முரசொலி தலையங்கம்

“இது தந்தை பெரியாரின் கனவு.. ஐம்பதாண்டு வரலாற்றை கலைஞரின் ஒற்றைச் சிலை சொல்லும்” : முரசொலி புகழாரம் !

முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘கலைஞர் சிலையை யார் கை வைக்கிறார் என்று பார்க்கிறேன்' என்றார் பெரியார்.

“இது தந்தை பெரியாரின் கனவு.. ஐம்பதாண்டு வரலாற்றை கலைஞரின் ஒற்றைச் சிலை சொல்லும்” : முரசொலி புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (03-09-2021) தலையங்கம் வருமாறு:

சென்னை அண்ணா சாலையில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலை வைக்கப்படும்” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு அனைவரது உள்ளத்திலும் ஆயிரம் இன்ப அலைகளை உருவாக்கி உள்ளது. எழப்போகும் சிலை என்பது, ஆயிரம் சிலைகளுக்கு சமமானது!

அண்ணா சாலையில் கலைஞருக்குச் சிலை வைக்கவேண்டும் என்பது தந்தை பெரியாரின் கனவு. 1968 ஆம் ஆண்டு கலைஞருக்குச் சிலை வைக்க வேண்டும் என்று முதலில் சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்தான். அப்போது அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கிறார்கள். அவர் தலைமையின் கீழ் அமைச்சராக இருக்கிறார் கலைஞர் அவர்கள்.

சிலையைத் திறந்து வைக்க அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனக்குச் சிலை அமைக்க வேண்டாம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதற்குப்பிறகு கலைஞருக்குச் சிலை வைத்தே ஆகவேண்டும் என்று ‘விடுதலை' நாளிதழில் 1968-ஆம் ஆண்டு பெரியார் அவர்களே தலையங்கம் எழுதினார்.

“இது தந்தை பெரியாரின் கனவு.. ஐம்பதாண்டு வரலாற்றை கலைஞரின் ஒற்றைச் சிலை சொல்லும்” : முரசொலி புகழாரம் !

‘சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்கிறேன்' என்றும் பெரியார் அவர்கள் சொன்னார்கள். “கலைஞர் அறிவில் சிறந்தவர். நிர்வாகத்தில் சிறந்தவர், பொதுத் தொண்டுக்காக தியாகம் செய்வதில் சிறந்தவர். அவரது சிலையை ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் அமைத்தே தீர வேண்டும். இதில் அபிப்பிராயம் வெளியிட கலைஞருக்கே உரிமை இல்லை. யாருக்காவது சங்கடம் இருக்குமானால் சிலை அமைக்கும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு எப்படியும் நிறைவேற்றியே தீருவேன்” என்று பெரியார் அவர்கள் அறிவித்தார்கள். முதல்வர் அண்ணா அவர்களின் உடல்நலக்குறைவு ஆகியவற்றால் அந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

1971ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் முதல்வர் கலைஞருக்கான சிலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கினார். சிலை அமைக்கும் குழுவின் புரவலராக பெரியார் இருந்தார். தலைவராக தவத்திரு குன்றக்குடி அடிகளார் இருந்தார். துணைத் தலைவராக இன்றைய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருந்தார்கள். பெரியாரின் மறைவுக்குப் பிறகு, அன்னை மணியம்மையார் முயற்சியால் கலைஞருக்கு 21.9.1975 அன்று எல்.ஐ.சி அருகில் சிலை திறந்து வைக்கப்பட்டது. மற்ற சிலைகளை விட இந்த சிலைக்கு ஒரு சிறப்பு உண்டு. நெஞ்சில் சால்வை புரள, அதன் ஒரு முனையைக் கை மேல் போட்டுக் கொண்டு - கை உயர்த்தி கலைஞர் கர்ஜிக்கும் கோலம் கொண்டது இந்தச் சிலை. என்றும் மேடையில் அவர் குரல் ஒலித்துக் கொண்டு இருப்பது போலவே அது இருக்கும். 24.12.1987 அன்று எம்.ஜி.ஆர் மரணத்தின் போது நடந்த வன்முறையில் இந்த சிலை தாக்கப்பட்டது. ஈட்டியால் குத்தி உடைக்கப்பட்டது.

