முரசொலி தலையங்கம்

இந்திக்காரர்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவை ஆளலாம் என்ற நினைப்பு எந்நேரமும் எடுபடாது - முரசொலி தாக்கு!

இந்தியாவின் உள்துறையை ஒட்டுமொத்தமாகக் கவனிக்கும் மரியாதைக்குரிய அமைச்சர், இந்தியா முழுமைக்குமாகத்தான் பேச வேண்டுமே தவிர, இந்திக்கு மட்டுமே ஆகப் பேசக்கூடாது என முரசொலி சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திக்காரர்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவை ஆளலாம் என்ற நினைப்பு எந்நேரமும் எடுபடாது - முரசொலி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க. ஆட்சியில் மக்கள் எதிர்பார்ப்பது இந்தியாவை வளர்ப்பதுதானே தவிர இந்தியை வளர்ப்பது அல்ல. இதனை ஒன்றிய ஆட்சியாளர்கள் உணர்ந்தாக வேண்டும். இந்தியாவை வளர்ப்பதற்கான எந்தத் திட்டமிடுதலும் இல்லாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்திக்கு சாமரம் வீசிக் கொண்டு இருப்பது அவர்களது சுயநலம்தானே தவிர வேறல்ல!

இந்தி பேசும் மாநிலத்து மக்களை, இந்தியை வாழ்த்திப் பேசுவதன் மூலமாக தங்களது பக்கத்தில் தக்க வைப்பதற்கான அரசியல் சூழ்ச்சியாக ஒரு பக்கமும் - இந்தி மொழியை மேலாதிக்கம் செலுத்தும் சக்தியாக மாற்றுவது இன்னொரு பக்கமும்- மாற்று மொழி பேசும் மக்களை இரண்டாம் தர மக்களாக நடத்துவது மற்றொரு பக்கமுமாக - பா.ஜ.க. நடந்து கொள்கிறது. அதனைத்தான் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சமீபத்திய பேச்சு காட்டுகிறது.

இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும் இந்தி மொழியை இந்தியாவின் அலுவல் மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14 ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். இந்தி தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசும்போது அவரது இந்திப் பாசம் பொங்கி வழிகிறது. அதற்கு அவர் சொன்ன உதாரணத்தில்தான் சிந்தனை தளர்ச்சி தரை தட்டி நிற்கிறது.

"இந்தி தினமான இன்று நாட்டு மக்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியையும் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து படிப்படியாகப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்மொழியுடன் அலுவல் மொழியையும் சேர்த்து பயன்படுத்துவதில்தான் இந்தியாவின் முன்னேற்றம் அடங்கியுள்ளது. நாம் அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டபோது 1949 செப்டம்பர் 14-ம் தேதி அன்று தேவநாகிரி எழுத்து வடிவம் கொண்ட இந்தியை இந்த நாட்டின் அலுவல் மொழியாக இருக்கும் என்ற முடிவை நாம் ஏற்றுக்கொண்டோம். இந்தியுடன், மாநில மொழிகளையும் ஏற்க முடிவு செய்தோம். ‘ஆத்ம நிர்பர்' என்பது நாட்டிற்குள் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, நாம் மொழிகளுடன் கூட ‘ஆத்ம நிர்பர்' ஆக இருக்க வேண்டும். நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது. பிறகு எது நம்மை சங்கடப்படுத்துகிறது. இந்தியில் பேசுவதால் கவலையாக இருந்த நாட்கள் போய்விட்டன. இனி அந்த சூழல் இல்லை." என்று உள்துறை அமைச்சர் பேசி இருக்கிறார்.

இந்திக்காரர்களின் வாக்குகளை வாங்கி இந்தியாவை ஆளலாம் என்ற நினைப்பு எந்நேரமும் எடுபடாது - முரசொலி தாக்கு!

இந்தியாவின் உள்துறையை ஒட்டுமொத்தமாகக் கவனிக்கும் மரியாதைக்குரிய அமைச்சர், இந்தியா முழுமைக்குமாகத்தான் பேச வேண்டுமே தவிர, இந்திக்கு மட்டுமே ஆகப் பேசக்கூடாது. ‘நமது பிரதமர் சர்வதேச அளவில் கூட இந்தியில் பேச முடிகிறது' என்பதில் என்ன பெருமை இருக்கிறது? ‘நமது பிரதமரைச் சந்திக்கும் உலகத் தலைவர்களில் பலரும் அவரிடம் இந்தியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள், அந்தளவுக்கு இந்தி உலக மொழியாக ஆகிவிட்டது' என்று அமித்ஷா சொல்லி இருந்தால் அதில் பெருமை இருக்கிறது. மோடி, இந்தியில் பேசுவதில் என்ன பெருமை? யாருக்குப் பெருமை? ‘ஆங்கிலத்தைப் போல இந்தியும் உலகளாவிய மொழியாக ஆகிவிட்டது' என்று அமித்ஷா சொன்னால் அப்படியா என்று தேடிப் பார்க்கலாம்? அப்படி மாறவில்லையே! அப்படி மாற வேண்டும் என்று தனிப்பட்ட அமித்ஷா நினைத்தால் அது அவரது விருப்பம்.

