரசு” : முரசொலி சாடல்!

உயிர் காக்கும் விவகாரத்திலேயே மோடி அரசு இரக்கமற்ற வர்த்தகத்தில் ஈடுபடுகிறது என முரசொலி தலையங்கத்தில் சாடியுள்ளது.

“போலிப் பெருமையாக உயிர்காக்கும் தடுப்பூசியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் மோடி அரசு” : முரசொலி சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (25-09-2021) வருமாறு:

தடுப்பூசியை மீண்டும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். ‘அம்மா பிச்சைக்குப் போகிறாளாம்; மகன் அன்னதானம் பண்றானாம்’ என்று ஒரு சொலவடை உண்டு. தடுப்பூசியில் தட்டுப்பாடாக இருக்கிறது இந்தியா. இதில் போலிப் பெருமையாக வெளிநாட்டுக்கு ஏற்றுமதி என்று இறங்கி இருக்கிறது ஒன்றிய அரசு. இவர்கள் எதையும் தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது மக்களைப் பழிவாங்கச் செய்கிறார்களா எனத் தெரியவில்லை!

தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்வோம். நம் மாநிலத்துக்கு வேண்டிய தடுப்பூசியை முழுமையாகத் தந்து முடித்துவிட்டார்களா என்றால் இல்லை. பிரதமருக்கு பல தடவை முதலமைச்சர் கடிதம் எழுதிவிட்டார்கள். நான்கு நாட்களுக்கு முன்னரும் எழுதி இருக்கிறார்கள். தமிழகத்திற்கு வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்து கடிதம் எழுதி இருக்கிறார்.

“தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பாக கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். தகுதியுள்ள அனைவருக்கும் இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழகத்தில்தான் அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. கடந்த காலப்பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும். தமிழகத்தில் நடத்தப்பட்ட இரு மெகா முகாம்களில் 45.34 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை 4 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன” என்றும் அக்கடிதத்தில் முதல்வர் தெரிவித்திருந்தார்.

“தடுப்பூசி போடத் தொடங்கியதால் தான் கொரோனா தேசிய அளவிலான சராசரியில் தமிழகம் குறைந்துள்ளது. வழக்கமாக போடும் தடுப்பூசி எண்ணிக்கையில் கூடுதலாக போட மெகா முகாம்களையும் தமிழ்நாடு நடத்த வேண்டியிருக்கிறது. தமிழகத்தில் எளிதாக வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் போட முடியும்” எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தார். இந்தக் கோரிக்கையை நிவர்த்தி செய்யாத அரசு எதற்காக ஏற்றுமதியில் கவனம் செலுத்த வேண்டும்?

ஒன்றிய அமைச்சரை நேரில் சென்று சந்தித்தும் இதனை வலியுறுத்தி இருக்கிறார் தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள். “தடுப்பூசி வழங்குவதற்கான அளவீடுகளில் தமிழ்நாடு இன்னும் தேசிய சராசரிக்குக் கீழ் உள்ளது. நீங்கள் வழங்கும் தடுப்பூசி இரண்டு மூன்று நாட்களில் தீர்ந்து விடுகிறது. வாரத்துக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் தாருங்கள். அதனை மக்களுக்குச் செலுத்தும் உட்கட்டமைப்பு வசதிகள் எங்களுக்கு இருக்கிறது” என்றும் டி.ஆர்.பாலு ஒன்றிய அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தமிழகம் நிரூபித்தும் இருக்கிறது. கடந்த 12 ஆம் தேதி மட்டும் மாநிலம் முழுவதும் 28 லட்சத்து 91 ஆயிரத்து 21 பேருக்கும், 19ஆம் தேதி மட்டும் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதியும் இதே போன்ற மெகா முகாம்கள் தமிழகத்தில் நடக்க இருக்கின்றன.

இத்தகைய நிலையில் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு முழுமையாகத் தடுப்பூசிகளை வழங்க முன்வராமல் ஏற்றுமதி செய்யப் போவதாகச் சொல்லப்படுவதன் பின்னணியை ஒன்றிய அரசு விளக்கியாக வேண்டும்!

ஒருசில குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆதிக்கத்தில் தடுப்பூசியைத் தக்க வைக்க ஒன்றிய அரசு அனுமதி அளித்ததன் விளைவே இந்தத் தட்டுப்பாடு என்பது புரியாத கணக்கு அல்ல. பல லட்சம் கோடி வர்த்தகமாக இன்றைய தினம் தடுப்பூசி வர்த்தகம் மாறிவிட்டது. 2000-வது ஆண்டுக்கு முன்னால் பொதுத்துறை நிறுவனங்களின் கையில் இருந்த தடுப்பூசித் தயாரிப்பை இப்போது தனியாருக்குத் தாரை வார்த்துவிட்டு அவர்களுக்குப் பணம் கொடுத்துத் தயாரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது ஒன்றிய அரசு.

சுஜித் அச்சுக்குட்டன் என்ற எழுத்தாளர் தரும் புள்ளிவிபரங்கள் மலைப்பை ஏற்படுத்துகின்றன. “கொரோனா தடுப்பூசிகளின் இந்தியச் சந்தையின் மதிப்பு 2027 ஆம் ஆண்டு 16,660 கோடியாக இருக்கும்’’ என்கிறார். தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கப் போகும் சந்தையாக இது இருக்கும் என்றும், அனைத்து தடுப்பூசிகளும் தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படுகின்றன என்றும், போட்டிகள் அந்த நிறுவனங்களுக்குள் நடப்பதாகவும், உற்பத்தி விலை - விற்பனை விலை ஆகியவை கணிக்க முடியாத மர்மக்குகை போல இருப்பதாகவும் அவர் எழுதுகிறார்.

இந்தியாவில் இரண்டாம் அலை எழும்போது பிரிட்டனில் போய் விரிவாக்கம் செய்வதைச் சுட்டிக் காட்டும் அவர், இந்தத் தட்டுப்பாடுகளைத் திட்டமிட்டுச் செய்வதாகவும் சொல்கிறார். “பெருந்தொற்றின் உச்சகட்டத்திலும் தடுப்பூசிப் பற்றாக்குறையை அரசியல் நிர்பந்தமாக மாற்றி, வர்த்தக லாபத்துக்கு வழிவகை செய்து கொள்கிறார்கள்’’ என்று உடைத்துச் சொல்கிறார்.

உயிர் காக்கும் விவகாரத்திலேயே எத்தகைய இரக்கமற்ற வர்த்தகம் விளையாடுகிறது என்பதைப் பாருங்கள்! இந்தச் சூழலில் நேற்றைய தினம் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர், “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் 95 நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன” என்று பெருமைப்பட்டுள்ளார். முதலில் முழுமையாக இந்தியாவின் மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன் என்பதுதான் பரிதாப இந்தியனின் கோரிக்கையாக இருக்கிறது!

banner

Related Stories

Related Stories