அப்போதும் கலைஞரிடம் கோபம் பிறக்கவில்லை. கவிதை தான் பிறந்தது.

“உடன்பிறப்பே! செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்தச் சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை நெஞ்சில்தானே குத்துகிறான். அதனால் நிம்மதி எனக்கு !" - என்று எழுதினார் கலைஞர்!

“இது தந்தை பெரியாரின் கனவு.. ஐம்பதாண்டு வரலாற்றை கலைஞரின் ஒற்றைச் சிலை சொல்லும்” : முரசொலி புகழாரம் !

அவர் நிம்மதி அடைந்திருந்தாலும் தமிழர் தம் நெஞ்சில் அந்த ஈட்டி பாய்ச்சல் வலி இருந்து கொண்டே இருந்தது. இந்தநிலையில் தான் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.ஜி.நீலமேகம் அவர்கள் சட்டமன்றத்தில் தனது கோரிக்கையை வைத்தார். சென்னை அண்ணா சாலையில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், கலைஞர் சிலை அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். முதன்முதலாக சிலை அமைக்க தந்தை பெரியார் எத்தகைய முயற்சியை எடுத்தார்களோ அதேபோன்ற முயற்சியை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எடுத்ததையும் முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

“இரண்டு நாட்களுக்கு முன் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் என்னைச் சந்தித்து அவரும் என்னிடம் இந்தக் கோரிக்கையை எடுத்து வைத்திருக்கிறார். இது பெரியார் நினைத்தது, பெரியார் எங்களுக்குக் கட்டளையிட்டு, நாங்கள் அதை வைத்தது. எனவே மீண்டும் அந்த இடத்திலே அதை வைக்க வேண்டும் என்று அவரும் என்னிடத்திலே வற்புறுத்தியிருக்கிறார். அதில் உள்ள சட்டச் சிக்கல்களை நான் சொன்னேன். ‘நாங்கள் ஏற்கனவே அனுமதி வாங்கியதுதான். எனவே புதிதாக அனுமதி வாங்கத் தேவையில்லை' என்று அவர் சொன்னார். அண்ணா சாலையில் பெரியார் சிலையும் அண்ணா சிலையும் எம்.ஜி.ஆர்.சிலையும் இருக்கிறது, கலைஞர் சிலையும் ஏற்கனவே இருந்தது. அதைத்தான் வலியுறுத்தி இருக்கிறார். இது குறித்து சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்வேன்.

நிச்சயமாக அண்ணா சாலையில் கலைஞர் சிலை அமைக்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள். அப்படி அமைக்கப்படும் சிலை எத்தனையோ கருத்துக்களைச் சொல்வதாக அமையும். இது தந்தை பெரியாரின் கனவு. கலைஞரின் திறமையைப் போற்றும் அடையாளமாக அமைக்க நினைத்த சிலை. அண்ணா அவர்கள் இருந்து திறந்து வைத்திருக்க வேண்டிய சிலை இது. அந்த சிலை அமைக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, ‘கலைஞர் சிலையை யார் கை வைக்கிறார் என்று பார்க்கிறேன்' என்றார் பெரியார்.

பாவேந்தரால் ‘அன்னை' என்று போற்றப்பட்ட மணியம்மையாரால் திறந்து வைக்கப்பட்ட சிலை. வன்முறையாளர்களால் அந்த சிலை சேதம் செய்யப்பட்டது. சிலையை வீழ்த்தினாலும் தலைவர் கலைஞர் மூன்று முறை ஆட்சியில் அமர்ந்தார். ஆட்சி நடத்தினார். எத்தனையோ பேருக்கு சிலை வைத்தார். மணிமண்டபம் எழுப்பினார். ஆனால், அவர் சிலை, அவரது கண்ணுக்கு முன்னால் சிதைக்கப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்ய ஆறடி இடம் கேட்டு நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த ஐம்பதாண்டு வரலாற்றை இந்த ஒற்றைச் சிலை சொல்லுமே

banner

Related Stories

Related Stories