ஆனால் ஒட்டுமொத்த தேசத்துக்குமான அமைச்சர், இந்தியின் அமைச்சராக ஆனதுதான் வேதனைக்குரியது. ‘நம்முடைய மொழி கூட ஆத்ம நிர்பர் ஆக இருக்க வேண்டும்' என்கிறார் அமைச்சர். இந்தி என்பது இமயம் முதல் குமரி வரை ஆத்ம நிர்பரா? அதனை அவரால் வங்காளிகளிடமோ, கன்னடர்களிடமோ, கேரளத்தவர் மத்தியிலோ சொல்ல முடியுமா? இந்தியாவில் எத்தனை மொழிகள் இருக்கிறது? எத்தனை இனங்கள் இருக்கிறது? எத்தனை மதங்கள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் இருக்கிறது?

ஒற்றை மதம் என்ற அரசியல் சூழ்ச்சியைப் போல ஒற்றை மொழி என்ற சூழ்ச்சியை பா.ஜ.க. கையில் எடுக்கிறது. மீண்டும் மீண்டும் ஒரே தவறைச் செய்து, அதன் மூலமாக மீண்டும் மீண்டும் அந்நியப்பட்டு போகப் போகிறார்கள். அதுதான் நடக்கப் போகிறது. இந்திக்காரர்கள் வாக்குகளை வாங்கினால்போதும், இந்தியாவை ஆளலாம் என்பது மாதிரியான நினைப்புகள், எல்லாத் தேர்தல்களிலும் ஒரே மாதிரியாக் கை கொடுக்காது. கொரோனா காலத்தில் பல நூறு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் இல்லாமல், சப்பாத்தி கிடைக்காமல் குடும்பம் குடும்பமாக நாடோடிகளை விடக் கேவலமாக 2020 ஆம் ஆண்டிலும் மனிதர்கள் நடந்து போன காட்சியின் போது இவர்களது இந்திப் பாசம் எங்கே போனது.

அந்த ‘ஆத்ம நிர்பர்'களின் குழந்தைகள் ரயில் தண்டவாளங்களில் 48 மணிநேரம் நடந்து போனபோது இந்தி பெருமை பேசும் அரசாங்கம் என்ன செய்து கொண்டு இருந்தது? யாரும் வெளியில் வரவில்லை. அவர்களை வந்து பார்க்கவில்லை. அவர்களுக்கு பேருந்து வசதி செய்து தரவில்லை. உத்தரப் பிரதேசத்துக்கு தேர்தல் வரப்போகிறது என்றதும் இந்தி ஆத்ம நிர்பர் ஆகிவிடுமா? இந்தியை நுழைக்கும் போது, அதற்குள் ‘மாநில மொழிகளும்' என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வார்கள். அதாவது தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நடிப்பார்கள்.

ஆங்கிலத்தை அகற்றுவது - அந்த இடத்தில் இந்தியைக் கொண்டு வந்து வைப்பது இதுதான் அவர்களது நோக்கம். அதனை நேரடியாகச் சொல்ல கூச்சப்பட்டு தாய்மொழி என்ற சொல்லையும் சேர்த்துக் கொள்வார்கள். இந்தச் சூழ்ச்சியை தமிழ்நாடு அறியாதது அல்ல. தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களிடம், அன்றைய முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் சொன்னதாகச் சொல்வார்கள்: "சட்டமன்றத்தில் நாங்கள் ஆங்கிலத்துக்கு எதிராக பேசியபோது முதலமைச்சர் காமராசர் அவர்கள் எங்களிடம் காதில் ரகசியம் போலச் சொன்னார். ‘ஆங்கிலத்தை எதிர்த்தீங்கன்னா அந்த இடத்துல இந்தி வந்து குந்திக்கும்ணோன்' என்று சொன்னார். எவ்வளவு பெரிய அரசியல் பாடத்தை அவ்வளவு எளிமையாகக் காமராசர் அவர்கள் சொன்னார்கள்"! எனவே அமித்ஷாக்கள் தாய்மொழி, ஆத்ம நிர்பர் என்று எதைப் பேசினாலும் அதன் உள் நோக்கம் நாம் அறிவோம். உறுதியாக எதிர்ப்போம்!

banner

Related Stories

Related Stories