முரசொலி தலையங்கம்

”சமூக நீதி நாளுக்கு எதிரான நடுப்பக்க கட்டுரை அவர்களின் நடுக்கத்தை கூறுகிறது” - முரசொலி நாளேடு தாக்கு!

நீதிக்கட்சியை ஆதரிக்கக் காரணம் சமூகநீதியே. அடுத்துவந்த இராஜாஜி ஆட்சியை எதிர்க்கக் காரணமும் அவரது ஆட்சியின் சமூக அநீதியே.

”சமூக நீதி நாளுக்கு எதிரான நடுப்பக்க கட்டுரை அவர்களின் நடுக்கத்தை கூறுகிறது” - முரசொலி நாளேடு தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை சமூகநீதி நாளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று அறிவித்தாரோ அன்று முதல் சிலருக்கு நீர்க்கடுப்பு வந்துவிட்டது. காந்தாரி அடி வயிற்றில் குழவிக் கல்லை வைத்து அடித்துக் கொள்வதைப் போல அடித்துக் கொள்கிறார்கள். எதையும் நேரடியாகச் சொல்லாமல் மறைந்திருந்து தாக்குவதில் மாவீரர்களான அவர்கள், விபீஷணர்களைப் பிடித்து வந்து எழுத வைக்கிறார்கள். பெரியாருக்கும், சமூகநீதிக்கும் என்ன தொடர்பு, அவர் என்ன ஆட்சியில் இருந்தாரா, அதிகாரத்தில் இருந்து உத்தரவு போட்டாரா என்று பாரம்பரியம் மிக்க நாளிதழ் ஒன்று நடுப்பக்க கட்டுரை போடுகிறது. அதில் அவர்களது நடுக்கம்தான் அதிகமாகத் தெரிகிறது.

தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவிக்கும் மகத்தான அறிவிப்பை சட்டமன்றத்தில் வெளியிட்டபோதே முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒன்றைத் தெளிவாகக் குறிப்பிட்டார். "நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத அவரால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் முதல் முதலாகத் திருத்தம் செய்யப்பட்டது. சட்டமன்றத்துக்குள் வர ஆசைப்படாத அவரது சிந்தனை கொண்ட சட்டங்கள் ஏராளமாக இந்த மாமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனது சிந்தனையை அடுத்தவர் மூலமாகச் செய்யவைக்கும் அபூர்வமான ஆற்றல் அவருக்குத்தான் இருந்தது’’ என்று குறிப்பிட்டார்கள். இந்த சொற்களுக்குள் 100 ஆண்டு வரலாறு அடங்கி இருக்கிறது.

ஜாதியால் பிரிவு இல்லை, ஏற்றத்தாழ்வு இல்லை! ஆண் மேலானவன், பெண் அடிமை என்ற பால் பேதம் இல்லை! - இந்த இரண்டும்தான் பெரியார் கொள்கைக்கு அடிப்படை. சமூகநீதித் தத்துவம் என்பது இதில்தான் அடங்கி இருக்கிறது. எந்த ஜாதியை இழிவுபடுத்தும் அளவுகோலாக வைத்து காலம் காலமாக அடிமைப்படுத்தினார்களோ, அந்த ஜாதியையே அளவுகோலாக வைத்து கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் உரிய இடங்களைப் பெறுவதுதான் சமூகநீதித் தத்துவத்தின் அடிப்படை. இந்த தத்துவத்தை சட்டமாக்கியது நீதிக்கட்சி ஆட்சி. அப்போது காங்கிரசு கட்சியில் இருந்த பெரியார், இதனைக் காங்கிரசு கட்சியின் கொள்கையாக ஏற்றுக் கொள்ள வைப்பதற்கு பெருமுயற்சி எடுக்கிறார். 1920 முதல் 1925 வரை திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாநாடுகளில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு செல்கிறார். அது உயர் ஜாதியினரின் சதியால் தோற்கடிக்கப்படுகிறது.

எனவே, 1925 காஞ்சிபுரம் மாநாட்டில் இருந்து காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் அமைக்கிறார். கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் அவர்களது இல்லத்தில் நடந்த தமிழர் நிர்வாகக் கூட்டமே இதற்கான தொடக்கம். பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்பதை தேசமெங்கும் பரப்புரை செய்வதும், தமிழ்நாட்டில் சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் அமையப் பாடுபடுவதும் இவர்களது இலக்காக அறிவிக்கப்பட்டது. அதனாலேயே சுயமரியாதை இயக்கத்தை நடத்திக்கொண்டே சமூகநீதி ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியை ஆதரித்தார். இட ஒதுக்கீடு கொள்கையை ஆட்சியாளர்கள் கைவிடாமல் பார்த்துக் கொண்டார். 1937 ஆம் ஆண்டு மரியாதைக்குரிய எம்.சி.ராஜா அவர்கள் அமைச்சராக ஆன போது, பெரியாரின் முயற்சியால்தான் நான் அமைச்சர் ஆனேன் என்றும், ஒரு ஆதிதிராவிடர் அமைச்சராக ஆவதற்கு பெரியார்தான் ஆறேழு ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் என்றும் ஆம்பூர் மாநாட்டில் பேசினார். பெரியாரின் சாதனை என்பது இதுதான்.

நீதிக்கட்சியை ஆதரிக்கக் காரணம் சமூகநீதியே. அடுத்துவந்த இராஜாஜி ஆட்சியை எதிர்க்கக் காரணமும் அவரது ஆட்சியின் சமூக அநீதியே. சுதந்திரத்துக்கு பின் அமைந்த ஓமந்தூரார் ஆட்சியை ஆதரித்ததும் அதனால் தான். சமூகநீதி - இந்து சமய அறநிலையத்துறை சீர்திருத்தம் ஆகிய இரண்டுக்காகவும்தான் ஓமந்தூரார் ஆட்சியே கவிழ்க்கப்பட்டது. ‘நீங்கள் உட்கார்ந்திருக்க வேண்டிய இடத்தில் நான் உட்கார்ந்து உள்ளேன்’ என்று பெரியாரிடமே சொன்னவர் ஓமந்தூரார். குலக்கல்வி இராஜாஜியை வீழ்த்தியதும் சமூகநீதிப் பெரியாரே. அவருக்கு அடுத்ததாக யாரைக்கொண்டு வரலாம் என்று சேலம் வரதராஜுலு வீட்டில் நடந்த ரகசியக் கூட்டத்தில் ‘யாரையோ கொண்டு வருவதற்கு நீங்களே இருங்கள்’ என்று காமராசரிடம் முதலில் சொன்னதும் பெரியாரே. ‘நீங்கள் நிர்வாகத்தைப் பாருங்கள், நான் உங்கள் எதிரிகளைக் கவனித்துக் கொள்கிறேன்’ என்று தைரியம் ஊட்டியதும் பெரியாரே. காமராசரை ஆதரித்த பெரியார், பக்தவத்சலம் ஆட்சியை ஆதரிக்கவில்லை. அடுத்து பேரறிஞர் அண்ணா ஆட்சி அமைந்தது.

‘உங்கள் கொள்கைகளை சட்டபூர்வமாக ஆக்கவே நான் ஆட்சிக்கு வந்துள்ளேன்’ என்று முதல்வர் அண்ணா அறிவித்தார். அடுத்து முதல்வரான கலைஞர் அவர்களும் அதையே சொன்னார். எனவே, பெரியார், ஆட்சிக்கு வரவில்லை. அவர் வந்து செய்ய வேண்டியதை செய்ய வைத்த தலைவர்! 1950 அரசியலமைப்புச் சட்டத்தில் நடந்த முதல் திருத்தம் பெரியாரின், அண்ணாவின் போராட்டத்தால் வந்தவையே! ஓமந்தூரார் காலத்து வகுப்புரிமை ஆணையைச் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது. அதையே உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்றத்துக்கு எதிராக, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக, வட நாட்டவர்க்கு எதிராக போராடினார் பெரியார். தமிழக மாணவர் சமுதாயம் முழுமையாக வீதிக்கு வந்தது. இந்தக் கொந்தளிப்பை பிரதமர் நேருவிடம் சொன்னார் காமராசர். சென்னையில் என்ன நடக்கிறது என்று அன்றைய உள்துறை அமைச்சர் படேல், தனது நண்பரான ஆற்காடு ஏ.இராமசாமி (ஆற்காடு ரெட்டையர்களில் ஒருவர்) அவர்களை பெரியாரிடம் அனுப்பி வைத்து விசாரித்தார். ‘நான் டெல்லி சென்று இந்த விவகாரத்தை கவனிக்கிறேன்’ என்று சொல்லிப் போன படேல், பிரதமரிடம் சொன்னார்.

சட்ட அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கருக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும். இந்த அடிப்படையில்தான் முதல் திருத்தத்தை பிரதமர் நேரு கொண்டு வந்தார். இடஒதுக்கீடு வழங்குவதை சட்டம் தடுக்காது என்பது அந்த திருத்தத்தின் உள்ளடக்கம். அப்போது பிரதமர் நேரு சொன்னார்:''.. '.. that this particular matter, in this particular shape arose because of certain happenings in madras...'' (29.5.1951) என்று பேசினார். பிரதமர் பேச்சில் பெரியார் தெரியவில்லையா? சிறியர்க்கு இதுதெரியாது!

banner

Related Stories

Related Stories